மட்டக்களப்பில் ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டது தொடர்பில் யாழ்ப்பாணம், வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த நான்கு பேரை கைதுசெய்தனர்.இதன்மூலம் அரசாங்கத்தின் மீது இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு வீசிவந்த சேறுபூசும் நடவடிக்கை பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.இதுவரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமத்திவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோகன தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள குருக்கள்மடம் மற்றும் மாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் வட பகுதியை சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் மற்றும் மாங்காடு பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இந்த முறைப்பாடுகளில் ஆலயம் உடைக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதில் தங்க நகைகள் மற்றும் விக்கிரகங்கள் கொள்ளையிடப்பட்டது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கொள்ளைச்சம்பவத்தினை பயன்படுத்தி அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கையினை மேற்கொண்டுவந்ததுடன் இராணுவமே இதனை செய்ததாக கூறிவந்தது.அத்துடன் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவந்தது. எனினும் இது தொடர்பில் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நிதானமாகவும் நுணுக்கமாகவும் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தனர். இதன்போது யாழ்ப்பாணம்,வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த நான்கு பேரை கைதுசெய்தனர்.
இதன்மூலம் அரசாங்கத்தின் மீது இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு வீசிவந்த சேறுபூசும் நடவடிக்கை பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.இதுவரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமத்திவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவர்கள் பாவித்த கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.தங்க பொருட்கள் கைப்பற்றப்பட்டன.இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர்.அதன் பணிப்பாளராகவும் உள்ளார்.இவர் முன்னர் விடுதலைப்புலிகளுடன் இணைந்துசெயற்பட்டுவந்துள்ளார்.மற்றுமொருவரிடம் பெறப்பட்ட பொருட்களின் அடிப்படையில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரிடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் சுவரொட்டிகள்,போஸ்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.