8/14/2014

| |

புரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்

கியூபாவின் பொதுவுடமைப் புரட்சியாளரும், அரசியல்வாதியுமான பிடெல் காஸ்ட்ரோவின் 88ஆவது பிறந்ததினம் இன்றாகும்.
 
கியூபாவின் பிரான் அருகிலுள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில், 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் திகதி பிடெல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.
 
இயற்கையாகவே ஏழைகள் மீது அன்பு கொண்டிருந்த பிடெல், தனது பெற்றோரின் திருமணத்தினை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றார்.
 
 
 
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, தனது உயர் கல்வியை நிறைவுசெய்த பிடெல் காஸ்ரோ முதன்முறையாக கம்யூனிசம் பற்றி கேள்வியுற்ற போதிலும், அது தொடர்பில் அறிந்திராமையினால் அந்த வார்த்தையை அறவே மறந்து போயிருந்தார்.
 
1945ஆம் ஆண்டளவில் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற காலத்தில், காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாக பரிமாணம் பெற்றார்.
 
கல்லூரிக் காலத்தில் அரசியலில் ஈர்க்கப்பட்ட காஸ்ட்ரோ, கம்யூனிச கட்சிகளில் சேர்ந்து, போராட்டங்கள் நடத்தி, தனது பேச்சுத் திறமையால் மக்களைப் பெரிதும் கவர்ந்தார்.
 
 
 
1953ஆம் ஆண்டு பாடிஸ்டர் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சித் தாக்குதல் செய்ய எத்தணித்த பிடெல் காஸ்ட்ரோ, அதில் தோல்வியுற்று, கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
 
அதன்பின் மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோ கெரில்லாத் தாக்குதல்களை கற்றுத்தேர்ந்ததுடன், தேச எல்லை கடந்த மனிதநேயப் போராளியான சேகுவேராவின் அறிமுகத்தையும் பெற்றார்.
 
காஸ்ட்ரோவும், சேகுவேராவும், தோழர்களுடன் இணைந்து முன்னெடுத்த புரட்சியின் பலனாக, கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசலிச குடியரசு நிறுவப்பட்டது.
 
 
 
காஸ்ட்ரோ வசமிருந்த கியூபாவை அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
 
காஸ்ட்ரோவை கொல்வதற்கு அமெரிக்கா தீட்டிய 638 திட்டங்களும் கானல் நீராகின.
 
உலக வரைபடத்தில் கியூபாவை கோடிட்டு காட்டுவதற்கு காஸ்ட்ரோ எடுத்த முயற்சிகள், அவரை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றதுடன், சிறந்த மனிதராக அவரை பறைசாற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.
 
1976ஆண்டு முதல் கியூப ஜனாதிபதியாக இருந்த பிடெல் காஸட்ரோ முதுமை காரணமாக 2008 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து விலகி, ராஹுல் காஸ்ட்ரோவிடம் பொறுப்புக்களை கையளித்து, தாம் சிறந்த தலைவன் என்பதை மீண்டும் நிலைநிறுத்தினார்.
 
அதனையடுத்து, 2011ஆம் ஆண்டு கம்யூனிச கட்சி மற்றும் அதன் செயற்பாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பிடெல் காஸ்ட்ரோ, புயலுக்குப் பின் அமைதி என்பதற்கிணங்க தனது இறுதிகாலத்தினை ஓய்வாகவும், அமைதியாகவும் இனிதே கழித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.