8/31/2014

| |

பொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பயணம்

மிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துரையாடியுள்ளது. இது அவர்களைப் பொறுத்தவரையில் வெற்றிப் பயணம் என்று அவர்களால் மட்டுமே கூறலாம். ஏனெனில் பிரதமர் மோடியை அவர்கள் நேரில் சந்தித்துவிட்டனர், தாராளமாகப் புகைப்படங்களும் எடுத்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்த்த படியே அவர்களுக்கு ஆதரவான பத்திரிகைகள் அனைத்திலும் அவை முன்பக்கங்களில் பிரசுரமாகியும் விட்டன.
எனவே இச்சந்திப்பு அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வெற்றிப் பயணமே. ஏனெனில் அடுத்த தேர்தலில் தமிழ் மக்களது மனங்களை ஏமாற்ற இதுவொன்றே தமிழ்க் கூட்டமைப்பிற்குப் போதுமானது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இதுவொரு தோல்விப் பயணமே.
பிரதமர் மோடியைச் சந்தித்து அவர்கள் என்ன பேசினார்கள்? இவர்கள் தெரிவித்த விடயங்களுக்கு அவரால் அளிக்கப்பட்ட பதில் அல்லது உறுதிமொழி என்ன என்று உண்மையை அலசி ஆராய்ந்து பார்த்தால் அது இவர்களது பயணம் படுதோல்வியில் அமைந்துள்ளதைத் தெளிவாகக் காட்டு கிறது. ஆனால் இந்த உண்மையை தமிழ் மக்கள் என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை என்பதே எமது கவலையாகும்.
பிரதமராகிய பின்னர் மோடி அவர்களினல் ஆற்றப்பட்ட அவரது முதலாவது குடியரசுத்தின விழா உரை தொடர்பாக இந்திய ஊடகங்கள் பலவும் எதிர்மறையான விமர்சனங்களையே செய்துள்ளன. அவர் தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதி மொழிகளுக்கும் அவரது உரைக்கும் தொடர்பே காணப் படவில்லை என்றும் குறுகிய காலத்திலேயே சொன்னதை மறந்த தலைவர் என்றும் அவர் விமர்சிக்கப்பட்டுள்ளார். அத்தகைய பிரதமரை நம்பி தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர்.
உள்நாட்டு விவகாரத்தில் அவர் விமர்சிக்கப்பட்டாலும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு அவர் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. அதாவது எத்தகைய தீர்வு எட்டப்பட வேண்டுமானாலும் அது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே சாத்தியமாகும் என்றும் அதுவே நீடித்து நிலைக்கும் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தரும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுவே உண்மையும்கூட.
பிரதமர் மோடி தெரிவித்த இந்த உண்மையான கருத்தை தமிழ்க் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அச்சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே ஊடகங்களிடம் மறைத்துள்ளனர். ஆனால் இந்திய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் இதனைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்கள் பலவும் இதனை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் எமது நாட்டு ஊடகங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தைத் தெரிந்திருந்தும் மூடிமறைத்துள்ளன.
பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்ததாகவும், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த உறுதிமொழி வழங்கியதாகவும் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளை வெளி யிட்டன. ஒரு பக்கச் சார்பான செய்திகளையே பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டன. உள்ளூர்த் தமிழ் பத்திரிகைகள் சில வெளியிட்ட செய்திகளை பிரதமர் மோடி மொழிபெயர்த்துப் பார்த்திருந்தால் வியப்படைந்திருப்பார். நான் இவர்களுடன் பேசாத விடயங்களை பிரசுரித்திருக்கிறார்களே என்று சீற்ற மடைந்திருப்பார்.
தமிழ்க் கூட்டமைப்பு பிரதமர் மோடியைச் சந்தித்ததை அக்கட்சியினால் வெளியிடப்படும் பத்திரிகைகள் மற்றும் அவர்களது கட்சி வானொலிகள், தொலைக்காட்சிகள் இவ்வாறு கற்பனை கலந்து அல்லது தமக்குச் சார்பாக வெளியிட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் நடுநிலையான தமிழ் ஊடகங்கள் இவ்வாறு ஒருபக்கச் சார்பாக அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் கட்சி ஊடகம் போன்று செயற்படுவது மிகுந்த வேதனை தரும் விடயமாகும்.
இதே தமிழ் ஊடகங்கள் பல சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களை சிங்கள மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் சார்பாகவும், இனத்துவேசமாகவும் செய்திகளை வெளியிடுவதாக அவ்வப்போது குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இவை தாம் என்ன செய்கிறோம் என்பது பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதே கிடை யாது. தமது ஊடகப் பிரசாரத்திற்காக அல்லது ஊடக விற்பனைக்காக உண் மையை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைப்பது நியாயமாகாது என்பதே எமது வாதமாகும். அப்படியாயின் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது போல சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்காகச் செயற்படுவதை தவறு என்று கூற முடியாது.
தமிழ்க் கூட்டமைப்பின் மோடியுடனான சந்திப்பை தமிழ் மக்களிடையே மிகைப்படுத்திக் காட்ட முயல்வது அக்கட்சியின் மக்களுக்கான செயற்பா டுகளை ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல உதவாது. மாறாக மக்களின் வாக்குப் பலத்தை அககட்சி தக்கவைத்துக் கொள்ள மட்டுமே உதவும். இலங்கை அரசாங்கத்துடன் பேசியே தீர்வு எட்டப்பட வேண்டும், அதற்கான வழிவகைகள் பற்றி ஆராயுங்கள், நாங்களும் எமது பங்களிப்பை வழங்கு வோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்த கருத்தில் முக்கியமான பகுதியை விட்டுவிட்டு தமக்குச் சார்பான கருத்தை மட்டும் ஏன் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிக்க வேண்டும்? அதனை முழுமையாக நம்பி தமிழ் ஊடகங்கள் ஏன் அப்படியே செய்தியாக்க வேண்டும் என்பதே எமது கேள்வி?
இலங்கை அரசுடன் பேசித் தீர்வு காண முயலுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்த உண்மையை தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்தி தமிழ்க் கூட்ட மைப்பையும் அது தொடர்பாகச் சிந்திக்க வைத்து அதில் ஈடுபட வைத்திருக்க வேண்டும். கூட்டமைப்பினர் பொய்யைக் கூற அதனை அப்படியே கிளிப் பிள்ளைக் கதையாக இவர்களும் கேட்டு எழுதி வெளியிட அதை வாசித்த தமிழ் மக்கள் மோடி ஓடி வந்து தீர்வைப் பெற்றுத் தரப்போகிறார், நாட்டைப் பிரித்துத் தரப்போகிறார் என நம்பத் தொடங்கியுள்ளனர். இது எவ்வளவு பார தூரமானதும், விபரீதமானதுமான ஒரு செயற்பாடு என்பதை தமிழ் ஊடகங்கள் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
முன்னர் புலிகளின் காலத்தில் செய்த அதே தவறை, அதாவது புலிகள் தவறு செய்தாலும் அதைச் சாதனையாக செய்தி வெளியிட்டதை இனியும் தமிழ் ஊடகங்கள் தமிழ்க் கூட்டமைப்பினருக்குச் செய்தால் தமிழ் மக்கள் மீண்டுமொரு பேரழிவையே சந்திக்க நேரிடும். அதனால் இனி தமிழ் மக்க ளைக் காப்பாற்றும் பணியை தமிழ் ஊடகங்கள் தமது கைகளில் எடுக்க வேண்டும். தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அதற்கான நல்லதொரு சமிக்கையை தமிழ் ஊடகங்கள் காட்ட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
»»  (மேலும்)

