ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவளிக்க மத்திய மாகாண சபையின் உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான சதாசிவம் தீர்மானித்துள்ளார்.
கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சதாசிவம் குறிப்பிட்டார்.
பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் பார்த்துவிட்டு தீர்மானம் எடுக்கவிருந்தோம். அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களுக்கு புதிய நிவாரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. அது மட்டுமன்றி சிறுபான்மை இனத்தவர்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில் மலையக மக்களுக்காக பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்ட ஜனாதிபதியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதற்குத் தாம் தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடு. நிறைவேற்று அதிகாரத்தை வைத்திருப் பதன் மூலமே நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். சுதந்திரம் அடைந்த பின்னர் 1978ஆம் ஆண்டின் பின்னரே நாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. நிறைவேற்று அதிகாரத்தில் உள்ள சில அதிகாரங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெருந்தோட்டப் பகுதியில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார். அங்குள்ள மக்களுக்குத் தனியான வீடுகளை அமைத்துக்கொடுக்கும் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.