இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைவிட எமது நாட்டின் 13வது திருத்தச்சட்டம் மிகவும் பலம் வாய்ந்தது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை ஓரங்கட்டிவிட்டு அவர்கள் அரசியல் பயணம் செய்கின்றனர். மாகாண சபை ஏற்படுத்துவதற்கு முன்பிருந்த அபிவிருத்தியை இப்போது காணவில்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மக்களுக்கான அபிவிருத்தியை மேற்கொள்ளாத நிலையில் இன்னும் 4 வருடங்கள் அதிகாரத்தில் இருக்கப்போகும் வட மாகாண சபையை கலைத்து அல் லது பொறுப்பேற்கும் எண்ணம் அரசுக்கு கிடையாதா? என ஒரு செய்தியாளர் கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு மாகாணசபையை கலைக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. முதலமைச்சர் ஆளுநருக்கு தெரிவிக்கும் பட்சத்திலேயே இதனை செய்ய முடியும். முதலமைச்சர் ஒருவர் கூறும்வரை ஆளுநருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ கலைக்கும் அதிகாரம் கிடையாது. இதுவே 13வது திருத்தச்சட்டத்தின் சிறப்பு. இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைவிடவும் 13வது திருத்தச்சட்டம் பலம் வாய்ந்தது என்றும் கூறினார்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து அரசுக்கு முழுமையான நம்பிக்கையுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரை சந்தித்தபோது இந்தியாவின் முன்னைய அரசைப் போலவே 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறாரா? என ஒரு செய்தியாளர் கேட்டபோது.
இல்லை என பதிலளித்த அமைச்சர் எமது அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து முழு உலகுக்குமே வெளிப்படையாக கூறிவிட்டது.
பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களுடன் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்செய்ய எமது அரசாங்கம் ஆயத்தமாகவே இருக்கிறது என்றார்.
தனியார் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறுவதில்லை என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
படையினர் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிதிவெடிகள். நிலக்கண்ணி வெடிகளை அகற்றி பல உயிர்களை மீட்டுள்ளனர். முதலில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு கிரமமாக நடைபெற வேண்டிய விடயம் என்றும் பதிலளித்தார்.
வடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வீதமளவிலேயே செலவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஆளுநருடன் ஒருமித்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். ஆனால் அவர்கள் அபிவிருத்தியை புறந்தள்ளிவிட்டு அரசியல் பயணம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று வடமாகாண முதலமைச்சர் இந்தியா செல்லப் போகிறார். அவர் அரசின் அனுமதியை பெற வேண்டுமா என அமைச்சரிடம் கேட்டபோது.
அவ்வாறு முதலமைச்சர் செல்வதாக இருந்தால் அவர் நிச்சயம் அரசிடம் அனுமதி பெற்றே செல்லவேண்டும். மாகாணசபை உறுப்பினர்கள் செல்வதாக இருந்தால் முதலமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும்.
இது எமது அரசியலமைப்பில் உள்ள விடயமே என்றும் குறிப்பிட்டார்.