| |

புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும்

2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும்.
அதில் இக்கூட்ட மைப்பினர் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமிழ் மக்களை ஆளும் தகுதி அவர்களுக்கே உள்ளது எனவும், அவர்களது அங்கீகாரத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தியே தாம் தேர்தலில் போட்டியிடு வதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படியாயின் புலிகள் தொடர்பாக இன்று முன்வைக் கப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றச் சாட்டுக்களுக்கும் பதில் கூற வேண்டியவர்கள் தமிழ்க் கூட்ட மைப்பினரே என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
புலிகள் இருந்தபோது ஒரு கதையும், இப்போது அவர்கள் இல்லையென்றதும் மற்றொரு கதையும் பேசக் கூடாது. புலிகள் செய்த பல குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பல தலைவர்களுக்கும் நன்கு தெரியும். அதனால் இவர்கள் விசாரணைக் குட்படுத்தப்பட வேண்டியவர்கள். குறைந்தது புலிகளைப் பற்றிய வெளிவராத உண்மைகளையாவது இவர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப் பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் பாரதூரமான விடயம். இலங்கை அரசாங்கம் தடை செய்த ஒரு அமைப்பை அவர்கள் தமதும், தமிழ் மக்களதும் பிரதிநிதிகள் என வர்ணித்துள்ளனர். தேர்தல் விஞ்ஞாபனம் என்பது வெறும் துண்டுப் பிரசுரம் அல்ல. அது ஒரு கட்சியின் உத்தியோகபூர்வ ஆவணம். எனவே இதற்கு தமிழ்க் கூட்டமைப்பினர் பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இன்று என்னை விமர்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பலர் அன்று புலிகளை கடுமையாக விமர்சித்தவர்களே. பதவி ஆசையால் குத்துக்கரணம் போட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பலரதும் இரட்டை வேடம் எனக்குத் தெரியும். விரைவில் அவற்றை முழுமையாக அம்பலப்படுத்து வேன் எனவும் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

தமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி

ஊடக அறிக்கை                                             
 28.08.2014
தமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி
அரசியலும் தெரியாமல், வரலாறும் தெரியாமல் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி a.sanagaryபேசுவதாக நினைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்யும் தம்பி யோகேஸ்வரன் போன்றவர்களால்தான் தமிழ்; மக்களின் பிரச்சினை நீண்டு கொண்டே போகின்றது. அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயற்பட்டு, அதன் மூலம் பிரச்சினை தீர்ந்து விட்டால் யோகேஸ்வரன் போன்றோருக்கு எதைச் சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்து அரசியல் வியாபாரம் செய்து பிழைப்பது என்ற பயத்தில் அனைத்து சக்திகளும் ஒன்று சேர்வதை தடுப்பதிலேயே குறியாக இருக்கின்றார்.
தம்பி யோகேஸ்வரன் கூறுவது போல் தமிழரசுக் கடசிக்கு எந்தளவிற்கு மதிப்பு இருந்ததோ அதைவிட பல மடங்கு மதிப்பும் மரியாதையும் மிக்க கட்சி தான் தமிழர் விடுதலைக்கூட்டணி என்பது தெரியாதது விந்தையாகவுள்ளது. அவர் குறிப்பிட்ட மதிப்புள்ள தமிழரசுக் கடசியை விட இன்னும் பலமான மதிப்புள்ள ஒரு கட்சியை உருவாக்கி ஒற்றுமையுடன் செயற்பட்டால்தான தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நோக்கத்தில்தான் தமிழரசுக் கட்சியை தூக்கி மூட்டை கட்டி வைத்துவிடடு அனைத்து தரப்பினரையும் ஒன்று சோர்த்து தந்தை செல்வா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார், என்ற சாதாரண விடயம் கூட தெரியாமல் அரசியல் பேசுவதுதான் தமிழ் மக்களின் சாபக் கேடாகிவிட்டது

தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்கட்சியான வரலாறு தெரியாத நபர், முதன் முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விபரம்கூட தெரியாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவும், அதைப்பற்றி கருத்துக் கூறவும் என்னதகுதி இருக்கின்றது? கூட்டமைப்பில் புளொட,; தமிழர் விடுதலைக் கூடடணி; இணைந்ததை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கின்றோம் என “யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு பிரதேசவாதம்” பேசி மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்யும் யோகேஸ்வரனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையாயினும் இவ்வாறான அரசியல் வியாபாரிகளிடம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சில விடயங்களை கூற வேண்டியுள்ளது.

இவரைப் போன்றவர்கள் தமிழ் மக்களிடம் அரசியல் பேசி வியாபாரம் செய்வதை இனியும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டாது எனவேதான் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளையும் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்து ஏற்கனவே அதற்கான  நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எந்த ஒரு தமிழ் பேசும் தரப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று நினைப்பது நடக்காத காரியம். ஆனால் யோகேஸ்வரன் போன்றோரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இதைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது செய்து கொண்டிருக்கின்றது. இதன் மூலம் அவர்கள் எதனையும் சாதித்துவிட முடியாது என்பதனை கூறிவைக்க விரும்புகின்றேன். முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் இழந்த எம் மக்களுக்குத்தான் தெரியும் அவர்களின.; வலியும் வேதனையும் அதனை பார்த்த பின்பும் எமக்குள் ஒற்றுமையாக செயற்பட தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தெரியவில்லை.   எனவேதான் இந்த நிலையை நீடிக்கவிடாது, தந்தை செல்வாவின் வழியில் அனைத்து தரப்பையும் தமிழர் விடுதலைக் கூட்டணி சந்தித்து கலந்துரையாடி ஒரு நல்ல முடிவை நாடி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒற்றுமையை விரும்பாத யோகேஸ்வரனைப் போன்றோர்களுக்கு இது கசப்பாகத்தான் இருக்கும். என்ன செய்வது தமிழ் மக்களுக்கு அதுதான் சிறந்த மருந்து.

