ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், அமைச்சருமான மர்ஹ¥ம் எம். எச். எம். அஷ்ரஃப் மரணித்த செப்டெம்பர் 16 ஆம் திகதியை தலைவர் தினமாக பிரகடனம் செய்துள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும். கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழ¨மை (14) இரவு பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு 15 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஒரு வார காலத்திற்கு கல்முனை தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தலைவர் ஞாபகார்த்த தினத்தை நினைவுகூருமுகமாக 16 ஆம் திகதி காலை கல்முனை தொகுதியிலுள்ள 30 இடங்களில் ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வுகளும், ஞாபகார்த்த உரைகள், மர நடுகை என்பனவும் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை முஸ்லிம் கோட்ட மற்றும் சாய்ந்தமருது கோட்டப் பாடசாலை மாணவர் சமூகத்திடம் தலைவர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தலைவர் பற்றிய சிறப்பு பேருரையும், அன்னாரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய குறுந்திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அங்கு தெரிவித்தார்.
இதைவிடவும் இந்த தலைவர் தின பிரகடனத்தை முன்னிட்டு ஒலுவில் பிரதேசத்தில் பிரமாண்டமான அபிவிருத்திப் பணிகள் தொடக்கி வைக்கப்படவுள்ளன. அதனை தொடர்ந்து ஒருவார காலத்திற்கு கல்முனை தொகுதியின் சகல பகுதிகளிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
இதேவேளை இன்று 16 ஆம் திகதி சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் விளையாட்டு மைதான அபிவிருத்தி, பிரதான வீதி மின் விளக்கு திட்டம் திறந்து வைத்தல். பாடசாலை அபிவிருத்திப் பணிகள். புதிய மையவாடி அபிவிருத்தி, உள்ளக வீதிகள் நிர்மாணம் என்பனவும் இடம் பெறவுள்ளன.
தலைவர் ஞாபகார்த்த தினத்தை நினைவு கூருமுகமாக முதல் தடவையாக கல்முனை தொகுதியிலுள்ள தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு 70 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கி அந்த பிரதேசங்களிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.