நாட்டின் உயிர் நாடியான மலையக மக்களின் அனைத்துத் தேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிக்க தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இன்னும் சில மாதங்களில் தனி வீடுகளை வழங்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.
நுவரெலியா நகரில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், நுவரெலியாவுக்கு வருகை தந்து மக்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடை கின்றேன். குளிரிலும் மழையிலும் மக்கள் வெள்ளம் திரண்டு வந்து எமக்கு ஆதரவளிப்பது எமது அமோக வெற்றியை உறுதிப்படுத்துகிறது.
இந்த தேர்தல் நாட்டின் தீர்க்கமானதொரு தேர்தல், எமது பக்கம் இருந்த ‘முனாபி’கள் எதிர்ப்பக்கம் சென்று போட்டியிருக்கின்றனர். எம்மோடு இரவில் அப்பம் சாப்பிட்டுவிட்டு காலையில் சொல்லிக் கொள்ளாமல் போனவர்களை முனாபிக் என்றுதானே கூற வேண்டும்.
எமது அரசில் நல்லதென்றாலும் கெட்டதென்றாலும் அதை அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். எனினும் எம்மிடமிருந்து எதிரணிக்குச் சென்றவர் அங்கிருந்து கொண்டு எம்மைத் தூற்றுகின்றார். இப்போது அவர் நல்லவராகிவிட்டார். நாமே கெட்டவர்கள், அவர் செய்த தவறுகளும் இப்போது எம்மீது சுமத்தப்படுகிறது. இது எந்த வகையில் நியாயமாகும்.
மக்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். நாட்டில் எந்தப் பகுதியிலும் இப்போது எவரும் சுதந்திரமாக சென்று வர முடியும்.
நான் அண்மையில் வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டேன் கிளிநொச்சி, வவுனியா பிரதேசங்களில் தற்போது வாழும் மலையக வம்சாவளி மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமது வாக்குகளை வழங்கிய போதும் தமது பிரச்சினைகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்றனர்.
மலையகத்தில் மட்டுமன்றி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு நான் அமைச்சர் தொண்டமானுக்கு பணிப்புரை விடுத்தேன். தோட்ட மக்களின் வாழ்க்கை சூழலை நான் நன்கு அறிவேன். அதற்கான விசேட வேலைத் திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளேன்.
இப்போது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அத்திட்டம் கையளிக்கப்பட்டு மூன்றாவது கட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் மலையக மக்கள் லயன் காம்பிராக்களுக்கு விடை கொடுத்துவிட்டு தனித்தனி வீடுகளில் குடிபுக முடியும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீடுகளை அமைக்கும் திட்டத்தோடு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் திட்டமும் நடைமுறைப்படுத் தப்படும்.
மலையகத் தோட்டங்களில் ஒரு தேயிலைச் செடியையாவது பிடுங்குவதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.
சிலர் தேயிலைத் தோட்டங்களை அழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
மதுபான சாலைகளுக்கு லைசன் வழங்குவது பற்றி தற்போது பேசப்படுகிறது. நான் அவ்வாறு ஒரு லைசனும் வழங்கவில்லை. வழங்கப் போவதும் இல்லை. புதிதாக மதுபான சாலை திறக்கவும் நாம் லைசன்ஸ் வழங்க மாட்டோம் இது உறுதி.
மலையகப் பிரதேச மக்களின் பிள்ளைகளின் போசாக்கின்மை நிலையை சரிசெய்வதற்கு நாம் ஜனாதிபதி செயலகம் மூலம் விசேட செயலணியொன்றை ஏற்படுத்தியுள்ளோம்.
500 தமிழ் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களை நாம் புதிதாக நியமித்துள்ளோம். வடக்கு கிழக்கிற்கும் நாம் இவ்வாறு உத்தியோகத்தர்களை நியமித்துள்ளோம். விவசாயிகளுக்கு தொடர்ந்து 350 ரூபாவுக்கு உரம் வழங்கி வருகின்றோம்.
நான் பல தேர்தல் பிரசாரக் கூட்டங்களை இரத்துச் செய்து விட்டு மலையகத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்றேன். அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டேன்.
எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விவசாயிகள், கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழகத்தினருக்கு கேட்டு வைக்கும் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாமே அவற்றை மென்மேலும் முன்னேற்றும் திட்டங்களையே மக்கள் முன் சமர்ப்பித்துள்ளோம். நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகக் கல்லூரியொன்றையும் நிறுவவுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி, மலையக மக்கள் இந்த நாட்டின் உயிர் நாடிகள், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும். உங்கள் தேவைகளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் என்னிடம் சமர்ப்பித்துள்ளார். நாம் அவற்றை நிறைவேற்றுவோம்.
ஜனவரி 9ம் திகதிக்குப் பின்னரும் நானே ஜனாதிபதி. நான் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் உங்களைப் பாதுகாப்பேன். நீங்கள் எம்மை நம்பலாம். நீங்கள் சம உரிமை வசதிகளுடன் மென்மேலும் முன்னேற வேண்டும். உங்கள் பிள்ளைகள் மும்மொழியும் கற்று முன்னேற வேண்டும். அவர்கள் உலகை வெல்ல வேண்டும். மேலும் பெருமளவு பட்டதாரிகள் மலையகத்திலிருந்து உருவாக வேண்டும்.
பிள்ளைகளே உங்களதும் நாட்டினதும் செல்வம். லயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்கு வோம்.
வெற்றிலையின் வெற்றி எமது வெற்றி உங்கள் வெற்றி நாட்டின் வெற்றி நாம் அனைவரும் வெற்றிலையை அமோக வெற்றி பெறச் செய்து தமது தாய் நாட்டை கட்டியெழுப்புவோம்.
யார் எந்தப் பக்கம் சென்றாலும் நான் உங்கள் பக்கமே. நீங்கள் எம் பக்கம் நான் உங்களை பாதுகாப்பேன். நாம் சொல்வதை செய்வோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.