மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் மக்கள் நடமாட்ட அதிகமாகவுள்ள பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகளை அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்படாத நிலையில் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பது பற்றி தமது சங்கம் ஆலோசித்துவருவதாக மண்முனை வடக்கு பிரதேச மாதர் கிராம அபிவிருத்தி சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச மாதர் கிராம அபிவிருத்தி சங்க சம்மேளனத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் கருத்து தெரிவிக்கையில்,
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மக்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ள மதுபானசாலைகள் அகற்றப்படவேண்டும் என பல தடவைகள் கோரிக்கை விடுத்துவருகின்றோம்.
அண்மையில் கூட இது தொடர்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி மாவட்ட அரசாங்க அதிபரிடம் இது தொடர்பிலான மகஜர் ஒன்றினையும் கையளித்தோம்.ஜனாதிபதி அவர்களுக்கும் இது தொடர்பில் கடிதம் ஒன்றிணை அனுப்பியுள்ளோம்.
ஆனால் இதுவரையில் இந்த மதுபானசாலைகளை அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கான எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பது கவலைக்குரியதாகும்.
மட்டக்களப்பு,கூழாவடி பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் குடும்பநல மருந்தகம் மற்றும் ஆலயம்,தனியார் கல்வி நிலையம் என்பன உள்ளன.அத்துடன் பிரசித்திபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயமும் உள்ளது.
அண்மையில் ஆலயத்தின் உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அப்பகுதியால் சென்ற பெண்கள் குறித்த மதுபானசாலையினால் பெரும் தொந்தரவுக்குள்ளானதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.அப்பகுதியில் பெருமளவான மக்கள் தினமும் நடமாடுவதாலும் குடியிருப்பு நிறைந்த பகுதியென்றபடியாலும் தொடர்ச்சியாக பொதுமக்கள் பொதுவாக பெண்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
அதுபோன்று சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்துக்கு அருகிலும் மதுபானசாலை உள்ளதுடன் அதிகவு பொதுமக்கள் நடமாடும் பகுதியாகவும் உள்ளது.அத்துடன் கல்லடியில் பிரதான வீதியில் அருகருகில் இரண்டு மதுபான சாலைகள் உள்ளன.அப்பகுதியில் பிரபலமான அம்மன் ஆலயமும் உள்ளன.
இந்த மதுபானசாலைகள் அனைத்தும் அகற்றப்படவேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும்.இந்த மதுபானசாலைகளினால் எமது பிரதேசத்தினை சேர்ந்த பெண்கள் மற்றும் பிள்ளைகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர்.
இதுதொடர்பில் உரியவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.அவ்வாறு அல்லாத பட்சத்தில் குறித்த மதுபானசாலைகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்துவது தொடர்பில்; ஆலோசனை செய்துவருகின்றோம்.இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கையெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்