பிரபல தொழிற் சங்கத் தலைவரும் சட்டத்தரணியுமான பாலா தம்பு நேற்று காலமானார். சுகவீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று தனது 92 வது வயதில் அவர் காலமானார்.
இவர் 1922 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி நீர்கொழும்பில் பிறந்தார். இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட இவர் 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்தார்.
நீர்கொழும்பு நியூஸ்டட் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்ற இவர், கொழும்பு றோயல் கல்லூரியில் இடைநிலை கல்வியைத் தொடர்ந்தார். 1943 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்று வெளியே றினார்.
அதன் பின்னர் 1944 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து தாவரவியலில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1944 ,ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளாண்மைத் துறையில் விரிவுரையாள ராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இடதுசாரிக் கொள்கையில் இவர் ஈர்க்கப்பட்டார். இக்காலகட்டத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய இடதுசாரித் தலைவர்கள் என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா, பிலிப் குணவர்தன ஆகியோருடன் இணைந்தார்.
1947 ஆம் ஆண்டு அரச ஊழியர் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவர் அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தில் இணைந்து 1948 பெப்ரவரியில் அதன் செயலாளர் ஆனார்.
1928 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக ஊழியர் சங்கம், பாலா தம்பு செயலாளராக ஆன பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியின் செல்வாக்குக்குள் வந்தது. இக்கட்சி நான்காம் அனைத்துலக அமைப்பின் உறுப்பினராக இருந்தது. 1963 ஆம் ஆண்டில், கொழும்பு துறைமுகத்தில் வேலை நிறுத்தம் ஒன்றை தலைமை தாங்கி நடத்தினார். இது பின்னர் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தமாக உருவெடுத்தது.
1964 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சி நான்காம் அனைத்துலகத்தில் இருந்து விலகி அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசில் இணைந்ததை அடுத்து, பாலா தம்பு அக்கட்சியில் இருந்து விலகி, இங்கை புரட்சிகர சமசமாசக் கட்சியின் தலைவரானார்.
1960 மார்ச், 1960 ஜுலை, 1965 ஆண்டுகளில் நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற தேர்தல்களில் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார். பாலா தம்பு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றி வந்தார். உழைக் கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது நிர்வாகங்களுடனும், அரசுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு தீர்வு கண்டார்.