இந்தியா சென்றுள்ள வடக்கின் முதலாவது முதல்வரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை இரவு விராலிமலை அடுத்த பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்தா ஆச்சிரமத்துக்கு சென்றார்.
அவரை பிரேமானந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, பிரேமானந்தாவை அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
யார் இந்த சாமி ?
இவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்ததாக 1997 ஆம் ஆண்டு எழுந்த பலத்த சர்ச்சை மற்றும் புகார்களின் அடிப்படையில், நடத்தப்பட்ட காவல் துறை புலன் விசாரணையில், குற்றங்கள் நிருபணமாகியதால், இவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் பாலியல் குற்றம், வெளிநாடுகளில் அனுமதியின்றி சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்களைப் புரிந்ததால் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து சிறையில் அடைத்தது. இவருடன் சேர்ந்து குற்றச் செயல் புரிந்த இவருடைய மாமா, பக்கிரிசாமி , மயில் வாகனம் ஆகியோரும் தண்டிக்கப்பட்டனர். பக்கிரிசாமி என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பக்கிரிசாமி 2001 ல் மரணமடைந்தார். தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இருப்பினும் உச்ச நீதிமன்றம் இவருடைய பாலியல் குற்றத்தையும், கொலைக் குற்றத்தையும் உறுதி செய்தது.
இவருக்கு ஆதரவாக வாதாடியவர் இந்தியாவின் பிரபல வழக்கறிஞரான இராம் ஜெத்மலானி[1].இவருக்கு எதிராக வாதாடி பிரேமானந்தாவுக்கு இரட்டையாயுள் தண்டனை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் கும்பகோணத்தை சேர்ந்த கீதாலயன் என்கின்ற சுகுமாரன் ஆவார். இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய பெண் நீதிபதி திருமதி பானுமதி[2]. இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்துசென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நீதிமன்ற சிறப்பு அனுமதியுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 21 பெப்ரவரி 2011ல் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மரணமடைந்தார்.