10/31/2014

| |

மண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிப்பு.

பதுளை கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிப்பு.
கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவில் சிக்கி உயிர் மற்றும் உடமையை இழந்து நிக்கதியாகியுள்ள மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களிலும் பங்கேற்பதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையின் கோரத்தாண்டவத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட இயற்கையின் பெரும் கோரத்தாண்டவமாக இதனை நோக்க முடியும். தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் ஓர் அனர்த்தம் ஏற்படுவதற்கான முன் எச்சரிக்கைகளை விடுத்தோம் ஆனால் அவர்கள் விலகிச் செல்லவில்லை என்பது போன்ற காரணங்களை கூறுவதை விடுத்து காரியங்களில் ஈடுபடுவதே அதிகாரிகளின் பொறுப்பாகும். இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் தோட்ட தொழிலாளர்களின் இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க தவறிய அதிகார வர்க்கமே இந்த இழப்புகளுக்கு பொறுப்பானவர்கள் ஆகும்.
பாரிய அனர்த்தங்கள் இடம்பெற்ற பிற்பாடு காரணங்களை ஆராயாது பெறுமதி மிக்க மனித உயிர்ரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற அனர்த்தங்களால் தொடர்ந்தும் பாதிப்புக்கள் ஏற்படா வண்ணம் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் இருக்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களில் குடி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரியிருக்கின்றது.