சமீபத்தில் காங்கிரசில் இணைந்த நடிகை குஷ்பு தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தையொட்டி பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைமையகமான சென்னை சத்யமூர்த்தி பவனில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மாநாடொன்றிலேயே குஷ்பு அக்கருத்தினைத் தெரிவித்திருந்தார்.
அங்கு தான் காங்கிரசில் சேர்ந்தது குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட குஷ்பு, “ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும், வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் துவங்கி பல திட்டங்களை ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி உண்மையில் தீவிரவாதத்திற்கு மட்டுமே எதிரான கட்சி” என்றுமே குஷ்பு தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர் ஒருவர், அப்படியானால் “எல்டிடிஇ” இயக்கம் பயங்கரவாத இயக்கமா எனக் கேள்வி எழுப்ப அதற்குப் பதிலளித்த குஷ்பு “நிச்சயமாக. அப்பாவிகளின் உயிரை எடுப்பவர்கள் பயங்கரவாதிகளே” என்றும் தெரிவித்திருந்தமை தொடர்பாகவே மேற்படி சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
கடந்த 2005ம் ஆண்டு குஷ்பு அவர்கள் இந்தியா டுடே ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தபோது அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இறுதியாக நீதிமன்ற திர்ப்பு மூலமே அந்த எதிர் விமர்சனங்களில் இருந்து விடுபட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிட கூடிய விடயம்.
இம்முறை குஷ்பு கூறிய “விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள்” என்கின்ற விடயத்தை இங்கு விவாதிப்பதை விட அதற்கு எதிராக எழுந்துள்ள விசமத்தனமான விமர்சனங்களே விவாதிக்கப்பட வேண்டியது. குஷ்புமீது வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் எமது தமிழ் சமூகம் தங்களுக்கு விருப்பமற்ற, மாற்றான ஒரு கருத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்,அதை எதிர்ப்பதற்கு எவ்வகையான வழிமுறைகளை கையாளுகிறார்கள் என்பதை நன்கே புலப்படுத்தியுள்ளன. குஷ்புவின் கருத்துமீதான வெளிப்பாடுகள் நாகரீகமாக முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை கொல்லவில்லை என்பதை யாராலும் உரத்துச் சொல்லமுடியாது. எனவேதான் குஷ்புவின் கருத்தினை திசைதிருப்பி அவருக்கெதிரான அவதூறுகளைமுன்வைத்து வருகிறார்கள். அவை அநாகரிகமானமுறையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் இருப்பது மிக கேவலமான உண்மையாக உள்ளது. குறிப்பாக சமூகவலைத் தளங்களிலும், முகப்புத்தகங்களிலும் எழுந்தமானமாகவும் பாலியல் ரீதியில் பெண்களை கொச்சைப்படுத்துவதாகவும் அவை அமைந்துள்ளன. அதிலும் இத்தகைய வக்கிர சிந்தனை கொண்டவர்களாக, ஆணாதிக்க வெறியர்களாக தமது விமர்சனங்களை முன்வைப்போர் அனைவரும் தமிழ்தேசிய வாதிகளாக தம்மை காட்டிக்கொண்டிருப்பவர்களே என்பது குறிப்பிடத்தக்கது .அதேவேளை குஷ்புவிற்கு இருக்கும் விடுதலைப்புலிகள் மீதான கருத்துச்சொல்லும் உரிமையை மறுப்பதற்கு இந்த தமிழ் தேசியவாதிகள் இரண்டு முக்கியவிடயங்களை முன்வைக்கின்றனர். அதாவது குஷ்பு சினிமாக்காரி என்பதும், வந்தேறு குடி (தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்கு வந்தவள); என்பதுமே அவையாகும்.
1.சினிமாவுக்கும், அரசியலுக்குமான தொடர்பு தமிழ்நாட்டில் ஒன்றும் புதிதல்ல. இந்த சினிமாதான் தமிழ்நாட்டுக்கு பல முதலமைச்சர்களை, மந்திரிகளை தந்தது . அதைவிட அன்றில் இருந்து இன்று யுத்தம் முடிந்தபின்னரும் கூட தமிழ் ஈழம் அமைப்போம் என ஒற்றைக்காலில் நிற்பவர்கள் இந்திய தமிழ் சினிமாக்காரர்கள்தான். எந்தவொரு ஈழ ஆதரவு நிகழ்வுகளும் தமிழ் சினிமாக்காரர்கள் இன்றி முழுமைபெறுவதில்லை. அவர்களின் வரவும், அவர்களின் கருத்தும் தமிழின உணர்வாளர்களுக்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது.
இவற்றையெல்லாம் விட மிக உச்சமான விடயமாக இலங்கை திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேவின் ‘வித் யு வித்தவுட் யு’ எனும் திரைப்படம் தமிழ்நாட்டில் திடையிடப்பட்டபோது கூட, ஒரு கலைப் பிரதியை எவ்வாறு சரியான நோக்குடன் அணுகுவது என்கிற புரிதல் சற்றும் இன்றி பிரதேசமும் இனமும் சார்ந்த கண்மூடித்தனமான பற்றுதலுடனும் மிகையுணர்ச்சிகளுடனும் எழுப்பப்பட்ட அந்தக் கேள்விகள் அபத்தமாக அவரை அரசியல் கருத்து கூறும்படி நிர்ப்பந்தித்தது. ஈழ ஆதரவு வியாபாரத்தில் முன்னோடியாக இருக்கும் நாம் தமிழர் சீமான் திரையுலகில் இருந்தே அரசியலுக்கு வந்தவர். இன்று இந்திய தமிழ் சினிமா அரங்கு இப்படி இருக்க குஷ்புவுக்கு மட்டும் இலங்கை அரசியல் பற்றி பேச அனுமதி இல்லை என்பது எந்த ஊரு நியாயம்?
