வட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இரணமடு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.
கிளிநொச்சி குடிநீர்த் திட்டம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்பட இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அடுத்த வருடம் புதிதாக நான்கரை இலட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
2005 ஆம் ஆண்டில் 9 இலட்சம் வீடுகளுக்கே குடிநீர் வசதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டாகும் போது இது 100 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன்படி குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளோர் தொகை 18 இலட்சமாக இரட்டிப்பாகியுள்ளது.
அடுத்த வருடத்தில் புதிய திட்டங்களின் கீழ் ஒரு இலட்சத்து 91 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க இருக்கிறோம். இது தவிர உள்நாட்டு கடன் திட்டங்களின் கீழ் 130,000 இணைப்புகள் வழங்கப்படும். இரணமடு குடிநீர் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக பூநகரி முதல் முல்லைத்தீவு வரை மக்கள் குடிநீர் வசதி பெற உள்ளனர். இதற்கான ஒப்பந்தக்காரரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடுபூராவும் பல புதிய குடிநீர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பதலே, ருகுணுபுர, தெதுருஓயா உட்பட பல திட்டங்கள் இதில் அடங்கும். ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி.யின் கனவான கலஉட குடிநீர்த் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீரை சுத்திகரித்து மீள் பயன்படுத்துவது முக்கியமாகும். சில நிறுவனங்கள் அசுத்தமான நீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. நிலத்தை கழுவவும் சுத்தம் செய்யவும் சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீரை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். மழை நீரை வீணாக்காமல் பயன்படுத்துவதற்காக 45 ஆயிரம் மழை நீர் திரட்டும் தாங்கிகள் வழங்கப்படும்.