யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விடுதலை
பருத்தித்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றங்களால் விடுவிப்பு
யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 74 பேரையும் பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்கள் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளன.
இந்திய இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த 74 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் பருத்தித்துறை மற்றும் எழுவை தீவு கடற்பரப்பிற்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர்.
அதன்போது, காங்கேசன்துறை கடற்படையினர் குறித்த மீனவர்களை கைதுசெய்து யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் குறித்த மீனவர்களை பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, மேற்படி மீனவர்கள் எதிர்வரும் 25ம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக மேற்படி வழக்கு நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கடந்த மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 51 மீனவர்கள் மற்றும் கடந்த மாதம் 21 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 18 மீனவர்கள் உட்பட நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய 5 மீனவர்கள் உட்பட 74 பேரையும் பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதவான் எச்.குமாரசாமி மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின் - குமார் ஆகியோர் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.