12/05/2014

| |

மகிந்தவை அகற்ற ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர் ஒரே நாளில் இலங்கைக்குள் பரிமாற்றம்

இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் நான்கு தடவைகள் இலங்கைக்கு பரிமாறப்பட்டமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. ஒரு நாளில் இவ்வளவு பெருந்தொகையான பணம் யாருக்கு பரிமாறப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தெரிவித்தார்.
இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? யாருக்குச் சென்றுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் செனவிரட்ன, பொதுவேட்பாளராக களமிறங்கியிருக்கும் மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளவர்களுக்கு மத்தியில் பரஸ்பர விரோதமான நிலைப்பாடே காணப்படுகிறது. இது ஒரு குழப்பமான கூட்டு.
இவர்களுக்கு பொதுவானதொரு கொள்கை இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைக் கொண்டுள்ளனர். பொதுவேட்பாளர் ஒவ்வொரு கட்சியுடன் ஒவ்வொரு விதமான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுகிறார். புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கட்சிகளே பெரும்பாலும் கைச்சாத்திடும். ஆனால் இவர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கட்சிகளைவிட தனிநபர்களே அதிகமாக உள்ளனர்.
தேர்தலில் வெற்றிபெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கப்போவதாக மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். குறுகிய காலத்துக்குள் அது சாத்தியப்படாது.
அவ்வாறு செய்வதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைமாற்றி, அரசியலமைப்பை மாற்றுவதாயின் ஏன் பொதுவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நீக்க வேண்டிய தேவை சர்வதேசத்துக்கு மட்டுமே உள்ளது. இதனால் உள்ளூரில் உள்ளவர்களைப் பயன்படுத்தி அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.