11/13/2014

| |

முன்னாள் போராளி சுட்டுக் கொலை

மன்னார் - வெள்ளாங்குளம் கணேசபுரம் என்ற பகுதியில் வீடொன்றில் இன்று புதன்கிழமை (12) இரவு 8.50 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள், வீட்டிலிருந்தவரை சுட்டுக்கொன்றுள்ளதாக இலுப்பை கடவை பொலிஸார் தெரிவித்தனர்.
 
அதேயிடத்தை சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் புலிகள் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என்றும் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர் என்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேசன் வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் இவர், சம்பவ தினம் இரவு, தனது வீட்டு முற்றத்தில் சீமெந்துக் கற்களை வெட்டிக்கொண்டிருந்த போது அங்கு புகுந்த ஆயுததாரிகள் சிலர், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 
இவர் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவரவில்லையெனவும், சடலம் இன்னமும் அப்புறப்படுத்தப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.