தினக்குரல்---அ.நிக்ஸன்--
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடியாத சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தாம் நினைத்ததையே செயற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. கட்சி அரசியலை நடத்த முடியாத அல்லது நடத்த தெரியாத ஒரு நிலையா? அல்லது தமிழர்களிடையே யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இருந்த மேட்டுக்குடித்தனமா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.
வெளிப்படைத் தன்மையில்லை
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை அரசு முன்வைக்கவில்லை என்பது வேறு, அது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பிரச்சினை. தற்போது வடக்கு – கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட நிலையில் வட மாகாண சபையின் அதிகாரங்களை உரிய முறையில் செயற்படுத்த அரசு அனுமதிக்கவில்லை என்பதும் இருக்கின்ற அதிகாரங்களை பிடிங்கி எடுக்கின்றார்கள் என்பதும் சர்வதேச ரீதியாக தெரிந்த விடயங்கள். இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள், மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணையும், அதன் மூலமான நிரந்த அரசியல் தீர்வுக்கும் பல தரப்பகளும் அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான காலகட்டத்தில் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தளவுக்கு பொறுப்புடன் செயற்படுகின்றது என்பது கேள்வியாகும்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 38 உள்ளூராட்சி சபைகளில் 90 வீதமான சபைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது ஆட்சியில் வைத்திருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் 14 உறுப்பினர்கள், வட மாகாண சபையில் 30 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் 14 உறுப்பினர்கள். ஆகவே, குறைந்தபட்சம் இத்தனை உறுப்பினர்களையும் வட மாகாணத்தின் ஆட்சி ஒன்றையும் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றதா? நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் ஆகிய கூட்டங்களைக்கூட தலைமை உரிய நேரத்தில் கூட்டுகின்றதா? அல்லது இவர்களுடன் ஆலோசித்து ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்களா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
கூட்டுப்பொறுப்பு இல்லை
யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளை விட ஒரு தேசிய இயக்கம் போன்ற செயற்பாடு ஒன்றுக்காகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வந்தனர். ஆனால், இங்கு சாதாரண கட்சி அரசியல் செயற்பாட்டு முறைகள் கூட இல்லாத நிலையில் சில குறிப்பிட்ட நபர்களுடைய விருப்பு வெறுப்புகளுடன் கூட்டமைப்பு செயற்படுவதாக விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மூன்று விடயங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். ஒன்று – சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் என்ற மூன்று நபர்களுடைய செயற்பாடுகள். அதுவும் சம்பந்தன், சுமந்திரன் கூறுவதையே விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் செயற்படுத்துகிறார் என்பது முக்கியமானது. இரண்டாவது – கூட்டமைப்புக்குள் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் இல்லை, தனிநபர் அல்லது மேற்படி மூன்று நபர்களுடைய முடிவுகள். மூன்றாவது – தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் வட மாகாண சபைக்கும் கிடைக்கின்ற நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை.
இந்த மூன்று குற்றச்சாட்டுகளிலும் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஜனநாயகமற்ற செயற்பாடுகள் என்பது முன்னாள் போராளிகளாக இருந்து தற்போது அரசியல் கட்சிகளாக செயற்படும் இயக்கங்களை வெளியேற்றும் சர்வாதிகார போக்காக காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கட்சிகளை விமர்சித்திருக்கின்றார். அப்போது கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட வராலாற்றை மற்றைய கட்சித் தலைவர் ஒருவர் எடுத்துக்கூறியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக வருவதானால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் சேர்ந்து அழைப்பு விடுக்க வேண்டும் என விக்னேஸ்வரன் அப்போது கூறியதையும், தான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சேராதவன் என்று குறிப்பிட்டதையும் அவர் ஞாபகப்படுத்தினார்.
சம்பந்தன் – சுமந்திரன் மௌனம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன்தான் சோந்து இயங்கவேண்டும். ஏனைய கட்சிகளுடன் சோந்து செயற்பட முடியாது என விக்னேஸ்வரன் கூறியதும், அதற்கு ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் பதிலளித்தபோதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் எதுவுமே பேச முடியாத நிலையில் மௌனமாக இருந்தனர். அதாவது, தமது நிலைப்பாட்டை விக்னேஸ்வரன் வெளிப்படையாகவே கூறிவிட்டார் என்ற வெட்கத்தல் அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண சபையில் கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நான்கு பேர் அமைச்சர்கள், ஒருவர் தவிசாளர், ஒருவர் முதலமைச்சர் இந்த ஆறு பேரையும் தவிர ஏனைய 24 உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாடுவதில்லை என்றும், இந்த ஆறு பேருமே சகல முடிவுகளையும் எடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. நான்கு அமைச்சுகளும், முதலமைச்சரின் கீழ் 16 திணைக்களங்களும் உள்ளன. இந்த 24 உறுப்பினர்களுக்கும் இவற்றை பகிந்தளித்து நிர்வாகத்தை இலகுவாக்கலாம். ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அவ்வாறான திட்டங்கள் இருந்ததாக கடந்த ஒரு வருட ஆட்சியில் காண முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி கேட்கப்பட்டபோது பதிலளித்த விக்னேஸ்வரன், 24 பேரில் சயந்தன், ஆனோலட் என்ற இரு உறுப்பினர்களையும் தவிர ஏனையவர்களில் எந்த பயன்பாடும் இல்லை எனக் கூறியுள்ளார் என அறியமுடிகிறது. இதனால், வட மாகாண சபையின் நிர்வாகச் செயற்பாடுகள் மேலும் முடங்கக்கூடிய ஆபத்து உண்டு. அரசு அரசியல் அதிகாரங்களை வழங்கவில்லை என்பது ஒரு புறம். மறுபுறத்தில் இருக்கின்ற அதிகாரங்களை சரியாக தமக்குள்ளே பரவாலாக்கம் செய்து செயற்படுத்த முடியாத நிலையில் விக்னேஸ்வரன் உள்ளார். ஏனைய 24 உறுப்பினர்களும் வெறுமனே கூட்டங்களுக்கு மட்டும் வந்து செல்பவர்களாக காணப்படுகின்றனர். சரியான தலைமைத்துவம் இருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உறுப்பினர் ஒருவர் கூட்டத்தில் கூறியபோது சம்பந்தன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, நீர் ஈ.பி.ஆர்.எல்.எப்தானே என்று அமைச்சர் ஐங்கரநேசனை பார்த்து விக்னேஸ்வரன் இரகசியமாக கேட்டார் என்றும், ஆகவே இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற உணர்வுடன்தான் அவர் செயற்படுகின்றார் என்றும் அமைச்சர் ஐங்கரநேசன் தனது நெருக்கமான ஒரு ஊடகவியலாளரிடம் கூறியுள்ளார். இதேவேளை, அமைச்சுப் பொறுப்புகள் அல்லாத ஏனைய 24 உப்பினர்களும் இராஜினாமா செய்யும் மன நிலையில் இருப்பதாகவும் உள்ளகத் தகவல் தெரிவிக்கின்றன. ஆகவே, 1920களில் தேசிய இயக்கத்தின் பிளவுடன் ஆரம்பித்த இன முரண்பாடு, அதன் பின்னரான 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம், 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தினால் சர்வதேசத்தை பேச வைத்தது. ஆனால் இன்று?