12/22/2014

| |

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு

இலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் போது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன், அக்கட்சியின் சார்பில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அமீர் அலி சகிதம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன , எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமது கட்சியை சேர்ந்த 7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தமது புதிய அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக ரிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான துணையமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தனது ஆதரவை வழங்கி வருகின்றார்.
அரசாங்க தரப்பினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பலனாகவே, இம்மாத முற்பகுதியில் அரசாங்கக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம். அஸ்வர் தனது பதவியை இராஜினமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கு எஸ். எச். அமீர் அலி நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.