9/05/2014

| |

2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் படைப்பாளிகளுக்கும்  எழுத்தாளர்களுக்கும் விசேட சலுகைகள் வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக கலாசார அமைச்சர் ரீ. பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். எழுத்தாளர்களுடைய கடந்த கால கோரிக்கைகளை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டுக்கான தேசிய சாஹித்திய விருது வழங்கல் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது 2013 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சிறந்த தமிழ், சிங்கள, ஆங்கில நூல்களுக்கு சாஹித்திய விருது வழங்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
கடந்த ஆறு மாத காலமாக சிறந்த நூல்களை தெரிவு செய்வது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. படைப்புத்துறை என்பது நாட்டின் முன்னேற்றத்தையும் புதிய முன்னெடுப்புகளையும் அளவிடும் அளவு கோலாகவே கருதப்படுகிறது. புத்தகக் கண்காட்சிகளுக்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். நூல்கள் அதிகம் வாசிக்கப்படுவதோடு, நூல் விமர்சனங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
நடுநிலையாகவும், அறிவுபூர்வமாகவும் விமர்சனங்கள் இடம்பெற வேண்டும். படைப்பாளிகளுக்கு சுதந்திரமாகவும் அமைதியாகவும் தமது படைப்புகளை மேற்கொள்ள குண்டசாலை பிரதேசத்தில் தனியான இடமொன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த வருட இறுதியினுள் இந்த இடம் திறக்கப்படும். காலி, பெரலிய பகுதியிலும் இவ்வாறான இடம் அமைக்கப்பட்டுள்ளது, படைப்பாளிகளுக்கு இங்கு தங்கியிருந்து தமது படைப்புகளை உருவாக்க அவகாசம் வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்வில் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. கலாசார அமைச்சின் செயலாளர், கலாசார திணைக்கள பணிப்பாளர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.