11/27/2014

| |

15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ஆஸி.தமிழர்

புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழரான சுரேஷ் மேத்தர் தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியை இயக்கச்சி; பனிக்கையடி மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளித்துள்ளார்.
ஈ. பி. டி. பி. பாராளுமன்ற உறுப் பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் புலம்பெயர் தமிழரான சுரேஷ் மேத்தரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க 15 ஏக்கர் காணியையும் 57 குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தார். இயக்கச்சி பகுதியில் இருப்பிடம் இன்றி தவித்த மக்கள் மேற்படி காணிகளிலே குடியிருந்தனர்.
அவர்கள் குடியிருந்த காணிகளிலேயே ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 பரப்பு நிலம் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் காணி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முருகேசு சந்திரகுமார் பேசும் போது, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை உடைமையாகக் கொண்டுள்ளவர்கள் ஒரு அடி நிலத்திற்காகவே சண்டையிட்டு வருகின்ற இன்றைய காலத்தில் 15 ஏக்கர் நிலத்தை மக்களுக்காக மனமுவந்து சுரேஷ் மேத்தர் கொடையாக வழங்கியமை வரவேற்புக்குரியது.
பளைப் பிரதேசத்திலேயே பெரும் நிலப் பரப்பை உடைமையாகக் கொண்ட முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களின் வாரிசுகள் இன்றும் அரசியலில் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் வராத உணர்வு திரு. சுரேஷ் மேத்தருக்கு வந்துள்ளது. இது அவரின் மனிதத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த காணியை கொடையாக வழங்கிய சுரேஷ் மேத்தரின் தந்தையார் வில்லியம் மேத்தரின் பெயரை இக்குடியிருப்பிற்கு சூட்டுவது பொருத்தமானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் சுரேஷ் மேத்தர் தனது காணியை வழங்கிய 57 குடும்பங்களுக்குமான காணி உறுதிப் பத்திரங்களிலும் கையொப்பமிட்டார். தொடர்ந்து காணி உறுதிப் பத்திரங்களை பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் அவர்கள் வழங்கினார்.