தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துரையாடியுள்ளது. இது அவர்களைப் பொறுத்தவரையில் வெற்றிப் பயணம் என்று அவர்களால் மட்டுமே கூறலாம். ஏனெனில் பிரதமர் மோடியை அவர்கள் நேரில் சந்தித்துவிட்டனர், தாராளமாகப் புகைப்படங்களும் எடுத்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்த்த படியே அவர்களுக்கு ஆதரவான பத்திரிகைகள் அனைத்திலும் அவை முன்பக்கங்களில் பிரசுரமாகியும் விட்டன.
எனவே இச்சந்திப்பு அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வெற்றிப் பயணமே. ஏனெனில் அடுத்த தேர்தலில் தமிழ் மக்களது மனங்களை ஏமாற்ற இதுவொன்றே தமிழ்க் கூட்டமைப்பிற்குப் போதுமானது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இதுவொரு தோல்விப் பயணமே.
பிரதமர் மோடியைச் சந்தித்து அவர்கள் என்ன பேசினார்கள்? இவர்கள் தெரிவித்த விடயங்களுக்கு அவரால் அளிக்கப்பட்ட பதில் அல்லது உறுதிமொழி என்ன என்று உண்மையை அலசி ஆராய்ந்து பார்த்தால் அது இவர்களது பயணம் படுதோல்வியில் அமைந்துள்ளதைத் தெளிவாகக் காட்டு கிறது. ஆனால் இந்த உண்மையை தமிழ் மக்கள் என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை என்பதே எமது கவலையாகும்.
பிரதமராகிய பின்னர் மோடி அவர்களினல் ஆற்றப்பட்ட அவரது முதலாவது குடியரசுத்தின விழா உரை தொடர்பாக இந்திய ஊடகங்கள் பலவும் எதிர்மறையான விமர்சனங்களையே செய்துள்ளன. அவர் தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதி மொழிகளுக்கும் அவரது உரைக்கும் தொடர்பே காணப் படவில்லை என்றும் குறுகிய காலத்திலேயே சொன்னதை மறந்த தலைவர் என்றும் அவர் விமர்சிக்கப்பட்டுள்ளார். அத்தகைய பிரதமரை நம்பி தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர்.
உள்நாட்டு விவகாரத்தில் அவர் விமர்சிக்கப்பட்டாலும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு அவர் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. அதாவது எத்தகைய தீர்வு எட்டப்பட வேண்டுமானாலும் அது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே சாத்தியமாகும் என்றும் அதுவே நீடித்து நிலைக்கும் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தரும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுவே உண்மையும்கூட.
பிரதமர் மோடி தெரிவித்த இந்த உண்மையான கருத்தை தமிழ்க் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அச்சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே ஊடகங்களிடம் மறைத்துள்ளனர். ஆனால் இந்திய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் இதனைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்கள் பலவும் இதனை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் எமது நாட்டு ஊடகங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தைத் தெரிந்திருந்தும் மூடிமறைத்துள்ளன.
பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்ததாகவும், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த உறுதிமொழி வழங்கியதாகவும் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளை வெளி யிட்டன. ஒரு பக்கச் சார்பான செய்திகளையே பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டன. உள்ளூர்த் தமிழ் பத்திரிகைகள் சில வெளியிட்ட செய்திகளை பிரதமர் மோடி மொழிபெயர்த்துப் பார்த்திருந்தால் வியப்படைந்திருப்பார். நான் இவர்களுடன் பேசாத விடயங்களை பிரசுரித்திருக்கிறார்களே என்று சீற்ற மடைந்திருப்பார்.
தமிழ்க் கூட்டமைப்பு பிரதமர் மோடியைச் சந்தித்ததை அக்கட்சியினால் வெளியிடப்படும் பத்திரிகைகள் மற்றும் அவர்களது கட்சி வானொலிகள், தொலைக்காட்சிகள் இவ்வாறு கற்பனை கலந்து அல்லது தமக்குச் சார்பாக வெளியிட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் நடுநிலையான தமிழ் ஊடகங்கள் இவ்வாறு ஒருபக்கச் சார்பாக அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் கட்சி ஊடகம் போன்று செயற்படுவது மிகுந்த வேதனை தரும் விடயமாகும்.
இதே தமிழ் ஊடகங்கள் பல சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களை சிங்கள மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் சார்பாகவும், இனத்துவேசமாகவும் செய்திகளை வெளியிடுவதாக அவ்வப்போது குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இவை தாம் என்ன செய்கிறோம் என்பது பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதே கிடை யாது. தமது ஊடகப் பிரசாரத்திற்காக அல்லது ஊடக விற்பனைக்காக உண் மையை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைப்பது நியாயமாகாது என்பதே எமது வாதமாகும். அப்படியாயின் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது போல சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்காகச் செயற்படுவதை தவறு என்று கூற முடியாது.
தமிழ்க் கூட்டமைப்பின் மோடியுடனான சந்திப்பை தமிழ் மக்களிடையே மிகைப்படுத்திக் காட்ட முயல்வது அக்கட்சியின் மக்களுக்கான செயற்பா டுகளை ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல உதவாது. மாறாக மக்களின் வாக்குப் பலத்தை அககட்சி தக்கவைத்துக் கொள்ள மட்டுமே உதவும். இலங்கை அரசாங்கத்துடன் பேசியே தீர்வு எட்டப்பட வேண்டும், அதற்கான வழிவகைகள் பற்றி ஆராயுங்கள், நாங்களும் எமது பங்களிப்பை வழங்கு வோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்த கருத்தில் முக்கியமான பகுதியை விட்டுவிட்டு தமக்குச் சார்பான கருத்தை மட்டும் ஏன் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிக்க வேண்டும்? அதனை முழுமையாக நம்பி தமிழ் ஊடகங்கள் ஏன் அப்படியே செய்தியாக்க வேண்டும் என்பதே எமது கேள்வி?
இலங்கை அரசுடன் பேசித் தீர்வு காண முயலுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்த உண்மையை தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்தி தமிழ்க் கூட்ட மைப்பையும் அது தொடர்பாகச் சிந்திக்க வைத்து அதில் ஈடுபட வைத்திருக்க வேண்டும். கூட்டமைப்பினர் பொய்யைக் கூற அதனை அப்படியே கிளிப் பிள்ளைக் கதையாக இவர்களும் கேட்டு எழுதி வெளியிட அதை வாசித்த தமிழ் மக்கள் மோடி ஓடி வந்து தீர்வைப் பெற்றுத் தரப்போகிறார், நாட்டைப் பிரித்துத் தரப்போகிறார் என நம்பத் தொடங்கியுள்ளனர். இது எவ்வளவு பார தூரமானதும், விபரீதமானதுமான ஒரு செயற்பாடு என்பதை தமிழ் ஊடகங்கள் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
முன்னர் புலிகளின் காலத்தில் செய்த அதே தவறை, அதாவது புலிகள் தவறு செய்தாலும் அதைச் சாதனையாக செய்தி வெளியிட்டதை இனியும் தமிழ் ஊடகங்கள் தமிழ்க் கூட்டமைப்பினருக்குச் செய்தால் தமிழ் மக்கள் மீண்டுமொரு பேரழிவையே சந்திக்க நேரிடும். அதனால் இனி தமிழ் மக்க ளைக் காப்பாற்றும் பணியை தமிழ் ஊடகங்கள் தமது கைகளில் எடுக்க வேண்டும். தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அதற்கான நல்லதொரு சமிக்கையை தமிழ் ஊடகங்கள் காட்ட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.