9/10/2014

| |

கொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இடமில்லை. பிரதித் தலைவர் நா.திரவியம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைத்துக் கொடுத்த மாகாணசபை அரசியல் அதிகாரப் பரவலாக்கல் பாதையிலேயே தமிழர்க்கான மூத்த கட்சி என பெருமை பேசும் கட்சிகளும் பயணிக்கின்றன. அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் வழிகாட்டியான எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மரம் விட்டு மரம் தாவும் மந்திக் குணங் கொண்ட கொள்கை இல்லாத அரசியல் வாதிகளுக்கு தன்னகத்தே ஒருபோதும் இடம் கொடுக்காது, என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் சிரேஸ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம்(ஜெயம்) குறிப்பிட்டார்.
வாகரை கண்டலடி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து முன்னாள் தவிசாளர் வேறுகட்சிக்குத் தாவினார் கட்சியின் பிரதிச் செயலாளர் வேறு கட்சிக்கு மாறினார்; என்ற செய்திகள் பத்திரிக்கைகளிலும் இணையத்தளங்களிலும் வெளியாகின மக்களும் கட்சியின் ஆதரவாளர்களும் இது குறித்த குழப்பமடையத் தேவையில்லை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பரம்பரை அரசியல் பின்புலத்துடன்  போலி அரசியல் செய்ய முனைந்த கட்சியல்ல மக்களுக்காக தம் உயிரை தியாகம் செய்யத் துணிந்த இளைஞர்களைக் கொண்டு சிறப்பான தியாக சிந்தை கொண்ட தலைவர் சி.சந்திரகாந்தனினால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி ஏனைய கட்சிகளில் இருந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு துரத்தப்பட்ட சுயநலம் கொண்ட அரசியல் தலைவர்களைக் கொண்ட கட்சியல்ல என்பதனை எல்லோரும் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும்.
மக்களுக்கெதிராக சுயநல சிந்தனையுடன் செயற்பட விளையும் யாருக்கும் எமது கட்சியில் இடம் கொடுக்கப்படமாட்டாது கடந்த காலத்தில் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மூலம் சமூக அடையாளம் வழங்கப்பட்ட சிலர் தமது குறுகிய அரசியல் இலாபம் தேட முற்பட்ட வேளையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அவர்களில் சிலர் தமிழரசுக் கட்சிக்குச் சென்றார்கள் இன்று அதே போன்று ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளபட சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு சென்றுள்ளார்கள்.
மக்களுக்குச் சேவை செய்யும் உயரிய சிந்தனையுடன்  கொள்கை விளங்கிக் கொண்டவர்கள் இறுதி வரை மக்களை நோக்கிப் பயணிப்பார்கள் ஆனால் முதலமைச்சர் அதிகாரம் உள்ள போது தமிழ் மக்கள் விடுதலைப்;புலிகள் கட்சியுடன் ஒட்டி இருந்தால் ஏதாவது தமது எதிர் பார்ப்புக்களை நிறைவேற்றலாம் என முன்வருபவர்களுக்கும் தவிசாளர் அதிகாரம் உள்ள போது மக்களை ஏய்க்கலாம் என முனைபவர்களுக்கும் கட்சி ஒரு போதும் நேர்மையற்ற களம் ஏற்படுத்திக் கொடுக்காது என்பதனை உணர்ந்து வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு வேறு தமக்கு வாசியான கட்சிக்கு தாவுவதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறு சுயநல அரசியல் வாதிகளை தன்னகத்தே இணைத்துக்கொள்ளும் ஏனைய கட்சிகளும் மக்களுமே சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆலயத் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், பாடசாலை அதிபர், கிராம சேவகர், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.