11/26/2014

| |

பின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்கிறார்'

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து பின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கின்றார் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இதனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார். 

மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தை  திங்கட்கிழமை (24) மாலை  திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'நூறு நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கமுடியாது. ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையப்போவதில்லை. 

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது எட்டாக்கனியாகும்.  நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச்செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் நாடாளுமன்றத்தில் அவசியமாகும். அதை எதிரணியால் செய்யமுடியாது.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இவற்றை இல்லாமல் செய்யாமல், நிறைவேற்று அதிகாரத்தை நூறு நாட்களில் இல்லாமல் செய்யமுடியாது. 

தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை, சிங்களத் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியாகும்' எனவும் கூறினார்.  

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பி.பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராசா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.