தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதான அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொது எதிரணித் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் நட்பு ரீதியாக நடத்திவரும் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக அவரினால் முன்வைக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த யோசனை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நிராகரிக் கப்பட்டதாக தெரிய வந்துள் ளது. ஆரம்பத்தில் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தனது யோசனையை ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
அவரோ அதனை சந்திரிகா அம்மையாரிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் சந்திரிகா அம்மையாரோ மைத்திரிபால சிறிசேவிடம் தெரிவித்து பதில் பெறுமாறு கோரியுள்ளார். மைத்திரிபாலவிடம் இவர் தனது யோசனையை முன்வைத்தபோது அவரோ அதனை ஏறெடுத்தும் பார்க்காது வையுங்கள் தேர்தலின் பின்னர் பார்க்கலாம் எனத் தெரிவித்துவிட்டாராம்.
இந்த விடயத்தை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வெளியே தெரியவிடாது மூடிமறைக்க முனைந்தபோதும் அங்கே கூட இருந்த சில தமிழ் உறுப்பினர்கள் மூலமாக விடயம் வெளியே கசிந்துவிட்டது. இதனால் அப்பாராளுமன்ற உறுப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதுடன் இவ்விடயம் ஊடகங்களுக்கு கசிந்துவிடாமலும் பார்த்துக் கொண்டாராம்.
எனினும் இவ்விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களின் செவிகளுக்கு எட்ட அவர்கள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் தன்னிச்சையான செய்கை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது தனிப்பட்ட நட்பை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தன்னிச்சையாக தங்கள் எவருக்கும் தெரியாத கட்சி விடயத்திற்குப் பயன்படுத்தியமை குறித்து தமிழரசுக் கட்சியின் தலைமையும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரி ஆட்சி அமைத்தால் அதில் தனக்கு அமைச்சர் அதிலும் பொருளாதார அமைச்சர் பதவியை எதிர்பார்த்தே இவ்வாறு தனித்துப் பேசியதாகவும் தெரிய வருகிறது. ஏதோவொரு அமைச்சர் பதவி தரலாம் என அவருக்கு எதிரணித் தரப்பிலிருந்து உறுதி வழங்கப்பட்டிருந்தாலும் இனப்பிரச்சினை தீர்வு குறித்துக் கதைக்கக் கூடாது எனவும் கூறப்பட்டதாக நம்பகரமாக அறியமுடிந்துள்ளது.