9/18/2014

| |

திருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு

திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலை (ஆவணப்படம்)இந்தியாவில் பனியன் போன்ற உள்ளாடைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழக மாவட்டமான திருப்பூரில், நைஜீரியாவைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
இவர்கள் அனைவருமே பனியன் ஏற்றுமதி தொழிலிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆனால், சமீபகாலமாக திருப்பூரில் இருக்கும் வர்த்தக சங்கங்கள் இவர்களை திருப்பூரை விட்டு வெளியேற்ற வேண்டுமெனக் கோரிவருகின்றன.
இந்த நிலையில் திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் நைஜீரியர்களை வெளியேற்ற வேண்டுமெனக்கோரி திருப்பூர் காதர்பேட்டிலிருக்கும் திருப்பூர் இரண்டாம் தர பனியன் ஏற்றுமதி முதலாளிகள் சங்கம் போராட்டம் ஒன்றையும் செவ்வாய்க்கிழமையன்று நடத்தியது. இதுபோன்ற போராட்டங்கள் திருப்பூரில் அவ்வப்போது நடந்துவருவது வழக்கமாகியுள்ளது.
இவர்களை வெளியேற்றக்கோருவது ஏன் என திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த முத்துரத்தினத்திடம் கேட்டபோது, வியாபாரிகளாக வந்த நைஜீரியர்கள், நேரடியாக உற்பத்தியிலும் இறங்கிவிட்டதால், தங்களுக்கான லாபம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
சட்டரீதியாக திருப்பூரில் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கும் அந்நிய நாட்டவரை வெளியேறச் சொல்வது சரியா எனக் கேட்டபோது, அவர்களுடைய வர்த்தகம் தாங்கள் வகுத்துவைத்திருக்கும் விதிமுறைகளை மீறுவதாகத் தெரிவிக்கிறார் திருப்பூரின் காதர்பேட்டிலிருக்கும் திருப்பூர் இரண்டாம் தர பனியன் ஏற்றுமதி முதலாளிகள் சங்கத்தன் துணைத் தலைவர் எம்.பி. குமார்.
பொருட்களை வாங்கி விற்பவர்களாக வந்தவர்கள், வாங்கி விற்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிறார் அவர்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக, பனியன் போன்ற உள்ளாடைகளை வாங்கி ஏற்றுமதி செய்வதற்காக முதன் முதலில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிலர் திருப்பூருக்கு வந்தனர். அந்தத் தொழிலில் நல்ல லாபம் இருக்கவே, அந்நாட்டைச் சேர்ந்த பலரும் திருப்பூரில் வர்த்தகத்தில் இறங்கினர்.
தற்போது திருப்பூரில் 400 முதல் 500 நைஜீரிய நாட்டவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவை குறித்த ஒலிப்பெட்டகம் ஒன்றை இங்கு கேட்கலாம்.