9/22/2014

| |

ஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக பசறை, மஹியங்கனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் ஐ. ம. சு. மு. ஐ.தே. க. வை தோற்கடித்திருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ஐ. ம. சு. மு. தோல்வியைத் தழுவிய மஹியங்கனை தேர்தல் தொகுதியில் இம்முறை ஐ. தே. க.விலும் சுமார் 7 ஆயிரம் கூடுதல் வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கின்றது.

நாட்டில் நடாத்தப்பட்ட அனைத்து மாகாண சபை தேர்தல்களிலும் எட்டு மாகாண சபைகளில் வெற்றி யீட்டியுள்ள ஐ. ம. சு. மு. மொத்தமாக 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 58 சதவீத மக்கள் ஆதரவை நிரூபித்துள்ளதாக ஐ. ம. சு. மு. பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் எதிர்வரும் தேசிய மட்டத்திலான தேர்தலில் ஐ. ம. சு. மு. எத்தகைய சவால்களையும் முறியடித்து அமோக வெற்றியீட்டு மென்பது உறுதியெனவும் அவர் கூறினார்.
ஊவா மாகாணசபை தேர்தல் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியினை வெளிப்படுத்தும் முகமாக நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசிலுடன் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேக்கர, மேல் மாகாண சபை உறுப்பினர் நிமல் லங்கா, பேராசிரியர் ஜகத் வெள்ளவத்தை ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைத் தேர்தலின் போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுமார் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்று 54 சதவீத மக்கள் ஆதரவை நிலைநிறுத்தியுள்ளது. இதற்கு மேலதிகமாக தனித்துப் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி, துவாக்கட்சி ஆகியவற்றுக்கு கிடைத்த வாக்குகளையும் சேர்த்து நோக்குகையில், 58 வீதமான வாக்குகள் தற்போது ஆளும்கட்சி வசம் இருப்பது உறுதியாகியுள்ளதெனவும் அமைச்சர் சுசில் விளக்கமளித்தார். இதே வேளை மேற்படி ஒன்பது மாகாண சபைத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 24 இலட்சம் வாக்குகளைப் பெற்று 24.35 சதவீதமான மக்கள் பலத்தையே தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் ஐ. தே. க.விலும் பார்க்க 30 சதவீதமான மக்கள் ஆதரவு அதிகாரத்தை கூடுதலாகப் பெற்றுக் கொண்டுள்ள ஐ. ம. சு. மு. எதிர்காலத்தில் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள எந்தவொரு தேர்தலிலும் சவால்களுக்கு சளைக்கப் போவதில்லையென்பது தெளிவாகுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக பசறை, மஹியங்கனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் ஐ. ம. சு. மு. ஐ.தே. க. வை தோற்கடித்திருப்பது, மக்கள் எமது ஜனாதிபதி மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடேயாகுமெனவும் அமைச்சர் சுசில் விளக்கமளித்தார்.
சுமார் 42 சதவீதமான தமிழ் மக்கள் வாழும் பசறை தேர்தல் தொகுதியினை நம்பியே ஐ. தே. க. அரசியல் நடத்தி வந்தது. ஐ. தே. க.வின் தேசிய மாநாடு கூட பசறையிலேயே நடத்தப்பட்டது. எனினும் ஐ. தே. க. மீது நம்பிக்கை இழந்த பசறை மக்கள், தங்களது தேர்தல் தொகுதியில் ஐ. ம. சு. மு. யினையே வெற்றிபெறச் செய்துள்ளனர். ஐ. தே. க. ஆகக்குறைந்த சுமார் 6 ஆயிரம் வாக்குகளையே அங்கிருந்து பெற்றுக் கொண்டுள்ளது. அந்தவகையில் தோட்டப்புற தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு கிடைத்துள்ளமையானது, அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் அம்மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதைக் குறிக்கின்றது.
மேலும் ஹப்புத்தளை, பண்டாரவளையிலுள்ள தெமோதரை, வெலிமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கணிசமான தமிழ் மக்களின் வாக்குகளும் எதிர்வரும் தேசிய மட்டத்திலான தேர்தகளுக்கு எமக்கு உந்துசக்தியையளித்துள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐ. ம. சு. மு. தோல்வியைத் தழுவிய மஹியங்கனை தேர்தல் தொகுதியில் இம்முறை ஐ. தே. க.விலும் சுமார் 7 ஆயிரம் கூடுதல் வாக்குகளால் வெற்றி பெற்றிருப்பது எமது சேவைக்கு மக்கள் வழங்கிய ஆணையெனவும் அவர் குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஐ. தே. க.வின் கோட்டையாகவிருந்த பசறை மற்றும் மஹியங்கனையில் ஐ. ம. சு. மு வெற்றி பெற்றிருப்பதானது, தேசிய மட்டத்தில் நடத்தப்படவுள்ள தேர்தல்களில் எமக்கு கிடைக்கவுள்ள வெற்றியை நிரூபித்துக் காட்டியுள்ளதெனக் கூறினார்.
மூன்றாவது சக்தியென தன்னைக் கூறிக்கொள்ளும் வேட்பாளர் சரத் பொன்சேகா, சூடு வைக்கப்பட்ட தனது வாகனத்தை காட்சிக்காக வைத்தும் கூட, ஏனைய மாகாணங்களில் பெற்ற வாக்குகளைக் கூட மொணராகலை மாவட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியால் போனமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் முதலமைச்சர் வேட்பாளராக புதிய முகத்தை தேடிச் சென்றனர். ஆனால் நாம் இருந்தவர்களைக் கொண்டே தேர்தல் களத்தில் இறங்கினோம். மேலும் தேர்தலுக்காக வேண்டியே மின்கட்டணம் மற்றும் டீசல், பெற்றோல் விலையை ஜனாதிபதியவர்கள் குறைத்ததாக பலர் தவறான பிரசாரத்தைக் கொண்டு செல்கின்றோம்.
உண்மையில் அவ்வாறில்லை. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் மின்கட்டணத்தில் 25 சதவீதத்தை குறைப்பதாக ஜனாதிபதியவர்கள் மஹிந்த சிந்தனையில் வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இது தேர்தல் காத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனால் ஏற்படக்கூடிய நன்மையை இரண்டு மாதங்களுக்குப் பின்னரே உணருவரெனவும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மஹிபால ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தியை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதன் வெளிப்பாடே ஊவா மாகாண சபையில் ஐ. ம. சு. மு. கண்டுள்ள வெற்றியாகும். எனவே இளைய தலைமுறையினர் ஆளும் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதியவர்களின் கரங்களைப் பலப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.