2014 ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் கூட்டணி கட்சிக்கு வாக்களிப்பதே என்று வேட்பாளர் ஏ எம் எம் முஸம்மில் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களுடன் குரதலாவ கந்துரு தெக்க ஜும்மா பள்ளிவாயிலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய வேட்பாளர் ஏ எம் எம் முஸம்மில் மேற்படி கருத்தை தெரிவித்தார் . அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்;
‘ஆளும் இவ்வரசாங்கத்தின் கீழ் சிறும்பான்மை முஸ்லிம்கள் பாதுகாப்பு, உரிமை, இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
பிரிவினை வாதத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக செயற்பட்ட இந்நாட்டு முஸ்லிம்கள் இந்நாட்டில் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதனை உளப்பூர்வமாகவும்இ இலங்கையர் என்ற அபிமானத்துடனும் வெற்றிக் களிப்பைக் கொண்டாடினார்கள்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த செய்தியை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்த வேளை ‘இந்நாட்டில் இனிமேல் சிறுபான்மையினர் எனும் ஓர் இனம் இல்லை. நாம் இலங்கையர் என்ற ஒரு இனம் மட்டுமே உள்ளது ‘ என்று உலகிற்கு கூறினார். இக்கூற்றில் முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்தனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவப் பிரஜைகள் என்ற அபிமானமும்இகௌரவமும் நமக்கு உண்டு என்ற எண்ணப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. ஆனால் இந்த எண்ணம் தற்காலிகமானது என்ற ஆதங்கம் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு சமகால நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளதும் கசப்பான உண்மையாகும்.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலுடன் வீரியம் கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் மஹியங்கனை பள்ளிவாசலுக்குள் பன்றியை வெட்டி வீசி .தாக்குதல் நடத்தி அதை நிரந்தரமாக பூட்டிவிட்ட முயற்சி வரை நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரலானது எதேச்சையாக ஏற்பட்டவை அல்ல.
மாறாக மிகவும் திட்டமிட்டதொரு நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. நாம் எதிர்கொண்ட சவால்களை இலகுவில் மறந்து விட முடியாது. ஆகவே நாம் நமது பிரதி நிதித்துவத்தை உறுதி செய்து கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. நாம் எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான மீண்டுமொரு சந்தர்ப்பத்தை அடைந்துள்ளோம். இந்த பிரதி நிதித்துவத்தை நாம் எவ்வாறு அடைந்து கொள்ளாலாம் என்பதுபற்றி எம்மத்தியில் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே 2௦14 இல் நடைபெற்ற மாகாண சபைதேர்தல்களில் கடந்த மாகாண சபைகளில் எவ்வாறு முஸ்லிம் பிரதிநிதித்துவம் சிதைக்கப் பட்டது என்பதை நாம் அனுபவ ரீதியாக கண்டுள்ளோம்.
நடந்து முடிந்த வடக்கு, மத்திய. வடமேல், தென் மாகண சபைகளுக்கான தேர்தல்களில் முஸ்லிம்கள் தமது இலக்கை அடைந்தார்களா ?
இல்லை. முஸ்லிம்கள் தோற்றுப் போனார்கள். மிகச் சுருக்கமாக சொன்னால் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் தமிழர்களின் மொத்த சதவிகிதம் பதினைந்தாக இருந்தாலும் அவர்கள் இருபத்தி ஐந்து வீதமான பிரதிநிதிகளை பெற்றுள்ளார்கள். முஸ்லிம்களோ ஏற்கனவே இருந்த மொத்த உறுபினர்களில் பத்து பிரதிநிதிகளை இழந்துள்ளனர். கண்டிமாவட்டத்தில் ஏற்கனவே ஆறு முஸ்லிம் பிரதிநிதிகளை கொண்டிருந்த நிலை இன்று மூவருக்குள் மட்டுப்பட்டுள்ளது மாத்தளை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் பறிகொடுக்கப் பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்திலும் முன்பு நால்வராக இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் தற்போது ஒருவராக மாறியுள்ளது குருநாகல் மாவட்டத்திலும் நால்வராக இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் தற்போது ஒருவராக்கப் பட்டுள்ளது. அதே போல் தென்மாகாண சபையிலும் ஆறாக இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் மூன்றாக குறைக்கப் பட்டுள்ளது. சமகால அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வாக்களிக்க தெரியாத இ இலக்கு தெரியாமல் பயணிக்கும் ஒரு சமூகமாகவே நாம் இருந்து வருகின்றோம். இந்த நிலைமைகளை நாம் நோக்க வேண்டும்.
மு கா – அ இ ம க கூடினைவு ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுத்தருமா ?
ஊவா மாகாண முஸ்லிம் பிரதிநிதிதுவமொன்றை பெறுவதில் சாத்தியப் பாடான நிலைமையொன்றை ஏற்படுத்த எமது மலையக முஸ்லிம் கவுன்சில் பாரியதொரு முயற்சியில் ஈடுபட்டது. இதனடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். தேசிய ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்த பாரிய முயற்சிகளின் பின்னணியிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து ஊவா மாகாண சபைக்கு போட்டியிடுவதாக முடிவெடுக்கப் பட்டு இன்று அதற்கு செயல் வடிவம் கொடுக்கப் பட்டுள்ளது. தேசிய ரீதியாக இன்றைய முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துள்ள சமூக சவால் களுக்கு ஒரு தீர்வாகவும் எமது பிரதேச அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கிலும் நாம் மேற்கொண்ட இம்முயற்சி ஊவா மாகாண முஸ்லிம்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொரு நிகழ்வாகும்.
ஆளுந்தரப்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தமுடியாதளவு இன்றைய அரசு முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பதுளை மாவட்டத்தின் மூன்று தொகுதிகளை மொன்றாகளை மாவட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ள நிலையில் எமது பதுளை மாவட்ட முஸ்லிம் வாக்கு வங்கியை அவதானத்தில் கொண்டு கணிப்பிடும் போது சுமார் முப்பதாயிரம் விருப்பு வாக்குகளை பெரும் வேட்பாளர்களே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பெறுகின்றார். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியினூடாக ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவது என்பது எந்த வகையிலும் முடியாத காரியம் என்பதே உறுதியான உண்மையாகும்.
எனவே இந்த யதார்த்தமான களநிலவரங்களை மிக நுணுக்கமாக ஆய்வுசெய்து பலகட்ட பேச்சுவார்தைகள நடத்தி மேற்படி ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து போட்டியிடுவதன் மூலம் சுமார் பனிரெண்டாயிரம் வாக்குகளை பெறும் சந்தர்ப்பத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெறலாம் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்க வேண்டிய முப்பதாயிரம் வாக்குகளைபார்க்கிலும் குறைவாக சுமார் இருபத்தி ஐயாயிரம் வாக்குகளை எமது ‘ஜனநாயாக ஐக்கிய முன்னணிக்கு’ வழங்கினால் எமக்கு இரண்டு உறுப்பினர்களை பெறலாம். என்று கணித்து இன்று அதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.