தம்பி யோகேஸ்வரன் விரும்பினால் இலங்கையில் தமிழர்களின் வரலாறு, தமிழரசுக் கட்சியின் வரலாறு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வரலாறு, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு, தமிழரசுக் கடசியின் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் தமிழத் தேசிய கூட்டமைப்பின் வரலாறு ஆகியவற்றை தெளிவாக விளக்க முடியும். அதன் பிறகாவது கூட்டங்களில் ஒழுங்காக பேசலாம்.
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி
குறிப்பு: கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களின் கருத்துபற்றி நேற்றும் இன்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதில் அறிக்கை.
»»  (மேலும்)

8/30/2014

| |

மட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை  வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 08 கிராமங்களில் பல்தேவைக் கட்டடங்களுக்கான அடிக்கல்கள்; இன்று புதன்கிழமை (27) கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான  சிவநேசத்துரை சந்திரகாந்தனால் நாட்டிவைக்கப்பட்டன. 
 
சேத்துக்குடா, திமிலைதீவு, வீச்சுக்கல்முனை, புளியந்தீவு, வெட்டுக்காடு, மாமாங்கம், சத்துருக்கொண்டான், கல்லடி ஆகிய கிராமங்களில் இந்த அடிக்கல்கள் நாட்டப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.
 
ஒவ்வொரு கட்டட நிர்மாணத்துக்கும்; தலா 10 இலட்சம் ரூபாய் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வெள்ளக்குட்டி தவராஜா தெரிவித்தார்.
 
இதுவரை காலமும் மேற்படி கிராமங்களில் பல்தேவைக் கட்டடம் இல்லாமையால் கூட்டங்களை நடத்துவதற்கும் ஒன்றுகூடலில் ஈடுபடுவதற்கும் மக்கள்  சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில்,  கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின்; கீழ் பல்தேவைக் கட்டடத்துக்கு முன்னுரிமை அளித்ததாகவும் அவர் கூறினார். 
 
இந்த நிகழ்வுகளில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி.பிரசாந்தன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் உட்பட பலர்; கலந்துகொண்டனர்
»»  (மேலும்)

8/26/2014

| |

"மனிதாபிமானம்"ஓவிய கண்காட்சி -பாரிஸ்

 "மனிதாபிமானம்"ஓவிய கண்காட்சி -பாரிஸ்


பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரிசில்  "மனிதாபிமானம்"எனும் தலைப்பிலமைந்த  தேவதாசனின் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.  கடந்த நான்காம் திகதியிலிருந்து இம்மாதம் 22ம் திகதி வரை இடம்பெற்ற கண்காட்சியின் இறுதிநாளான வெள்ளியன்று பார்வையாளர்களின் ஒன்று கூடலும்  விமர்சன கலந்துரையாடலும் நடைபெற்றது.தேவதாசன் ஓவியத்துறையில்  மட்டுமன்றி எழுத்தாளராகவும், நடிகராகவும் புகலிட இலக்கியசூழலில் நன்கே அறியப்பட்டவராவார்.





1980களில் பிரான்சிலிருந்து வெளியான தமிழ் முரசு இதழ்தொடங்கி எக்ஸில் வரையான பல மாற்று  சஞ்சிகைகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.புகலிட இலக்கிய சஞ்சிகைகளான புன்னகை,அநிச்சை போன்றவற்றின் ஆசிரியராகவும் தேவதாஸ் செயல்பட்டவராவார்.பாரிஸ்-10ல் அமைந்துள்ள "சலோன் இந்தியன்"மண்டபத்தில்  இறுதி நாளன்று இடம்பெற்ற ஒன்று கூடலில் பிரான்சின் தமிழ் இலக்கிய,அரசியல் துறைசார்ந்த பலரும்  பங்கெடுத்தனர்.




Photo de Archuny Theva.











