9/19/2014

| |

வடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகிய உருவாக்கப்பட்டன.

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதிநியதிச்சட்டம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் அங்கீகரிக்கப்பட்டு வியாழக்கிழமை (18) தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அதனுடன் ஏற்கெனவே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்த முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டமும் கையளிக்கப்பட்டதாக அவைத்தலைவர் குறிப்பிட்டார்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதிக்கு வியாழக்கிழமை (18) காலை வருகை தந்த வடமாகாண ஆளுரின் செயலாளர் எல்.இளங்கோவன் இவற்றை தங்களிடம் ஒப்படைத்ததாக அவைத்தலைவர் தெரிவித்தார்.

மேற்படி இரண்டு நியதிச்சட்டங்களும் அங்கீரிக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பான சட்டத்தை அமுலாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டம் மற்றும் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் ஆகிய உருவாக்கப்பட்டன. 

உருவாக்கப்பட்ட மூன்று நியதி சட்டங்களும் ஆளுநரின் சிபாரிசு பெறும் பொருட்டு, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு வடமாகாண சபை அனுப்பி வைத்தது.

இதில் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆளுநர் அதனை ஏற்கமறுத்ததுடன், சட்டவல்லுநர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி அதனை பரிசீலனை செய்து உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, நீதிமன்றத்தினூடாக தீர்மானம் எடுக்கப்படும் என கூறினார்.

அடுத்ததாக முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க வடமாகாண சபையினர் சில மாற்றங்களை செய்தததையடுத்து, அதனை ஆளுநர் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.

இருந்தும், நிதி நியதிச்சட்டத்தில் பல சரத்துக்கள் சட்ட எல்லையை மீறியும், மத்திய அரசாங்கத்தினுடைய உரித்துக்களை பற்றி கூறுவதாகவும் இருப்பதாகவும், அதனை நீக்கி திருத்தங்கள் செய்யும் படி ஆலோசனை கூறி ஏற்க மறுத்து, வடமாகாண ஆளுநர் வடமாகாண சபையினருக்கு திருப்பி அனுப்பினார். 

இவ்வாறு இரண்டு தடவைகள் திருத்தங்கள் மேற்கொண்டு வடமாகாண சபையினர் ஆளுநரிடம் சமர்ப்பித்திருந்த போதும், தான் எதிர்பார்த்த திருத்தங்கள் இடம்பெறவில்லையென ஆளுநர் ஏற்கமறுத்தார். 

தொடர்ந்து கடந்த 10 ஆம் திகதி திருத்தங்கள் செய்து அனுப்பப்பட்டதை நிதி நியதிச்சட்டத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட நியதிச்சட்டங்களை வியாழக்கிழமை (18) வடமாகாண சபையினரிடம் கையளித்துள்ளார்.