12/23/2014

| |

இன, மத அரசியல் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்! விசாரணையற்று தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய குழுஅமைப்பேன் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

உலகை வெல்லும் வழி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு 

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், இதுவரையில் வழக்குத் தாக்கல் செய்யப்படாத வடக்கின் அனைத்து இளைஞர்கள், யுவதிகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வது அல்லது வழக்குத் தாக்கல் செய்யாமை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து தாமதமின்றி நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் முழுமையான அதிகாரங்களுடன் கூடிய குழு ஒன்றை நியமிப்பேன்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் நடைபெறாத வகையில் வரலாற்றில் முதன் முறையாக மனிதாபிமான நடவடிக்கைகளின் போது மக்கள் கைவிட்டுச் சென்ற வாகனங்களையும், மறைத்து வைக்கப்பட்ட தங்க நகைகளையும் இராணுவத்தினரிடம் உறுதிப்படுத்திய பின்னர் மீள மக்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகளை இவ்வருடம் செய்து முடிப்பேன்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவிய காலகட்டத்தில் இராணுவத்தினரால் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு சொந்தமில்லாத காணிகள் மற்றும் கட்டிடங்களை மனிதாபிமான நடவடிக்கைகள் முடிவுற்றதன் பின்னர் மீள உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை இதுவரையில் பாரிய அளவில் முடித்துள்ளேன். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லாத வகையில் குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்நடவடிக்கைகளை செய்து முடிப்பேன்.

பயங்கரவாதம் காரணமாக கடந்த காலங்களில் பிரதான அபிவிருத்தி பிரவாகத்தில் இருந்து ஒதுங்கி இருந்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இளைஞர், யுவதிகளை தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளில் சமாந்தரமான பங்காளிகளாக பங்கு பற்ற செய்வதற்காக சமூக உள்ளாக்கல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டினை துரிதப்படுத்தும் முகமாக மத்தியகால வரையறைக்குள் உரிய வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவேன். 

எதிர்வரும் வருடங்களில் தேசத்தின் மகுடம் செயற்த்திட்டத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டில் எந்தவொரு பகுதியிலாவது பயங்கரவாதம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள எந்தவொரு மக்கள் சமூகத்தினருக்கும் உரிய நட்டஈடு கிடைக்கப் பெறாதிருக்கும் குடும்பங்களுக்குரிய பரிந்துரைக்கப்பட்ட நட்டஈட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம் பெயர்ந்துள்ள மற்றும் முகாம்களில் இருக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமூகங்களின் நபர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையினை துரிதப்படுத்தி இவர்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் குடியேறுகின்ற உரிமையை தாமதிக்காமல் உருவாக்கிக் கொடுப்பேன்.

துரதிஸ்டவசமாக குறிப்பிட்ட சில இனவாத அல்லது மதவாத நபர்களினால் உருவாக்கப்பட்டுள்ள சமூக மோதல்களை முற்று முழுதாக தடுக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறான மோதல்களுக்குள் சிக்குண்டுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து நபர்களினதும் பாதுகாப்பையும் அவர்களது மதவழிபாட்டுக்குரிய உரிமையையும் உறுதிப்படுத்துவேன்.

நாட்டில் அனைத்து மாகாணங்களுக்கும் உரிய கல்வி மற்றும் சுகாதார வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் பொது வசதிகள் என்பவற்றை சமமான முறையில் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.