10/02/2014

| |

முதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நிலைமை மோசம்

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில் இலங்கை 43 ஆவது இடத்தில் உள்ளது.
முதியவர்களின் வருமானம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு, சாதகமான சமூக சூழல் போன்ற நான்கு அம்சங்களில் முதியவர்களின் நிலைமை குறித்து இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
அண்டை நாடான இந்தியா உட்பட இந்தப் பிராந்தியத்தின் முக்கிய நாடுகளிலும் பார்க்க முதியோர்கள் இலங்கையில் நல்ல நிலையில் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் போன்ற இடங்களில் கவலைக்கிடமான நிலையிலேயே முதியவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தவித்துக் கொண்டிருக்கின்ற குடும்பங்களில் முதியவர்களைப் பராமரிக்க முடியாதிருப்பதனால், அவர்கள் பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்தின் முதியோர் சங்கத் தலைவரான 70 வயதான குஞ்சிராமன் சிறிதரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தமது கிராமத்தில் மாத்திரம் இவ்வாறு 20 பேர் வரையில் பிச்சை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் மாதாந்த உதவிப் பணமாக 1000 ரூபாவும், 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 500 ரூபாவுமே அரசாங்கத்திடம் இருந்து உதவி கிடைப்பதாகத் தெரிவித்த அவர், அதிகரித்துள்ள இன்றைய வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு இந்தப் பண உதவி போதாத காரணத்தினாலேயே வறுமையில் வாடும் முதியவர்கள் பிச்சை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
முதியவர்களைப் பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இந்த அவல நிலைமையைப் போக்க முடியும் என்றும் குஞ்சிராமன் சிறிதரன் தெரிவித்தார்.

'முதியோர் மருத்துவ பிரிவு வேண்டும்'

இறுதி யுத்தத்தின் போது வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துசேர்ந்த 3 லட்சம் பேரில் மிக மோசமான நிலைமையில் இருந்த 400க்கும் மேற்பட்ட முதியவர்களைப் பொறுப்பேற்று பராமரித்து வந்த வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் அருளகம் முதியோர் இல்லத்தில் இப்போது 149 முதியவர்கள் உள்ளனர்.
இல்லங்களில் வைத்துப் பராமரிக்கப்படும் முதியவர் ஒருவருக்கு மாதாந்தம் 500 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், முன்னர் நிதியுதவி செய்துவந்த தொண்டு நிறுவனங்கள் வடக்கில் இருந்து வெளியேறிவிட்டதனால், தமது முதியோர் இல்லத்தை சிரமத்திற்கு மத்தியிலேயே தாங்கள் பராமரித்து வருவதாகவும் அருளகம் முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர் ஆறுமுகம் நவரட்னராஜா தெரிவித்தார்.
கொழும்புக்கு அருகில் உள்ள முல்லேரியா மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழர்களான 20 முதியவர்களையும் அருளகம் முதியோர் இல்லத்திற்கே அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்களைக் கையளிப்பதற்கு அந்த முதியவர்களின் உறவினர்களை வைத்தியசாலை அதிகாரிகளினால் தொடர்பு கொள்ள முடியாதுள்ளமையாலும், சில உறவினர்கள் அவர்களை ஏற்க மறுத்திருப்பதனாலும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில் சிறுவர்களைப் பராமரிப்பதற்கென வைத்தியசாலைகளில் சிறுவர் வைத்திய பிரிவொன்று செயற்படுவதைப் போன்று யாழ் போதனா வைத்தியசாலையில் முதியவர்களுக்கு வைத்தியம் செய்து பராமரிப்பதற்காக முதியவர் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவை எழுந்திருப்பதாக அந்த வைத்தியசாலையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.