அங்கு இடம்பெற்ற விமர்சனங்கள் கலந்துரையாடல்களாக  மாறி ஓவியங்களின் தன்மைகள்,நவீன ஓவியங்கள். சர்ரியலிசம். டாடாயிசம்.  இலங்கை இந்திய ஓவியங்கள். எல்லோராசிகிரியாஓவியங்களின்அழியா புகழ்கள்.என்றுஆரோக்கியமான விவாதமாக அன்றைய மாலைப்பொழுது கழிந்தது.
»»  (மேலும்)

| |

மேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன்

நீதி என்பது அனைவருக்கும் சமம் என்பதை பாடமாகவே கற்று செயற்பட்ட ஒரு நீதியரசரசரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நல்லூருக்குள் தனது வாகனத்தில் உலா வந்து அங்கு நின்ற பக்தாகளை விசனப்படுத்தியுள்ளார்.

வாகனத் தடையையும் மீறி உள்ளே நுழைந்து இவ்வாறு செயற்பட்டுள்ளது அவரது முறையற்ற செயற்பாட்டைக் காட்டுகின்றது என யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு பங்கு பற்றி பிரபலப்படுத்தவா மக்கள் உங்களை முதலமைச்சா பதவிக்கு தெரிவு செய்தார்கள்? என அங்கிருந்த பக்தாகள் சத்தம் போட்டனர். என்றும் ஒரு சில மீற்றாகள் நடந்து வர அலுப்புப்படும் ஒருவர் எவ்வாறு மக்களை சந்தித்து பிரச்சனைகளைத் தீhக்கப் போகின்றார் என்றும் அங்கு நின்ற மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்றும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

நல்லூர் பகுதியில் உள்ள தற்காலிக வாகனத் தடையில் இருந்து சில மீற்றா தூரத்தில் உள்ள ஒரு தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்வு ஒன்றிற்கே இவா இவ்வாறு வந்துள்ளார்.

மேவின் சில்வா நல்லூருக்குள் வாகனத்தில் வந்தமை அண்மையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)

8/25/2014

| |

அல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்!-அஸ்ரப் சிகாப்தீன்

Photo : என் பெயர் அஷ்ரஃப் சிஹாப்தீன். நான் ஓர் இலங்கையன். என்றென்றும் பலஸ்தீன் ஆதரவாளன்! (நன்றி - Fairooz Mahath )விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையில் மிக மூர்க்கமான போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. 
இலங்கைப் படையினர் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டிப் படை நடத்தினர். புலிகளும் பயங்கர எதிர்த்தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். பிரதான தெருக்களில் கூட எந்நேரம் என்ன நடக்கும் என்பது தெரியாது. வெடிச் சத்தம் கேட்டால் பொது ஜனம் ஒடுங்கி விடும்.

இவ்வாறான ஒரு காலப் பகுதியில் முன்னரவு நேரத்தில் அக்கரைப் பற்றிலிருந்து பொத்துவிலுக்கு முச்சக்கர வண்டியொன்றில் சென்றேயாக வேண்டிய இக்கட்டில் இருந்தார்கள் அவர்கள்.

அவர்களில் அடங்கியோர் யார் யாரெனில் எனக்கு மிகவும் பிடித்தமான, 'விளக்கம்' உள்ள ஊடகவியலாளர் நண்பர், அவரது நண்பரும் இளம் மனைவியும் அவர்களது கைக் குழந்தையும், முச்சக்கர வண்டிச் சாரதியும். முக்கியமான பிரச்சனை என்னவெனில் இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். 

அக்கரைப் பற்றிலிருந்து பொத்துவிலுக்குச் செல்வதானால் திருக்கோயில், தாண்டியடி, காஞ்சிரங்குடா, கோமாரி ஆகிய தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களைத் தாண்டித்தான் போக வேண்டும். இந்த ஊர்களில் மிகவும் ஆபத்தான பிரதேசமாக இருந்தது காஞ்சிரங்குடா. இந்த இடத்திலிருந்து விடுகலைப் புலிகளின் பிரதேசமான கஞ்சிக்குடிச்சாறுக்குத் தொடர்புப் பாதை உண்டு.

சமாதானம் நிலவிய காலங்களில் காஞ்சிரங்குடாப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கனோடு சர்வ சாதாரணமாக நடமாடினார்கள். பஸ்களில் ஆயுதங்களோடு பயணம் செய்தார்கள்.   

இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் பலர் காணாமல் போயுள்ளனர். பலர் படுகொலையாகியுள்ளனர். வயல் செய்தவர்கள், கூலி வேலை செய்தவர்கள், சிறு வியாபாரங்களில் ஈடுபட்டவர்கள், பயணங்களில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் என்று முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஒரு பெரும் 'துன்பியல் வரலாறு' இப்பிரதேசத்தில் நடந்து முடிந்திருக்கிறது. 

எனவே இப்பகுதியால் ஒரு முஸ்லிம் பயணம் செய்வது ஒன்றில் வாழ்வு அல்லது மரணம்! குறிப்பிட்ட தமிழ்ப் பிரதேசங்கள் கழியும் வரை உயிரைக் கையில் பிடித்தபடியே அவர்களது பயணங்கள் நடந்திருக்கின்றன. நான் எழுதுவதைப் பொத்துவில் சார்ந்த எந்த முஸ்லிமிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

பயணம் கிளம்பிய முச்சக்கர வண்டி சரியாக காஞ்சிரங்குடாக் காட்டுப் பகுதியில் பழுதடைந்து நின்றுவிட்டது. 

அதிலிருந்த அனைவரதும் இரத்தம் உறைய ஆரம்பித்தது. கைக்குழந்தை பசியால் அழத் துவங்க, அந்த இளம் தாய் முலையூட்டினாள். ஆனால் குழந்தை கடும் பசியால் தொடர்ந்து அழுதது. வாழ்வின் அந்திம நேரத்தை நெருங்கி விட்டோம் என்ற அச்சத்தில் அந்தத் தாயின் முலையிலிருந்து பால் சுரக்கவில்லை.

பிள்ளையோ கட்டுப்படுத்த முடியாமல் அழுதது... எந்த வழியும் இல்லை... மரணத்தை அவர்கள் எதிர்பார்த்திருந்த போது...

காட்டுப் பகுதிக் குடிசைகளிலிருந்து குழந்தை அழுகை ஒலி கேட்டுச் சில தமிழ்ப் பெண்கள்  எதையும் பொருட்படுத்தாமல் தெருவுக்கு ஓடி வந்தார்கள். அங்கே ஒரு முஸ்லிம் இளம்தாய் பாலூட்ட முடியாமல் கைக் குழந்தையுடன் கண்ணீர் உகுத்து நின்றதைக் கண்டார்கள்.

நமது ஊடக நண்பர் பயத்தில் அண்ணத்தோடு ஒட்டிக் காய்ந்து போன நாக்கைப் பயன்படுத்திக் குளறிய படி விடயத்தைச் சொன்னார். அந்தக் குடிசைகளிலிருந்து சில ஆண்களும் ஒவ்வொருவராக அங்கு வர ஆரம்பித்தனர்.

முன்னால் நகர்ந்த ஒரு தமிழ்ப் பெண், 'பிள்ளையைத் தா தங்கச்சி!' என்று கைகளுக்குள் கோதியெடுத்தாள். அங்கிருந்த எந்த ஆண் மகனையும் சட்டை செய்யாமல் சட்டையை உயர்த்தித் தனது முலையை அந்தக் குழந்தையின் வாய்க்குள் திணித்தாள்!

கதையைச் சொல்லி நிறுத்தி, எனது ஊடக நண்பர் ஒரு கணம் நிதானித்து விட்டு 'இங்கே பாருங்கள்!' என்று தனது இரண்டு கரங்களின் மேற்புறங்களையும் எனது முகத்துக்கு நேரே நீட்டினார்.

அவரது கரங்களில் இருந்த மயிர்கள் அனைத்துமே சிலிர்த்து நிமிர்ந்திருந்ததை - 

அல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்!      நன்றி முகனூல் 
»»  (மேலும்)

| |

சுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்வு















சுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தியை முன்னிட்டு கிழக்குமாகாண உதயம் அமைப்பின் தலைவர் விமலநாதன் ( பிரதிக்கல்விப்பணிப்பாளர் பட்டிருப்புக்கல்விவலயம்) தலைமையில் மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்றது இன்நிகழ்வில் பிரதம அதீதியாக சுவிஸ் உதயம் அமைப்பின் பொருலாளர்  க.துரைநாயகம்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் செயலாளர் பூ.பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்
இங்கு இலங்கையில் உதயம் அமைப்புடன் இணைந்து சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஏடு அமைப்பு,மாணவர் மீட்பு பேரவை உறுப்பினர்கள் கௌரவிப்பு, சுவிஸ் உதயம் அமைப்பின் பொருலாளர்  க.துரைநாயகத்தின் சேவைப் பாராட்டு ,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வறிய மாணவர்களுக்கான உதவி வழங்கல் இடம் பற்று சுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி சிறப்பு மலர் வெளியீடும்,இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றதும் சிறப்பம்சமாகும்
»»  (மேலும்)

