இன்றைய தினம் இந்த நாட்டிலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இங்கு பொது எதிரணியாக ஒரு புரிந்துணர்வு உடபடிக்கையில் கையெழுத்து இட்டுள்ளோம். இந்த உடன்படிக்கை இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் அடையாளப்படுத்தவில்லை. எங்கள் தேசிய அபிலாசைகளுக்கு முழுமையான தீர்வுகளை தரவில்லை. ஆனால், ஒரு ஜனநாயக அடிப்படை இங்கே காணப்படுகிறது. அது எமது எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் எமது பயணத்துக்கு வழிசமைக்கும் என நாம் நம்புகின்றோம். ஆகவேதான் நம்பிக்கை வைத்து முழுமையில்லாத உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்திட்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற பொது எதிரணியின் புரிந்துணர்வு உடபடிக்கை கையெழுத்திடும் வைபவத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். மனோ கணேசன் பொது எதிரணி மேடையில் மேலும் கூறியதாவது, இந்த நாட்டிலே முதன்முறையாக, பிரதான இரண்டு தேசிய கட்சிகளும் ஒரு தேசிய பயணத்தை ஆரம்பித்துள்ளன. இந்த அடிப்படையில் ஒரு பொது வேட்பாளர் முன்நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தேசிய பயணத்தில் நாமும் கலந்து கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன். இதில் நாம் இணைந்துகொள்ள விட்டால் நாம் பின்தங்கி விடுவோம். எமது அபிலாசைகளுக்காக குரல் எழுப்பும் அதேவேளையில், சிங்கள சகோதரர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதன்மூலமாகவே இந்த நாட்டை இன்று ஆண்டுக்கொண்டு இருக்க கூடிய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த கட்டத்தை அடைய முடியும். அந்த அடுத்த கட்டம் பற்றிய தெளிவு படிப்படியாக தெரிய வரும். அந்த எதிர்பார்ப்புடனேயே, ஜனநாயக மக்கள் முன்னணி இன்று இங்கே இந்த மேடையில் இருக்கின்றது -