எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்க் (800 மில்லியன் ரூபா) சி.ஐ.டி. யினரால் கைப்பற்றப்பட்டுள்ள அதேநேரம், குறித்த பணத்தை மைத்திரிபாலவிடம் கொண்டு சேர்ப்ப தற்காக எடுத்துச் சென்ற நபர் கைது செய்யப் பட்டி ருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை. இது மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட வேண்டியதென்ற உண் மையினை பணபரிமாற்றத்துடன் சம்பந்தப்பட்ட நபர் கல்கிஸ்ஸை நீதவானிடம் நேரில் சென்று வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், எதிரணியின் பின்னணியில் சர்வதேசம் இருப்பது உறுதியாகியுள்ளது. அரபு வசந்தம் ஒன்றை ஏற்படுத்த முயன்று தோற்றுப் போனவர்கள் தேர்தலைப் பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, வாக்காளர்கள் மஹிந்த ராஜபக்ஷ என்னும் தனிநபரை பழிவாங்க வேண்டுமா? அல்லது முழு நாட்டினது எதிர்காலத்தையும் பழி வாங்க வேண்டுமா? வென சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை முன்வைத்தார்.
தேர்தலுக்காக அனுப்பப்பட்டுள்ள சட்டவிரோத நிதியுடன் அநேகமான வெளிநாட்டு மருந்துக் கம்பனிகள் தொடர்புபட்டிருப்பதாகவும் எமக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் அவற்றை உரிய நேரத்தில் தாம் வெளிப்படுத்துவோ மெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எமது நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நிலைப்பாட்டில் சர்வதேச நாடுகள் குறியாகவுள்ளன. பல வெளிநாட்டு தூதுவர்கள், ஜனாதிபதி மூன்றாவது தடவை போட்டியிடக் கூடாது எனவும் அதற்கான உரிமை
அவருக்கு இல்லையென்றும் நேரடியாகவே கூறிவருகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் சர்வதேசத்தின் திட்டங்கள் செல்லுபடியாகாது என்பதனால் ஜனாதிபதியை மாற்ற வேண்டிய தேவை அவர்களுக்குள்ளது. அதற்கான சிறந்த உதாரணமே கடந்த வருடம் கொழும்பில் நடத்தப்பட்ட பொதுநலவாய மாநாடு என்றும் அமைச்சர் கூறினார்.
பிரத்தானிய பிரதமர் கெமரோன் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருக்கவில்லை மாறாக வடக்கிற்கு சென்று படப்பிடிப்பை மேற்கொள்வதற்காக செனல் 4 ஊடகவியலாளர்களை இங்கு அழைத்து வந்தார்.
பிரிட்டனில் வாழும் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் டயஸ்போராக்களின் வாக்குகளிலேயே அவரது பதவி தங்கியுள்ளதென்பதால், அவர்கள் மனதை குளிர்விப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றனர் எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பில் அமைச்சர் மேலும் விளக்கமளித்ததாவது, குறித்த ஒரு நாட்டிலிருந்து ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்க் அடங்கிய பூட்டுடன் கூடிய பொதி இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த அத்துல ரோஹண வீரரட்ண என்பவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துல என்பவர் அந்த பொதியை பாதுகாப்பாக வைத்திருக்கும் படியும் அது மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியதென்றும் கூறி தனது மூத்த சகோதரனான சந்திரதாஸ என்பவரின் மகனிடம் கையளித்துள்ளார்.
இந்நிலையில் மைத்ரிபால சிறிசேனவின் மகனின் காதலியின் சகோதரனின் நண்பனான லசித்த என்பவர் குறித்த விலாசத்திற்கு சென்று பணப் பொதியை பெற்றுக் கொண்டுள்ளார். அதன்போது சந்திரதாஸ முதலாளியின் மகள் எவ்வளவு கேட்டும் வந்த நபர் பதில் கூற மறுத்துவிட்டார்.
இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் பணப் பொதியுடன் சென்ற லசித்த கைதுசெய்யப்பட்டார். பொதி பூட்டப்பட்டிருந்ததனால் பொலிஸார் இது குறித்து விசாரணையினை சி.ஐ.டியினரிடம் ஒப்படைத்தனர்.
சி.ஐ.டி யினர் பெட்டிக்குள்ளிருந்து ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்கினை கைப்பற்றியுள்ளதுடன் விசாரணைகளை முழுமையாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதேநேரம், சந்திரதாஸ முதலாளியின் மகள் கல்கிஸ்ஸை மஜிஸ்ரேட்டை நேரில் சந்தித்து தனக்கு பணம் வந்த முறைமையினை விளக்கமாக கூறியுள்ளார். நீதிமன்ற விசாரணைகளின் பின் மேலதிக அனைத்து தகவல்களும் அம்பலத்திற்கு வரும்.