கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 08 கிராமங்களில் பல்தேவைக் கட்டடங்களுக்கான அடிக்கல்கள்; இன்று புதன்கிழமை (27) கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் நாட்டிவைக்கப்பட்டன.
சேத்துக்குடா, திமிலைதீவு, வீச்சுக்கல்முனை, புளியந்தீவு, வெட்டுக்காடு, மாமாங்கம், சத்துருக்கொண்டான், கல்லடி ஆகிய கிராமங்களில் இந்த அடிக்கல்கள் நாட்டப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.
ஒவ்வொரு கட்டட நிர்மாணத்துக்கும்; தலா 10 இலட்சம் ரூபாய் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வெள்ளக்குட்டி தவராஜா தெரிவித்தார்.
இதுவரை காலமும் மேற்படி கிராமங்களில் பல்தேவைக் கட்டடம் இல்லாமையால் கூட்டங்களை நடத்துவதற்கும் ஒன்றுகூடலில் ஈடுபடுவதற்கும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில், கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின்; கீழ் பல்தேவைக் கட்டடத்துக்கு முன்னுரிமை அளித்ததாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வுகளில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி.பிரசாந்தன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் உட்பட பலர்; கலந்துகொண்டனர்