ஐக்கிய நாடுகளின் பலம்மிக்க பாதுகாப்பு சபைக்கு இன்று ஐந்து புதிய அங்கத்துவ நாடுகள் தேர்வுசெய்யப்படவுள்ளன. இதில் வெனிசுவேலா அங்கத்துவம்பெறவுள்ளது பெரும் அவதானத்தை ஏற்படுத்தியிருப்பதோடு துருக்கி, ஸ்பெயின் மற்றும் நியூஸிலாந்துக்கு இடையில் போட்டி நிலவுகிறது.
193 அங்கத்துவ நாடுகள் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாதுகாப்புச் சபைக்கான புதிய அங்கத்துவ நாடுகளை தேர்வுசெய்யும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் தனித்து போட்டியிடுவதால் வெனிசுவெலாவின் சோசலிச அரசு பாதுகாப்புச் சபையில் இடம்பெறுவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
அதேபோன்று ஆபிரிக்க பிராந்தியத்தில் தனித்து போட்டியிடும் அங்கோலா மற்றும் ஆசியா சார்பில் தனித்து போட்டியிடும் மலேசியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதில் கடந்த 2006 ஆம் ஆண்டு காலஞ்சென்ற சாவெஸ் ஜனாதிபதியாக இருந்தபோது வெனிசுவேலா பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் பெறும் முயற்சி அமெரிக்காவால் தடுக்கப்பட்ட நிலையிலேயே அது இம்முறை போட்டியிடுகிறது. எனினும் இம்முறை வெனிசுவேலா போட்டியிடுவதற்கு அமெரிக்கா வெளிப்படையாக எதிர்ப்பை வெளியிடவில்லை.
இம்முறை பாதுகாப்பு சபைக்கான போட்டியில் மேற்கத்தேய பிராந்தியத்திற்கான இரண்டு ஆசனங்களுக்கு போட்டியிடும் நியூஸிலாந்து, ஸ்பெயின் மற்றும் துருக்கியின் மீதே அனைவரும் அவதானம் செலுத்தியுள்ளனர். பாதுகாப்புச் சபை அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்த மூன்று நாடுகளும் கடந்த ஓர் ஆண்டாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
“இது கடும் போட்டியாக இருக்கும்” என்று குறிப்பிட்ட துருக்கியின் ஐ.நா. தூதுவர் “நாம் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார். ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மனுவல் மார்கலோ குறிப்பிடும்போது, “அனைத்து போட்டியாளர்களும் வலுவானவர்கள். ஆனால் எனது நாடு சர்வதேச சமூகத்திற்கும் சேவைகள் செய்திருப்பதோடு அமைதிச் செயற்பாடுகளிலும் சம்பிரதாயமாக ஈடுபட்டு வருகிறது” என்றார்.
இதில் பிராந்தியத்தில் பதற்ற சூழல் அதிகரித்துள்ள நிலையிலேயே துருக்கி பாதுகாப்புச் சபை ஆசனத்திற்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 15 அங்கத்துவ நாடுகள் கொண்ட பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர அங்கத்துவ நாடுகளும். எஞ்சிய 10 நாடுகளும் இரண்டு ஆண்டு தவணைக்கு பிராந்திய அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகின்றன.
பாதுகாப்பு சபை அங்கத்துவத்திற்கான பொதுச்சபை வாக்கெடுப்பில் ஒவ்வொரு நாடும் மூன்றில் இரண்டு வாக்குகளை அல்லது 193 உறுப்பு நாடுகளில் குறைந்தபட்சம் 129 நாடுகளின் ஆதரவை பெற வேண்டும். கடந்த 2007 ஆம் அண்டு லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திற்காக போட்டியிட்ட பனாமா மற்றும் வெனிசுவேலா இரு நாடுகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாமல் 47 தடவைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டுவர ஒரு உடன்பாட்டுக்கு அமைய லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து பனாமாவுக்கு அங்கத்துவம் கொடுக்கப்பட்டது.
பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் பெற்றிருந்த ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, லக்சன்பேர்க், தென் கொரியா மற்றும் ருவண்டா நாடுகளுக்கு பதிலாகவே புதிய ஐந்து நாடுகள் தேர்வுசெய்யப்படவுள்ளன. தேர்வாகும் நாடு எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2016 முடிவுவரை அங்கத்துவத்தை பெற்றிருக்கும்.