9/22/2014

| |

அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வாக்கு வங்கியில் சரிவு

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலின் முன்னோடியாக அரசாங்கம், தன்னுடைய பலம் எப்படி இருக்கிறது என்று பரீட்சித்து பார்ப்பதற்கு நடத்தப்பட்டதாக கூறப்படும் ஊவா மாகாண சபைத்தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

அமோக வெற்றி, பெரும்பான்மை வெற்றி என்று சொல்லுமளவுக்கோ அல்லது மார்த்தட்டிக்கொள்ளுமளவுக்கோ அரசாங்கத்தின் வெற்றிவாய்ப்பு அமையவில்லை. தேர்தல் நடைபெற்ற பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலும் ஐ.ம.சு.கூவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளையும் ஐ.ம.சு.கூ தன்வசப்படுத்திக்கொண்டாலும் பதுளை மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில் ஹாலி-எல, பதுளை மற்றும் வெலமடை ஆகிய மூன்று தொகுதிகளையும் ஐ.தே.க. கைப்பற்றியுள்ளது.

இம்முறை 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 20ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 349,906 (51.25சதவீதம்) (2 போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 19 ஆசனங்கள்), ஐக்கிய தேசிய கட்சி-  274,773 (40.24 சதவீதம்) ( 13 ஆசனங்கள்) மக்கள் விடுதலை முன்னணி 36,580 (5.36 சதவீதம்) ( 2ஆசனங்கள்) பெற்றுக்கொண்டன.

எனினும், 2009 ஓகஸ்ட் 08ஆம் திகதி நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 418,906 (72.39 சதவீதம்) வாக்குகளை பெற்று 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 25 ஆசனங்களை வென்றது. ஐக்கிய தேசியக்கட்சி 129,144 (22.32 சதவீதம்) வாக்குகளைப்பெற்று 7 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)14,639(2.53 சதவீதம்) ஒரு ஆசனத்தையும் மலையக மக்கள் முன்னணி 9,227(1.59சதவீதம்)வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு வங்கி சரிந்துள்ளது எனலாம். இதில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பதுளை மாவட்டத்தில் 237,579(53.23சதவீதம்) வாக்குகளையும் மொனராகலை மாவட்டத்தில் 158,435(69.01சதவீதம்) வாக்குகளையும் பெற்றிருந்தார்.

பொது எதிரணி வேட்பாளராக களமிறங்கியிருந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா (இந்த எதிரணியில் ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன. அத்தேர்தலில் பொன்சேகா, பதுளை மாவட்டத்தில் 198,835(44.55 சதவீதம்), மொனராகலை மாவட்டத்தில் 66,803(29.01சதவீதம்) வாக்குகளை பெற்றிருந்தார்.

இம்முறை நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் தனித்து போட்டியிட்ட பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக்கட்சி இரு மாவட்டங்களிலும் 6,076(1.92 சதவீதம்) வாக்குகளை மட்டுமே பெற்றது.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு , பதுளை மாவட்டத்தில் 203,689( 58.25 சதவீதம்) வாக்குகளையும் மொனராகலை மாவட்டத்தில் 120,634 (75.64 சதவீதம்) வாக்குகளையும் பெற்றிருந்தது.

இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி, பதுளை மாவட்டத்தில் 112,886 (32.28சதவீதம்) வாக்குகளையும் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி ( இதில் மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகித்திருந்தது) 15,768 (4.51சதவீதம்) வாக்குகளையும் மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி 28,892 (18.12சதவீதம்) வாக்குகளையும் ஜனநாயகக் கட்சி 9,018 (5.65சதவீதம்) வாக்குகளையும் பெற்றிருந்தது.

இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி, எக்சத் லங்கா மஹாசபா கட்சி, ஜனசெத பெரமுண, தேசிய சுதந்திர முன்னணி, மௌவ்பிம ஜனதா பக்ஷய, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, எமது தேசிய முன்னணி, எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய, ஐக்கிய சோசலிச கட்சி, ஜனசெத பெரமுண, லிபரல் கட்சி ஆகிய கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இரு மாவட்டங்களிலும் 942,730பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். அதில் 717,066பேர் வாக்களித்துள்ளனர். அந்த வாக்குகளில் 682,797 வாக்குகள் செல்லுப்படியான வாக்குகளாகும். 34,269 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை 225,664பேர் வாக்களிக்கவில்லை.

பிரதான ஐக்கிய தேசியக்கட்சி சூளுரைத்தது போல ஊவா மாகாணத்தில் வைத்து அரசாங்கத்துக்கு முதலாவது எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணி இரு மாவட்டங்களிலும் தலா ஒவ்வொரு ஆசனத்தை பெற்றுகொண்டது. கடந்த தேர்தலில் தனது கோட்டையான மொனராகலை மாவட்டத்தில் மட்டும் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படவிருப்பதாக கூறப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் தன்னுடைய பலத்தை தேர்தல் மூலம் மீண்டுமொருமுறை சுரண்டி பார்ப்பதற்கு மாகாண சபைகளோ, உள்ளூராட்சி மன்றங்களோ இன்மையால் ஊவா மாகாண சபைத்தேர்தல் பெறுபேறுகளை கொண்டே அரசாங்கம் தன்னுடைய காய்நகர்தலை முன்னெடுக்கும் என்று அரசியல் அவதானிகள் எதிர்வுகூறுகின்றனர்.