முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்களை முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் என்.ஏ.ஜே.சி.டயஸ் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் கையளித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் வாவட்டி குளப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என்.வேதநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்ட விவசாயக் காணிகளில் நேற்றைய தினம் விசேட பூஜையை மேற்கொண்ட விவசாயிகள், நிலத்தை பயன்படுத்தி சிறு நிலப்பரப்பில் நெல் பயிரிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இந்த நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மானிய உரம் மற்றும் விதை நெல் ஆகிய வற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தமது கட்டுப்பாட்டில் இருந்த தமது விவசாய நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக ஒப்படைத்துள்ளமைக்கு அப்பிரதேச விவசாயிகள் இராணுவத் தரப்பினருக்கும், அரசாங்கத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
கேப்பாப்பிலவு பகுதி மக்களுடைய வயற்காணிகள் உரியவர்களிடம் வழங்கப் பட்டுள்ள அதேவேளை, அந்த மக்களுக்குச் சொந்தமாக இருந்த காணிகளின் அளவு காணிகளை மேட்டு நிலக் காணிகளாக வழங்குவதற்கென 250 ஏக்கர் காணி அடையாளப்படுத்தப் பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
இந்த மக்கள் குடியிருந்த காணிகளுக்குப் பதிலாகவே குடும்பம் ஒன்றிற்கு கால் ஏக்கர் காணியில் வீடுகள் அமைத்து கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.