விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையில் மிக மூர்க்கமான போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது.
இலங்கைப் படையினர் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டிப் படை நடத்தினர். புலிகளும் பயங்கர எதிர்த்தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். பிரதான தெருக்களில் கூட எந்நேரம் என்ன நடக்கும் என்பது தெரியாது. வெடிச் சத்தம் கேட்டால் பொது ஜனம் ஒடுங்கி விடும்.
இவ்வாறான ஒரு காலப் பகுதியில் முன்னரவு நேரத்தில் அக்கரைப் பற்றிலிருந்து பொத்துவிலுக்கு முச்சக்கர வண்டியொன்றில் சென்றேயாக வேண்டிய இக்கட்டில் இருந்தார்கள் அவர்கள்.
அவர்களில் அடங்கியோர் யார் யாரெனில் எனக்கு மிகவும் பிடித்தமான, 'விளக்கம்' உள்ள ஊடகவியலாளர் நண்பர், அவரது நண்பரும் இளம் மனைவியும் அவர்களது கைக் குழந்தையும், முச்சக்கர வண்டிச் சாரதியும். முக்கியமான பிரச்சனை என்னவெனில் இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்.
அக்கரைப் பற்றிலிருந்து பொத்துவிலுக்குச் செல்வதானால் திருக்கோயில், தாண்டியடி, காஞ்சிரங்குடா, கோமாரி ஆகிய தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களைத் தாண்டித்தான் போக வேண்டும். இந்த ஊர்களில் மிகவும் ஆபத்தான பிரதேசமாக இருந்தது காஞ்சிரங்குடா. இந்த இடத்திலிருந்து விடுகலைப் புலிகளின் பிரதேசமான கஞ்சிக்குடிச்சாறுக்குத் தொடர்புப் பாதை உண்டு.
சமாதானம் நிலவிய காலங்களில் காஞ்சிரங்குடாப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கனோடு சர்வ சாதாரணமாக நடமாடினார்கள். பஸ்களில் ஆயுதங்களோடு பயணம் செய்தார்கள்.
இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் பலர் காணாமல் போயுள்ளனர். பலர் படுகொலையாகியுள்ளனர். வயல் செய்தவர்கள், கூலி வேலை செய்தவர்கள், சிறு வியாபாரங்களில் ஈடுபட்டவர்கள், பயணங்களில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் என்று முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஒரு பெரும் 'துன்பியல் வரலாறு' இப்பிரதேசத்தில் நடந்து முடிந்திருக்கிறது.
எனவே இப்பகுதியால் ஒரு முஸ்லிம் பயணம் செய்வது ஒன்றில் வாழ்வு அல்லது மரணம்! குறிப்பிட்ட தமிழ்ப் பிரதேசங்கள் கழியும் வரை உயிரைக் கையில் பிடித்தபடியே அவர்களது பயணங்கள் நடந்திருக்கின்றன. நான் எழுதுவதைப் பொத்துவில் சார்ந்த எந்த முஸ்லிமிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
பயணம் கிளம்பிய முச்சக்கர வண்டி சரியாக காஞ்சிரங்குடாக் காட்டுப் பகுதியில் பழுதடைந்து நின்றுவிட்டது.
அதிலிருந்த அனைவரதும் இரத்தம் உறைய ஆரம்பித்தது. கைக்குழந்தை பசியால் அழத் துவங்க, அந்த இளம் தாய் முலையூட்டினாள். ஆனால் குழந்தை கடும் பசியால் தொடர்ந்து அழுதது. வாழ்வின் அந்திம நேரத்தை நெருங்கி விட்டோம் என்ற அச்சத்தில் அந்தத் தாயின் முலையிலிருந்து பால் சுரக்கவில்லை.
பிள்ளையோ கட்டுப்படுத்த முடியாமல் அழுதது... எந்த வழியும் இல்லை... மரணத்தை அவர்கள் எதிர்பார்த்திருந்த போது...
காட்டுப் பகுதிக் குடிசைகளிலிருந்து குழந்தை அழுகை ஒலி கேட்டுச் சில தமிழ்ப் பெண்கள் எதையும் பொருட்படுத்தாமல் தெருவுக்கு ஓடி வந்தார்கள். அங்கே ஒரு முஸ்லிம் இளம்தாய் பாலூட்ட முடியாமல் கைக் குழந்தையுடன் கண்ணீர் உகுத்து நின்றதைக் கண்டார்கள்.
நமது ஊடக நண்பர் பயத்தில் அண்ணத்தோடு ஒட்டிக் காய்ந்து போன நாக்கைப் பயன்படுத்திக் குளறிய படி விடயத்தைச் சொன்னார். அந்தக் குடிசைகளிலிருந்து சில ஆண்களும் ஒவ்வொருவராக அங்கு வர ஆரம்பித்தனர்.
முன்னால் நகர்ந்த ஒரு தமிழ்ப் பெண், 'பிள்ளையைத் தா தங்கச்சி!' என்று கைகளுக்குள் கோதியெடுத்தாள். அங்கிருந்த எந்த ஆண் மகனையும் சட்டை செய்யாமல் சட்டையை உயர்த்தித் தனது முலையை அந்தக் குழந்தையின் வாய்க்குள் திணித்தாள்!
கதையைச் சொல்லி நிறுத்தி, எனது ஊடக நண்பர் ஒரு கணம் நிதானித்து விட்டு 'இங்கே பாருங்கள்!' என்று தனது இரண்டு கரங்களின் மேற்புறங்களையும் எனது முகத்துக்கு நேரே நீட்டினார்.
அவரது கரங்களில் இருந்த மயிர்கள் அனைத்துமே சிலிர்த்து நிமிர்ந்திருந்ததை -
அல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்! நன்றி முகனூல்