10/16/2014

| |

எல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோசனை

ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளின் பதவிக்காலம் 5வருடங்களாக மட்டுப்படுத்துவதற்கும் அந்த மூன்று தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கு வழி சமைக்கும் வகையில், தேர்தல் சட்டங்களில் திருத்தத்தை கொண்டுவரவேண்டும் என்று தேர்தல்கள் கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஃவ்ரல் கோரியுள்ளது.


பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கையொப்பமிட்டு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பது தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்தியிருப்பதையிட்டு நாங்கள் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

பஃவ்ரல்; அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இதுவரையிலும் ஜனாதிபதி தேர்தல்கள் 5, நாடாளுமன்ற தேர்தல்கள் 6, மாகாண சபைத்தேர்தல்கள் 16 மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் 14 என்ற அடிப்படையில் 41தேர்தல்களை கண்காணித்துள்ளது.
எங்களுடைய கண்காணிப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக இருந்தாலும் 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்றுவரையிலும் இரண்டு தருணங்களில் ஐந்து வருடங்களுக்கு 5 வருடங்கள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

மீண்டும் ஒரு முறை 5வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையான நான்கு வருட நாடாளுமன்ற காலத்துக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பதவிக்காலத்தின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. தேர்தல் வரலாற்றை பார்க்கையில் ஒவ்வொரு வருடமும் இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கீழ்கண்ட காரணங்கள் தொடர்பில் உங்களுடைய கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.

1.    ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளின் பதவிக்காலம் என்பவற்றை 5வருடங்களாக மட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்டத்தை தயாரிக்க முயற்சித்தல்.

2.    இந்த மூன்று நிறுவனங்களுக்கான தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு தேவையான சட்டத்தை இயற்றவேண்டும்.

3.    தேர்தலை நேரத்துக்கு நேரம் பகுதி பகுதியாக நடத்துவதை தவிர்க்கும் வகையில் சட்டத்தை இயற்றவேண்டும்.

4.    நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் வரவு- செலவுத்திட்டம் ஆகிய இரண்டும் தவிர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் அட்டவணையின் பிரகாரம்  நடப்பதற்கு தேவையான சட்டத்தை இயற்றுதல் ஆகிய யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த யோசனைகளுக் அப்பால் கீழ்கண்ட கோரிக்கைகளையும் பஃவ்ரல்; அமைப்பு முன்வைத்துள்ளது.

1.    தேசிய தேர்தலுக்கு அண்ணளவாக 2,500- 3,000 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதுடன் தேசிய தேர்தல்கள் மூன்றையும் ஒன்றாக நடத்தினால் ஆகக் குறைந்தது  5,000 -6,000 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு மிச்சப்படும்.

2.    ஓவ்வொரு வருடமும் குறைந்தது இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலொன்றை நடத்துவதற்கு ஆகக்குறைந்தது 2 மாதங்கள் செலவானது என்று நினைத்துகொண்டோமாயின், வருடத்துக்கு நான்கு மாதங்கள் செலவாகியுள்ளன. அதனால் நாட்டின் அபிவிருத்திக்கான செலவிடப்பட்ட காலம் இல்லாமல் போயுள்ளது.

பகுதி பகுதியாக தேர்தல் நடத்துவதன் ஊடாக, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனித வளங்களையும் ஏனைய வளங்களையும் ஒரே பிரதேசத்தில் கேந்திரப்படுத்துவதன் ஊடாக, வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்க முடியும். என்றாலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தினால் வெளி அழுத்தங்கள் இன்றி ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தலாம்.

பகுதி பகுதியாக தேர்தலை நடத்துவதன் ஊடாக போட்டி கூடுவதுடன் தேர்தல் சட்டங்கள் மீறுதல், வன்முறைகள் மற்றும் மனித படுகொலைகள் அதிகரிப்பதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒரே நாளில் தேர்தலை நடத்துவதனால், அரசாங்க பலம் மற்றும் வளங்களை முறையற்ற ரீதில் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் குறையும்.

தேர்தலின் போது சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்துகொள்ளமுடியும்.
வாக்கை பயன்படுத்தும் 14 மில்லியன் மக்கள் தங்களுடைய தினத்தை ஒதுக்குவதால் வேலை நாளில் கிடைக்கும் 28 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.