10/23/2014

| |

'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இல்லை'

இலங்கையில் புதிய வரவுசெலவுத் திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறார்.
இதனிடையே, கடந்த வரவுசெலவுத் திட்டத்தின்போது, மலையக மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்த போதிலும், அதற்கான பணிகள் எதுவும் இன்னும் உறுதியாக முன்னெடுக்கப்படவில்லை என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள், அந்த மக்களின் வீட்டுப் பிரச்சனையை தேர்தல் கால பிரசாரங்களுக்காக மட்டுமே தொடர்ந்தும் பயன்படுத்திவருவதாக மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மலையக அரசியல்கட்சிகள் மத்தியில் தொழிலாளர்களுக்கான காணி உரிமை பற்றியும் வீடமைப்பு பற்றியும் தெளிவான நிலைப்பாடுகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பெரும்பான்மை சிங்கள சமூகத்தைப் போல மலையகத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் காணிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை அரசியல் தலைவர்கள் மத்திய அரசிடம் முன்வைக்க வேண்டும் என்றும் அருட்தந்தை சக்திவேல் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட உரையின் போது, மலையக மக்களுக்காக 50 ஆயிரம் அடுக்குமாடி வீட்டுத் திட்டத்தை அறிவித்தார்.
ஆனால், தொழிலாளர் குடும்பங்களுக்கு அடுக்குமாடி வீடுகளுக்கப் பதிலாக தனித்தனி காணிகளுடன் வீடு அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்று சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதனிடையே, மலையக தமிழ்க் குடும்பங்களுக்கு காணியுடன் கூடிய மாடிவீடுகளே அமைத்துக் கொடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சில மாதங்களுக்கு முன்னர் உறுதியளித்திருந்தார்.
50- ஆயிரம் வீடமைப்புத் திட்டம் இரண்டு மாதங்களுக்குள் தொடங்கப்பட்டுவிடும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் அமைச்சர் தொண்டமான் தமிழோசையிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.