எதிரணிக் கூட்டணியில் இரகசியமாகவும், வெளிப்படையாகவும், இணைந்து செயற்பட்டு பொது வேட்பாளர் ஒருவரைக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட அவர்களுடன் இணைந்து கொண்ட திகாம்பரம், இராதாகிருஸ்ணன், அஸாத் சாலி, நல்லையா குமரகுருபரன், முஜிபுர் ரஹ்மான் போன்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சந்திரிகா, ரணில், மைத்திரிபால கூட்டணி தருணம் பார்த்து முதுகில் குத்திவிட்டது என்று அரச தரப்பு அரசியல் வாதிகள் பலரும் தெரி வித்துள்ளனர்.
தமிழ், முஸ்லிம் மக்களில் ஒரு சிறு குழுவினர் தமது பிரச்சினைகள் சிலவற்றுக்கு மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தீர்வு தருவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அம்மக்களது எதிர்பார்ப்புக்கள் யாவுமே தவிடு பொடியாகியுள்ளதாகிவிட்டதாகவும், அவர்கள் தெரிவித்தனர். தமிழ், முஸ்லிம்கள் குறித்து ஒரு வசனம் கூட இல்லாதமையினால் அம்மக்களில் ஒரு சிறு குழுவிற்கு மைத்திரி மேலிருந்த துளியளவு நம்பிக்கையும், இல்லாமற் போய்விட்டது.
விழுந்தவன் மீசையில் மண்டபவில்லை என்பதாக மைத்திரி, சந்திரிகா, ரணில் கம்பனியுடன் கூட்டு வைத்த தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒட்டி உறவாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதாக இவர்கள் விழிபிதுங்கி நிற்பதாகவும் அரச தரப்பு அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிந்தனையை பிரதிபலிக்கும் விதமாகவே எதிரணியினரின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி முன்னரும் பல தடவைகள் தமிழ், முஸ்லிம் மக்களை நம்ப வைத்து ஏமாற்றியமை அனைவரும் அறிந்த விடயம். அதனால் மைத்திரிபால வெற்றி பெறுவார் என தமிழ், முஸ்லிம் மக்களில் எவராவது மனப்பால் குடித்தால் அதனை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன சந்திரிகாவினதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கைப்பொம்மை யாகவே, இருந்து வருகிறார். அவரால் தனித்து எதனையுமே செய்ய முடியாது. அதற்கான அனுபவமும், திறமையும் அவரிடம் கிடையாது. எனவே ஆட்சியைக் கைப்பற்றும் சந்திரிகாவின் சூழ்ச்சிக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இரையாகிவிடக்கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்பிச் சென்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை ரணில் விக்கிரமசிங்க சந்திரிகாவுடன், இணைந்து தக்க தருணத்தில் கழுத்தறுத்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தமிழ், முஸ்லிம்கள் தமது வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கி அவரை வெற்றி பெறச் செய்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் வீறுநடைபோட வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.