வட மாகாணத்துக்கான யாழ் தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இத்தாலியில் அறிவித்தார்.
இத்தாலியில் இலங்கையர்கள் செறிந்து வாழும் மிலானோ நகரில் இந்த அறிவிப்பை அவர் விடுத்ததும் அங்கு கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
வத்திகானில் பரிசுத்த பாப்பரசரை சந்தித்ததன் பின்னர் இத்தாலி சென்ற அவர் நேற்று முன்தினம் அங்குள்ள இலங்கையர்களைச் சந்தித்தார். மிலானோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளை இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதத்தை முடித்து இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கினார்.
நாட்டில் சமாதானம். ஸ்தீரப்பாடு காரணமாக இலங்கை இதுவரை பெரும் வெற்றிகளை அடைந்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராகவே தாமும் தமது அரசும் போராடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல என்றும் தெரிவித்தார். தாம் நாடு திரும்பிய பின் சில நாட்களில் யாழ்தேவி ரயில் பல வருடங்களுக்குப் பின் யாழ்.
செல்ல இருப்பதாகவும் அங்கு வந்திருந்தவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு மத்தியில் ஜனாதிபதி தெரிவித்தார். நகர அபிவிருத்தியில் இலங்கை முன் னேறியுள்ளது. 2016 ஆம் ஆண்டாகும் போது கொழும்பில் வாழும் சகல சேரி வாசிகளுக்கும் வசதியான வீடுகளுடன் சிறந்த சுற்றாடலும் கிடைக்கும்.
மனித உரிமைகளை ஆயுதமாக்கி தேவையற்ற. அநீதியான நடவடிக்கை களை மேற்கொள்ள சிலர் முயற்சிக் கின்றனர். அதற்கு அடிபணிய இலங்கை தயாராக இல்லை. தேசிய நல் இணக்கத்துக்காக உள்ளூர் பொறிமுறை ஏற்கனவே வெற்றிகரமாக அமுலாகி யுள்ளது.
இத்தாலி உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மிலானோவில் இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ரோமிலும் இலங்கையரை சந்தித்து பேச்சு
இதேவேளை, ரோமில் கெவலியரி ஹோட்டலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த இலங்கையர்கள் ஜனாதிபதியின் பயணத்துக்கு பூரண ஆதரவு தெரிவித்தனர்.
நாட்டின் சமாதானம், ஸ்தீரப்பாடு அபிவிருத்தி, தேசிய இணக்கப்பாடு ஆகியவற்றுக்கு ஜனாதிபதியின் தலைமைத்துவம் தொடர்ந்தும் அவசியமென அவர்கள் தெரிவித்தனர்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை சீராக வழிநடத்தியதால் பயம் நீங்கிவிட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், நோர்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களுள் பெளத்த பிக்குமாரும் கத்தோலிக்க குருமாரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் இடம்பெற்றிருந்தனர்.
நாம் பயங்கரவாதத்தால் கஷ்டப்பட்டோம் பிரிவினைவாதத்தை தோற்கடிக்கவே நாம் அதற்கு எதிராக போராடினோம்.
நாடு அபிவிருத்தி அடைகிறது. வடபகுதிக்கு மும்மடங்காக நிதியைச் செலவிட்டுள்ளோம்.
மீள் குடியேற்றம், போராளிகள் புனர்வாழ்வு, சிறுவர் படைவீரர்களின் விடுதலை பற்றி எல்லாம் ஜனாதிபதி விளக்கினார்.
வட மாகாண சபைக்கு 1020 மில்லியன் ரூபா ஒதுக்கியும், மாகாண சபை இதுவரை 245 மில்லியன் ரூபாவை மட்டுமே செலவிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வரப்பட்ட போது ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் ஜெனீவாவுக்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்து காட்டிய தேசப்பற்றுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, ஐ., நா. நிரந்தரப் பிர திநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ, தூதுவர் பெனட் குரே, தூதுவர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
அதி வணக்கத்துக்குரிய மெல்கம் ரன்ஜித் கர்தினால் நடத்திய இராப்போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் பாரியார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.