12/21/2014

| |

இக்கரைக்கு அக்கரை பச்சை

னாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எத்தனை தடவைகள் போட்டியிட்டாலும் அவரது வெற்றி உறுதியானதொரு விடயம் என்பது நன்கு தெரிந்திருந்தும் அவருடன் கூட இருந்த சிலர் தாம் கட்சி மாறியது மட்டுமல்லாது தம்முடன் சேர்த்து ஒரு சிலரையும் அழைத்துச் சென்றிருப்பது அவர்களது அறியாமையை மிகத் தெளிவாக உணர்த்தியி ருக்கிறது. அரசியல் எதிர்காலமில்லாது தாம் அழிவது மட்டுமல்லாது தம்முடன் இன்னும் ஐவர் சேர்ந்து அழியட்டும் என்பதாகவே விலகிச் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் மைத்திரிபாலவின் எண்ணமாக இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் பழிவாங்கும் காய்நகர்த்தலுக்கு மக்கள் பிரதிநிதிகள் சிலர் மதி மயங்கிச் சென்றமை மிகவும் வேதனை அளிக்கிறது. இவர்களுக்கு சந்திரிகா அம்மையார் குழுவினரால் கூறப்பட்ட ஆசை வார்த்தைகள் எதுவுமே நிறைவேறப் போவதில்லை. மாறாக இவர்கள் மக்களிடையே தமக்கிருந்த கெளரவத்தை இழந்து நிற்கும் நிலை இப்பொழுதே ஏற்பட்டுவிட்டது. சூழ்ச்சியினால் உந்தப்பட்ட தாம் தம்மீது பெரும் மதிப்பு வைத்திருந்த தலைவரது நம்பிக்கையை தகர்த்துவிட்டு வந்தமையை இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதாக நிச்சயம் ஒருநாள் உணர்வார்கள்.
இந்த கட்சி மாறிய சிலர் தமக்கு அது கிடைக்கும், இது கிடைக்கும் என நம்பியிருந்தால் அது வெறும் பகற் கனவாகவே அமையும். எதிரணியில் பல கூட்டுக் கட்சிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தலைமைகள் பல உள்ளன. அவற்றுள் பிரதான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே விளங்குகிறது. எனினும் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள சந்திரிகா அம்மையார் தயாரில்லை. காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தான் என இன்னமும் மைத்திரிபால சிறிசேன கூறி வருகிறார். இது நகைப்புக்கிடமானதொன்று. அதனைவிடவும் சந்திரிகா அம்மையார் தான்தான் சுதந்திரக் கட்சியின் தலைவி என்று தனது ஒரு சிறு ஆதரவாளர் குழுவிற்கு கூறாமல் கூறுவது நகைப்புக்குரியது.
இதேவேளை கூட்டுக் கட்சிகளுள் பிரதான கட்சியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி பல கூறுகளாகப் பிரிந்து செயற்படுகிறது. அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தோற் கடிப்பதில் குறியாக உள்ளார். இதே மன நிலையில்தான் அக்கட்சியின் மற்றொரு தலைவரான சஜித் பிரேமதாசவும் உள்ளார். இவர்கள் சந்திரிகா அம்மையாருக்கும், மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஒரு முகத்தையும் தமது ஆதரவாளர்களுக்கு பிறிதொரு முகத்தையும் காட்டி வருகின்றனர். இதனால் சந்திரிகா, ரணில், மைத்திரி கூட்டணிக்குள் பாரிய வெளிக்காட்டா முரண் பாடுகள் நிலவுவதை அவதானிக்க முடிகிறது.
எதிரணியின் எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் ரணில் விக்கிரமசிங்க உண் மையாக இதயசுத்தியுடன் உரையாற்றவில்லை. ஏதோ கூட்டு வைத்த மைக்காக பேசுவது போல வேண்டா வெறுப்பாகவே பேசி வருகிறார். அதேபோலவே சஜித் பிரேமதாசவும் இதுவரை தான் கலந்து கொண்ட எந்த வொரு கூட்டத்திலும் மைத்திரிபாலவை ஆதரியுங்கள் என வெளிப்ப டையாகக் கேட்கவில்லை. அக்கட்சியின் உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க உட்பட உயர்மட்டத் தலைவர்களிடையேயும் ஆரம்பத்திலிருந்த உற்சாகம் சந்திரிகா, மைத்திரியின் செயற்பாடுகளால் இப்போது இல்லை. இதனை அக்கட்சியின் ஆதரவாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இது தவிர சரத் பொன்சேகாவும் மைத்திரிபால சிறிசேனவை உதட்டள விலேயே ஆதரித்து வருகிறார். இத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வென்றுவிட்டால் தான் தோல்வியுற்ற தலைவராகி விட்டமை உறுதியாகிவிடும் என்பது சரத் பொன்சேகாவின் கவலையாக உள்ளது. அதனால் அவரது உள் மனதில் மைத்திரிபால தோற்க வேண்டும் என்பதே உள்ளது. தோல்விகளைச் சந்தித்த தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் மனதில் இருக்கும் அதே எண்ணமே சரத் பொன்சேகாவினது மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த உண்மையை அக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளனர். அதனாலேயே அவர்களது தேர்தல்கால பிரசார செயற் பாடுகள் மந்தமாக உள்ளது.