குஷ்பு தனது இளமைக்காலங்களில் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது அவளது உடலழகை பார்த்து வாயுற ரசித்து அவளுக்கு கோயில் கட்டிய அதே கும்பல்தான் இவ்வாறான ஊத்தை விமர்சகர்களும் ஆகும். இன்றைய தமிழ் சமூகம் தமிழ் சினிமாக்களினால் கட்டி வளர்க்கப்படுகிறது. சமயம், கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்துத்தளங்களிலும் சினிமாவையே எமது தமிழர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அப்போதெல்லாம் இல்லாத நடிகைகள் மீதான கோபமும், விமர்சனங்களும் இப்போது மட்டும் புதிதாக எங்கிருந்து வருகின்றது? சினிமாக்காரர்கள் அரசியல் பேசமுடியும், ஆனால் தமக்கு சார்பாக மட்டுமே இருக்கவேண்டும் என அடம்பிடிப்பது ஈழத்தமிழ் சமூகம் கடந்த 30 ஆண்டுகாலமாக விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட பாசிச மனபாவமாகும்.
2.
வந்தேறுகுடி (தமிழ் நாட்டுக்கு பிழைப்புக்காக வந்தவள்)
வந்தேறுகுடி (தமிழ் நாட்டுக்கு பிழைப்புக்காக வந்தவள்)
இந்த விமர்சகர்கள் எடுத்துக்கொள்ளும் இரண்டாவது காரணம் குஷ்பு தமிழ்நாட்டு காரியல்ல. அவள் தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்காக வந்தவள். இவள் எப்படி எமது தமிழர்களின் பிரச்சனை பற்றி பேச முடியும்? என்பதாகும். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஈழத்தமிழர் பற்றி பேச வடநாட்டில் இருந்து வந்த குஷ்புவிற்கு உரிமையில்லை என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றார். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்தால் இந்த வந்தேறு குடிகள் தமிழ் நாட்டை கட்டிவளர்த்ததில் பெற்றிருக்கும் முக்கியத்துவம் தெரியும். ஈழ ஆதரவு கோரிக்கைக்க இன்றுவரை தமிழ்நாட்டின் ஆணிவேர் என்று புகலிடத் தமிழர்கள் போற்றித் துதிக்கும் வை.கோபால்சாமி யார்? எம்.ஜி.ஆர் யார்? ஜெயலலிதா யார்? ரஜனிகாந் யார்? என்று கேட்டுக்கொண்டே போகலாம். எனவே வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் அன்றி வந்தேறு குடிகள் என்று புறம்தள்ளிய வரலாறு நாம் அறிந்ததில்லை. எனவே குஷ்பு ஈழத்தமிழர் பிரச்சனையில் கருத்துச் சொல்ல தகுதியற்றவர் என்பது இனவெறி பிரச்சாரமாகும்.
இவையெல்லாவற்றையும் விட குஷ்புவின் கருத்தை மிக கேவலமான முறையில் தாக்குவதற்கான காரணம் குஷ்பு அவர்கள் சினிமா நடிகை என்பதையும், தமிழச்சி அல்லாதவர் என்பதையும் தாண்டி அவள் ஒரு பெண் என்பதுதான் இந்த கேவலான விமர்சனங்களுக்கான முக்கிய காரணமாக நான் காண்கிறேன். எமது சமூகத்தில் பெண்களை வெறும் பாலியல் பண்டமாக பார்ப்பதும், அவர்களது கருத்துக்களை ஏற்கமுடியாத பட்சத்தில் அவர்களை முடிந்தவரை இழிவுபடுத்துவதும் வக்கிரமான விமர்சனங்களை கக்குவதும் காலம் காலமாக எம்மவர்கள் செய்வதுதான். அதைத்தான் குஷ்பு மீதும் செய்கின்றார்கள். பெண்களை எப்போதெல்லாம் அடக்கவேண்டும் என்று நினைக்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்களை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்துவதையே ஆயுதமாக கொள்வார்கள். இவ்வாறு பெண்கள் மீதான தங்கள் வக்கிரங்களை கொட்டுவதன் மூலம் திருப்திப்பட்டுக்கொள்ளும் இந்த ஆணாதிக்க தமிழ் மனநிலை கண்டிக்கப்பட வேண்டியது. இந்த மனநிலை பெண்களின் வாழ்வியலுக்கு மிகவும் ஆபத்தானதொன்றாகும்.குஷ்பு எனும் பெண்ணின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஏவப்படும் இந்த பாலியல் ரீதியான மோசமான கொச்சைப்படுத்தல்களை தமிழ்நாட்டு பெண்ணியவாதிகள் எவரும் இதுவரை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இந்த பெண்ணியவாதிகளும் தமிழ் தேசியத்தின் பின்னால் மறைந்துகொள்வதையே பாதுகாப்பாக கருதுகிறார்களோ? அல்லது தமிழ் தேசியத்திற்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என நினைக்கிறார்களோ தெரியாது. அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
நன்றி .தேனீ