யுத்த தாங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்டதுதான் யாழ்தேவி ரயில் என்ற மனநிலையிலேயே யாழ். நகரில் பிள்ளைகள் அன்று இருந்தனர் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
திருக்கோணமலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும அங்கு நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதும் யாழ். ரயில் தொடர்பாக தனக்கு கிடைத்த அனுபவம் பற்றிய கதையொன்றையும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் சுமார் 8 வயது பிள்ளையொன்று வரைந்த ரயிலின் சித்திரம் ஒன்று என்னிடம் இருந்தது. யுத்த தாங்கிகள் சிலவற்றை ஒன்றோடு ஒன்றாக வரிசையாக இணைத்தே அந்த சித்திரம் வரையப்பட்டிருந்தது. இந்த சித்திரம் தொடர்பாக அதனை வரைந்தவரின் பின்னணி பற்றி விசாரித்தறியுமாறு
நான் எனது ஊடக பிரிவுக்கு பணித்தேன். சித்திரத்தை வரைவதற்காக அந்த பிள்ளை தனது தந்தையிடமும், தாயிடமும், மாமியிடமும் ரயில் என்றால் என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த இவர்கள் “உனக்கேன் ரயில், ரயில் இங்கே வரப்போவதில்லை, உன் வேலையைப் பார்த்துக்கொண்டிரு” என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டனர்.
எனினும் ரயில் என்றால் என்ன? என்பதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் பிள்ளையிடமிருந்து போகவில்லை. அந்தப்பிள்ளை தனது மாமாவிடம் கேட்டது அவரும் யாழ். நகரில் அன்று ஓடித்திருந்த யுத்த தாங்கிகளை காண்பித்து இந்த யுத்த தாங்கிகள் போன்று சிலவற்றை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து ஒரு என்ஜின் இழுத்துக் கொண்டு வரும் அது போன்றே ரயில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தனது மாமா கூறிய விடயத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் அந்த பிள்ளை தனது கற்பனையில் உதித்த யாழ்தேவி ரயிலை சித்திரமாக வரைந்துள்ளார். இந்த விடயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் புறப்படும் போது நான் அந்த சித்திரத்தை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தேன். யாழ். புகையிரத நிலையத்தில் இந்த சித்திரத்தை பார்வைக்கு வைக்குமாறும் கூறினேன் என்றும் அமைச்சர் டலஸ் கூறினார்.