பதுளை மாவட்டம் 10 கட்சிகள் 04 சுயேச்சைகள்
மொனராகலை மாவட்டம் 10 கட்சிகள் 07 சுயேச்சைகள்
32 (+2) = 34 உறுப்பினர்களை தெரிவு செய்ய 617பேர் போட்டி
‘துஆ’ சின்னத்தில் முஸ்லிம் கட்சிகள் ஓரணியில் குதிப்பு
ஊவா மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதம் 11 ஆம் திகதி கலைக்கப்பட்ட ஊவா மாகாண சபைக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று நண்பகலுடன் முடிவடைந்தது.
இதற்கமைய 22 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன. இவைகளின் சார்பில் 617 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மொனராகலை, பதுளை மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஊவா மாகாண சபைக்கு 34 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் 32 பேர் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். இருவர் போனஸ் ஆசனங்கள் மூலம் தெரிவாகுவர் ஊவா மாகாணத்தில் 9 இலட்சத்து 42 ஆயிரத்து 730 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக செப்டெம்பர் 20 ஆம் திகதியன்று 833 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்புகள் நடத்தப்படவுள்ளன.
பதுளை மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 6 இலட்சத்து 9 ஆயிரத்து 966 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இம் மாவட்டத்தின் 515 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடத்தப்படவுள்ளன. பதுளை மாவட்டத்திற்கென பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் 04 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 294 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 3 இலட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 318 வாக்குச் சாவடிகளில் தேர்தல்கள் நடத்தப்படவிருப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. மொனராகலை மாவட்டத்திற்கென பதிவு செய்யப்பட்ட 12 அரசியல் கட்சிகள் 07 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 323 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
ஊவா மாகாண சபை ஜுலை 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய ஜுலை 16 ஆம் திகதி வேட்புமனு ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதற்கமைய. ஜுலை 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 06 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை யில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமிருந்து வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுமார் 48 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை மையப்படுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்தும். சுயேச்சைக் குழுக்களிலிருந்தும் இருபத்தைந்து முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் மகியங்கனை தேர்தல் தொகுதியில் 93 ஆயிரத்து முன்னூற்று எண்பத்தேழு பேரும். வியலுவை தொகுதியில் 50 ஆயிரத்து அறுநூற்று நாற்பத்தெட்டு பேரும். பசறைத் தேர்தல் தொகுதியில் 61 ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்து மூன்று பேரும். பதுளை தேர்தல் தொகுதியில் 54 ஆயிரத்து முன்னூற்று இருபத்தேழு பேரும். ஹாலி-எலை தேர்தல் தொகுதியில் 68 ஆயிரத்து இருநூற்று எழுபத்தெட்டு பேரும். ஊவா - பரணகமை தேர்தல் தொகுதியில் 61 ஆயிரத்து தொளாயிரத்து இருபத்தைந்து பேரும்.
வெலிமடை தேர்தல் தொகுதியில் 73 ஆயிரத்து முன்னூற்று எட்டு பேரும். பண்டாரவளை தேர்தல் தொகுதியில் 82 ஆயிரத்து இருபத்தைந்து பேரும். அப்புத்தளை தேர்தல் தொகுதியில் 64 ஆயிரத்து நூற்று முப்பந்தைந்து பேருமாக ஆறு இலட்சத்து ஒன்பதாயிரத்து தொளாயிரத்து அறுபத்தாறு பேர் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் வாக்காளர்களாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விசேட அம்சங்கள்:
இத்தேர்தலில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த ஹரின் பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஊவா மாகாண சபை உறுப்பினராக இருந்த பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளர் கே. வேலாயுதம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். லுணுகலை பிரதேச சபையின் இ. தொ. கா. உறுப்பினராக இருந்த ஆறுமுகம் கணேசமூர்த்தி ஆளும் கட்சி சார்பாகவும். அச்சபையின் எதிர்க் கட்சி உறுப்பினரான வேலாயுதம் உருத்திர தீபன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் போட்டி யிடுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி பதுளை மாவட்டப் பட்டியலில் இ. தொ. கா. சார்பாக இருந்த முன்னாள் பிரதி கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன். இ. தொ. கா. சார்பாக இருந்த முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் எம்.பி. லோகநாதன், மக்கள் விடுதலை முன்னணி சார்பாக இருந்த முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் பொன்னுசாமி பூமிநாதன். முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கே. வேலாயுதத்தின் புதல்வனான உருத்திர தீபனும் போட்டியிடுகின்றனர்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான். லுணுகலை பிரதேச சபை உறுப்பினராக இருந்த ஆறுமுகம் கணேசமூர்த்தி, வெலிமடை மாவட்டத் தலைவர் ஆறுமுகம் சிவலிங்கம் ஆகியோர் இ. தொ. கா. சார்பாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பசறைத் தொகுதி அமைப்பாளரும். ஜனாதிபதி இணைப்புச் செயலாளருமான வடிவேல் சுரேஷ். மலையக மக்கள் முன்னணி சார்பாக அம் முன்னணியின் முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினருமான அ. அரவிந்குமார். தொழிலாளர் தேசிய சங்கம் சார்பாக எஸ். இராசமாணிக்கம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் தனியாகவும். மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடுகின்றன.
பெண் பிரதிநிதித்துவம் :
ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பட்டியல்களில் மொத்தம் பதினொரு பெண்கள் போட்டியிடும் அதேவேளை மூன்று புத்த பிக்குகளும் களம் இறங்கியுள்ளனர்.