9/03/2014

| |

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப்பே காரணம்

தற்போது இடம்பெற்று வரும் அத்துமீறிய இந்திய மீனவர்களின் மீன்பிடிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே காரணம் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளால் எமது கடற்தொழி லாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது அவர் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடியிருந்தார். இதன்போது, இந்தியப் பிரதமர் கால அவகாசம் கோரியபோதும் அதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்தார்.
இந்த நிலையில், அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவ் விடயம் தொடர்பில் கால அவகாசம் வழங்கியிருப்பதால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர ஆரம்பித் திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான இந்திய மீனவர்களின் தொழிற்துறை நடவடிக்கைகளால் எமது மீனவர்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின் றனர். இதற்கு கூட்டமைப்பினரே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கைதடியில் அமைந்துள்ள வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் உதவும்கரங்கள் நிகழ்ச்சித் திடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், வட மாகாண அபிவிருத்திக்கு அரசும். ஆளுநரும் தடையாக இருப்பதாக கூட்டமைப்பினர் கூறிவருகின்றமை ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளது.
யாழ். மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், வடக்கு மாகாண முதலமைச்சர் உரையாற்றும் போது, ஹெலியில் வருபவர்களால் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது என கூறியதாவ ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் சென்று வருவதற்கு இலவசமாக ஹெலியின் உதவியை கூட்டமைப்பினர் கேட்டிருந்தனர்.
இதனிடையே, மக்களின் தேவைக்கு ஒருவிதமாகவும் தமது தேவைக்கு ஒருவிதமாகவும் அணுகுமுறைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கையாண்டு வருகின்றனர்.
ஆனால், நாம் மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதையே வலியுறுத்தி வரும் அதேவேளை, எமது இணக்க அரசியல் மூலம் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
அதுமட்டுமன்றி எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக மேலும் பல உதவித் திட்டங்களை அரசின் ஊடாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் சந்திரசிறி வட மாகாணத்தின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயலாபத்திற்காக விஷமப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களின் இக்கூற்றானது ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.