8/20/2014

| |

இடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு செல்கிறது

திருகோணமலை மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு பல்கட்சி உறுப்பினர்கள் சென்று பார்வையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பில், கிழக்கு மாகாண சபையில் காரசாரமான விவாதம் ஒன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.மாகாண சபை உறுப்பினர் மொகமட் ரமலான் அன்வரால் இது தொடர்பான அவசர பிரேரணையொன்று சபையில் சமர்பிக்கப்பட்டது.
இந்த விவாதத்தின் போது, உறுப்பினர்களால் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெற்று உண்மை நிலையை அறிய ஒரு வார காலத்திற்குள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவோன்றை நேரில் அழைத்து செல்வதாக முதலமைச்சரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இடிந்ததா, இடிக்கப்பட்டதா?


அந்த விவாதத்தில் உரையாற்றிய ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களில் பலரும், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பள்ளிவாசல் இராணுவத்தினாலே இடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தும் வகையில் உரையாற்றினார்கள்.
இராணுவ அதிகாரியுடன் அந்த இடத்தை பார்வையிட சென்றிருந்த தன்னிடம் இயற்கை அனர்த்தம் காரணமாகவே அப்பள்ளிவாசல் இடிந்ததாக கூறப்பட்டது என, இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கூறினார்
முதலமைச்சரின் பதில் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என மொகமட் அன்வர் ரமலான் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கருமலையூற்றுப் பள்ளிவாசல், இராணுவத்தினால் இடிக்கப்பட்டதா ? அல்லது இயற்கை அனர்தம் காரணமாக இடிந்ததா ? என்பது தொடர்பில் முதலமைச்சர் நேரடியான விளக்கம் எதையும் அளிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.