அரசுக்கு எதிராக விஷமப் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் ஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்தை வன்மையாகக் கண்டிப்பதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன தெரிவித்தார்.
நேற்று (23) ஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் என்ற இணையத்தளத்தில் என்னைப்பற்றி பொய்யான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நான் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இணையத்தளத்தில் செய்தி பிரசுரித்துள்ளனர்.
இது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களப் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகின்றேன்.
பணத்திற்காக நான் ஒரு போதும் சோரம் போகமாட்டேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஒருபோதும் நான் விலகிச் செல்லமாட்டேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை தாங்க முடியாத சில தீய சக்திகள் இவ்வாறான செய்திகளைப் பிரசுரிக்கின்றனர்.
இது விடயமாக நான் ஜே.வி.பி. நியூஸ் டொட்கொம் இணையத்தளத்திற் கெதிராக நூறு கோடி ரூபா மான நஷ்ட ஈடு வழக்குத் தாக்கல் செய்துள்ள தோடு, நேற்று அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடும் செய்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன மேலும் தெரிவித்தார்.