8/13/2014

| |

மட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகாயம்

 மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் இன்று மாலை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு 3 பொலிஸாரும் 2 பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இன்று மாலை எட்டு மணியளவில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா பனையறுப்பான் எனுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
கள்ளச்சாராய விற்பனையாளர்களைக் கைது செய்வதற்காக அங்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
எட்டுப் பேர் சென்ற பொலிஸ் அணியில் மூவர் கிராமவாசிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.
போலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்ஹ (60217) மற்றும் விக்கிரமசிங்ஹ (43029) ஆகியோர் மிக மோசமாகத் தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான பொலிஸாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகக் கூறப்படும் கிராமவாசியான வள்ளியம்மை (வயது 52) என்பவர் வயிற்றில் காயம்பட்ட நிலையிலும், ஆறுமுகம் சறோஜினி (வயது 24) என்பவர் கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையிலும் சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
கொக்கட்டிச்சோலைப் பகுதிக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.