இவற்றைவிடவும் தமது கட்சியில் இணையாது சுதந்திரக் கட்சியின் பெயருடன் தமது ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாம் இடமாகக் கருதிச் செயற்படும் மைத்திரிபால மற்றும் அவருடன் கூட வந்தவர்களின் செயற்பாடுகளால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் இவர்கள் தமது கட்சியின் தலைமை மீதும் தமது வெறுப்பைக் காட்டியுள்ளனர். தாம் எதிர்பார்த்தது எதுவுமே நடைபெறவில்லை என்பதால் ஐ.தே.க தலைமையும் தனது ஆதரவாளர்களது அதிருப்தியைக் கண்டும் காணாதது போலவே இருந்து வருகிறது. ஆதரவாளர்களது கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலையில் தலைமை ஓடி ஒளிக்கிறது.
அத்துடன் குறைந்தது 35 பேருடன் வருகிறேன் எனக் கூறிய மைத்திரிபால சிறிசேனவும், அதனை உறுதிப்படுத்திய சந்திரிகா அம்மையாரும் வெறும் ஆறுபேருடன் மட்டுமே வந்தமை ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் வெறுப்படைய வைத்துள்ளது. பொய் கூறித் தம்மை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் மீது பழியும் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை எவற்றையும் காதில் வாங்கிக் கொள்ளாது சுதந்திரக் கட்சியிலுள்ள சிலரும், ஐக்கிய தேசியக் கட்சிக்காரரும் வாக்களித்தால் தாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதான கற்பனை கலந்த நினைப்பில் மைத்திரிபாலவும், சந்திரிகா அம்மையாரும் உள்ளனர்.
சுதந்திரக் கட்சியிலிருந்து சென்றவர்கள் தவிர இவர்களை நம்பிச் சென்ற மேலும் சில வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதாக இப்போது அங்கு சென்று முழிக்கின்றனர். ஜனாதிபதியின் அருமையை இப்போது உணர்கின்றனர். ஆனாலும் அங்கே சிலவற்றுக்கு அடிமைப்பட்டுவிட்டதால் அசைய முடியாது உள்ளனர். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், இராஜதுரை, இராதாகிருஷ்ணன், உனைஸ் பாரூக் ஆகியோர் தமது இன்றைய நிலை குறித்து கவலைப்பட்டுள்ளனர். தாம் எடுத்த முடிவு தவறானது என்பதனால் தமக்கு வாக்களித்த மக்களிடம் இவர்கள் மன்னிப்புக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நிச்சயம் வெற்றி உறுதி என்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வெற்றி இத்தகைய விடயங்களால் மேலும் இலகுவானதாக் கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தேர்தல் பிரசார அணுகுமுறைகள் எதிரணியினரைக் கதி கலங்க வைத்துள்ளது. ஜனாதிபதி செல்லும் இடங்களில் கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து எதிரணியினர் செய்வதறியாது உள்ளனர். பாதையில் நடந்து சென்று பாமர மக்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதியின் துணிச்சலான செயற்பாடு கண்டு எதிரணியினர் திகைத்து நிற்கின்றனர். எத்தனை குறைகளை பொய்யாகக் கூறினாலும் அதற்குப் பதிலளிக்கும் ஜனாதிபதியின் வல்லமை மிக்க தேர்தல் மேடைப் பேச்சுக்களைக் கேட்டு வாயடைத்து நிற்கின்றனர்.
எதற்காக இத்தகைய ஒரு தலைவரை விட்டுவிட்டு சந்திரிகா அம்மையாரின் சொற்கேட்டு வெளியேறி வந்து தனித்து நிற்கிறோம் எனும் நிலையில் மைத்திரிபால சிறிசேனவும், ராஜித சேனரத்னவும் உள்ளனர். சந்திரிகா அம்மையாரும், மங்கள சமரவீரவும் காட்டிய ஆசை வார்த்தைகள் இக் கரைக்கு அக்கரை பச்சை எனபதை உணர்த்திவிட்டதை அவர்கள் உணருகின்றனர். இவர்கள் தாம் செய்த துரோகத்தையும் எதிர்வரும் எட்டாம் திகதி நிச்சயம் உணர்ந்து கொள்வர். அன்று இவர்கள் தமது தவறை உணர்ந்து திரும்பி வரும்போது நிச்சயம் இவர்களை ஜனாதிபதி மன்னித்து ஏற்றுக் கொள்வார்.