ஊவா மாகாண சபைக்கு 34 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (20) நடைபெறவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 22 அரசியல் கட்சிகள், 11 சுயேச்சைகள் சார்பில் 617 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்கென ஊவா மாகாணத்தில் 9 இலட்சத்து 42 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 பேர் நேரடியாக வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவர். இவர்களுக்கு மேலதிகமாக இருவர் போனஸ் ஆசனங்கள் மூலம் தெரிவாகுவர்.
ஊவா மாகாணத்திலுள்ள பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமே நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கமைய, மாகாணத்தின் 12 தேர்தல் தொகுதிகளிலும் 833 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை, வியலுவ, பசறை, பதுளை, ஹாலி-எல, ஊவா - பரணகம, வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளையாகிய 09 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 18 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்காக 6 இலட்சத்து 9 ஆயிரத்து 966 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இம் மாவட்டத்தின் 515 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடத்தப்படவுள்ளன. பதுளை மாவட்டத்திற்கென பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் 04 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மொனராகலை மாவட்டத்தில் பிபிலை, மொனராகலை. வெல்லவாய ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 14 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக இம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 இலட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 318 வாக்குச் சாவடிகளில் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. மொனராகலை மாவட்டத்திற்கென பதிவு செய்யப்பட்ட 12 அரசியல் கட்சிகள் 07 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 323 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
ஊவா மாகாண சபை தேர்தல் கடமைகளுக்கென 12,500 அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பலர் நேற்றும் எஞ்சியோர் இன்றும் தமக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் தொகுதிகளுக்கு செல்லவுள்ளனர்.
இதேவேளை, வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் இன்று வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன. நாளை சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையத்திலும் 30 தொடக்கம் 40 வரையிலான அலுவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை முதலாவது தபால் மூல வாக்கின் பெறுபேறுகள் 20 ஆம் திகதி இரவு 10 முதல் 11 மணிக்கிடையில் வெளியிடலாமென எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
பாதுகாப்பு
தேர்தல் நடைபெறும் மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.
இதற்கமைய. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், விசேட பொலிஸ் அதிரடிப் படை, பொலிஸ் ரோந்து சேவை, கலகத் தடுப்பு பொலிஸார் உள்ளிட்ட 11 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தொழில் செய்யும் வாக்காளர்கள் தமக்குரிய தேர்தல் தொகுதிக்கு உரிய நேரத்தில் சென்று வாக்களிப்பதற்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறையினை வழங்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் தொழில் தருனர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மாகாண சபைச் சட்ட விதிமுறைப்படி கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் யாவும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.
ஊவா மாகாண சபை ஜுலை 11 ஆம் திகதி கலைக்கப்பட்டது. புதிய மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜுலை 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 06 ஆம் திகதி வரையில் கையேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.