12/28/2014

| |

நிர்க்கதியாகி தனிமையில் பாணமை!


போக்குவரத்து துண்டிப்பு : 1560குடும்பங்கள் இடம்பெயர்வு: உணவுத்தட்டுப்பாடு :பாடசாலையில் 8அடி வெள்ளம்:குளம் panama flood 5உடைப்பெடுக்கும் அபாயம்:2500ஏக்கர் வயல்மூழ்கியது!


அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியின் அந்தத்திலிருக்கும் பாணமைக்கிராமம் பெருவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்டு நிர்க்கதியாகியுள்ளது. இக்கிராமத்தைச்சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இக்கிராமம் சகலவழிகளாலும் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து முற்றாகத்துண்டிக்கப்பட்டுள்ளது. பார்க்குமிடமெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது
பொத்துவிலிலிருந்து 17கிலோமீற்றர் தொலைவிலுள்ள  பாணமைக்கிராமத்தில் சுமார் 2420 தமிழ்சிங்கள குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இது லாகுகலை பிரதேசசெயலக பிரிவில் அமைந்துள்ளது.பொத்துவில-பாணமை வீதியில் 8மைல் தொலைவிலுள்ள நாவலாறு பகுதியுடன் பாணமை துண்டிக்கப்பட்டுள்ளது. நாவலாறுக்கு அப்பால் செல்லமுடியாது.

அங்கு தொடரும் அடைமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பொலிஸ் நிலையம் இராணுவ முகாம் தமிழ் மகா வித்தியாயலயம் பிள்ளையார் ஆலயம் வைத்தியசாலை கமநல மத்திய கேந்திர நிலையம் சமுர்த்தி வங்கி உரக்களஞ்சியம் உள்ளிட்ட பல பொது இடங்கள் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தா பாலச்சந்திரன்  ரஞ்சிதகுமார் அங்கிருந்து தெரிவித்தார்.

பாடசாலையில் 8அடி வெள்ளம்!

குறிப்பாக பாணமை தமிழ் மகா வித்தியாலயத்தில் 8அடி வெள்ளம் தேங்கியுள்ளது. அதன் மதிலுக்கு மேலால் 4அடி வெள்ளம் பாய்வதால் மதிலைக்காணவில்லை. பாடசாலையின் கூரைமட்டும் சற்றுத் தெரிகிறது. அங்கிருக்கக்கூடிய கணனிகள் தொடக்கம் ஆவணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் சிக்குண்டிருக்கின்றன. அதிபர் பொத்துவிலில் இருப்பதால் வரமுடியாத நிலையுள்ளது.
வைத்தியசாலையில் 4அடி வெள்ளம் பாய்கிறது. கடற்படையினர் நோயாளிகளை படகில் ஏற்றி வேறிடத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

ஆலயத்தில் ஜந்தடி வெள்ளம்!

பாணமைச்சந்தியிலுள்ள சித்திவிநாயகர் ஆலயம் கதிர்காமம் மற்றும் உகந்தை ஆலயத்திற்குச்செல்வோர் தங்கியிருந்து செல்லும் ஆலயமாகும். அவ்வாலயத்தினுள் 5அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கிறது. சற்றுநேரத்தில் மூலஸ்தானத்தினுள் சென்றுவிடுமென ஆலய தர்மகர்த்தா பாலச்சந்திரன்  ரஞ்சிதகுமார் தெரிவித்தார்.மேலும் மேலும் வெள்ளமட்டம் கூடிக்கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ்நிலையம் மற்றும் இராணுவ முகாம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. கடற்படையினர் படகுகளில் சென்று அவர்களை மீட்டுவந்துள்ளனர்.

சிறுகுளம் உடைப்பு!

பாணமை உகந்தை வீதியிலுள்ள வள்ளந்மாதின எனும் குளம் உடைப்பெடுத்த காரணத்தினால்
பாணமையிலிருந்து சுமார் 8மைல் தூரத்திலுள்ள   குணுகல எனுமிடத்தில் பாலம் உடைந்து வீதி அள்ளுண்டுள்ளது. பாணமை உகந்தை வீதி வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

175 தென்பகுதி உல்லாசபயணிகள் மாட்டினர்!

நத்தார் மற்றும் விடுமுறைகாலம் என்பதால் குடும்பிக்கலை உகந்தை போன்ற இடங்களுக்குச்செல்ல தென்பகுதியிலிருந்து இரண்டு பஸகளிலும் 4வான்களிலும் வந்த உல்லாசப்பயணிகள் பாணமையில் மாட்டியுள்ளனர். ஒரு பக்கமும் செல்லமுடியாமல் சிக்கியுள்ளனர்.
 
1560 குடும்பங்கள் பாதிப்பு!

இங்குள்ள 2400 குடும்பங்களுள்  1560குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களது வீடு வாசல்களில் 5அடிக்கு மேலாக வெள்ளம் தேங்கியுள்ளது. பாதிக்கபபட்ட மக்கள் அனைவரும் பாணமை சிங்கள மகா வித்தியாயலத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களுக்கான உணவு கேள்விக்குறியாகியுள்ளது.
இதுவரை 17வீடுகள் முற்றாகவும் 42வீடுகள் பகுதியளவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் சரியான கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.

2500ஏக்கர் வயல் மூழ்கியது!

பாணமைபபிரிவிலுள்ள சுமார் 2500 ஏக்கர் வயல்நிலம் முற்றாக வெள்ளத்தினுள் மூழ்கியுள்ளது. குடலைப்பருவததில் இவ் அனர்த்தம் ஏற்பட்டள்ளதால் அவை முற்றாக அழிக்கப்பட்டதாகவே கருதமுடியுமென ரஞ்சித்குமார் தொவித்தார்.

பாணமைக்குளம் உடைப்பெடுக்கும் அபாயம்!
 
logoபாணமையிலுள்ள மிகப்பெரிய குளமான பாணமைக்குளம் கிராமத்திலிருந்து 2கிலோமீற்றர் தொலைவிலுள்ளது. அக்குளததின் அடிப்பாகத்தில் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது உடைந்தால் பாணமை முற்றாக மூழ்கடிக்கப்படும் அபாயமுள்ளது.
அதனால் நேற்று இரு இயந்திரப் படகுகளில் கடற்படையினரும் தொழிலாளர்களும் குளக்கட்டிற்குச்சென்று சில திருத்தவேலைகளில் ஈடுபட்டனர்.

logo