8/24/2014

| |

தோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு-பாரிஸ்

தோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு-பாரிஸ்

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க போராளியும் சிறுபான்மை தமிழர் மகாசபையின் முதன்மை உறுப்பினருமான தோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று(சனி)  பாரிஸ் நகரில் இடம்பெற்றது.  தலித்சமூக   மேம்பாட்டு முன்னணியின் ஏற்பாட்டில்  நிகழ்த்தப்பட்ட  கூட்டத்தில் சுமார் 50பேர் வரையான சமூக ஆர்வலர்கள்  கலந்து கொண்டிருந்தனர்.தோழர் யோகரெட்ணம் அவர்களின் தலைமையில் அமர்வுகள் ஆரம்பமாயின.சிறப்புரையை சுவிஸ் நாட்டிலிருந்து கலந்துகொண்ட சிவதாசன் ஆற்றினார்.தொடர்ந்து கவிஞர் அருந்ததிஇகவிஞர் கற்சுறா(கனடா)இபெண்ணிய செயற்பாட்டாளர் விஜிஇசுதந்திர ஊடகவியலாளர் துரைசிங்கம்இஈழ விடுதலை போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தோழர் அழகிரிஇ சமூகவிடுதலை போராளி சிவநேசன்இஎழுத்தாளர் வி.ரி.இளங்கோவன் போன்றோர் உரையாற்றினர்.மேலும்  தலித் சமூக  மேம்பாட்டு முன்னணியின் சார்பில் வெளியாகும்  "வடு" வின் 21வது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது.
»»  (மேலும்)

8/20/2014

| |

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் கூட்டணி கட்சிக்கு வாக்களிப்பதே

2014 ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் கூட்டணி கட்சிக்கு வாக்களிப்பதே என்று வேட்பாளர் ஏ எம் எம் முஸம்மில் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களுடன் குரதலாவ கந்துரு தெக்க ஜும்மா பள்ளிவாயிலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய வேட்பாளர் ஏ எம் எம் முஸம்மில் மேற்படி கருத்தை தெரிவித்தார் . அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்;
‘ஆளும் இவ்வரசாங்கத்தின் கீழ் சிறும்பான்மை முஸ்லிம்கள் பாதுகாப்பு, உரிமை, இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
பிரிவினை வாதத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக செயற்பட்ட இந்நாட்டு முஸ்லிம்கள் இந்நாட்டில் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதனை உளப்பூர்வமாகவும்இ இலங்கையர் என்ற அபிமானத்துடனும் வெற்றிக் களிப்பைக் கொண்டாடினார்கள்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த செய்தியை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்த வேளை ‘இந்நாட்டில் இனிமேல் சிறுபான்மையினர் எனும் ஓர் இனம் இல்லை. நாம் இலங்கையர் என்ற ஒரு இனம் மட்டுமே உள்ளது ‘ என்று உலகிற்கு கூறினார். இக்கூற்றில் முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்தனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவப் பிரஜைகள் என்ற அபிமானமும்இகௌரவமும் நமக்கு உண்டு என்ற எண்ணப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. ஆனால் இந்த எண்ணம் தற்காலிகமானது என்ற ஆதங்கம் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு சமகால நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளதும் கசப்பான உண்மையாகும்.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலுடன் வீரியம் கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் மஹியங்கனை பள்ளிவாசலுக்குள் பன்றியை வெட்டி வீசி .தாக்குதல் நடத்தி அதை நிரந்தரமாக பூட்டிவிட்ட முயற்சி வரை நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரலானது எதேச்சையாக ஏற்பட்டவை அல்ல.
மாறாக மிகவும் திட்டமிட்டதொரு நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. நாம் எதிர்கொண்ட சவால்களை இலகுவில் மறந்து விட முடியாது. ஆகவே நாம் நமது பிரதி நிதித்துவத்தை உறுதி செய்து கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. நாம் எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான மீண்டுமொரு சந்தர்ப்பத்தை அடைந்துள்ளோம். இந்த பிரதி நிதித்துவத்தை நாம் எவ்வாறு அடைந்து கொள்ளாலாம் என்பதுபற்றி எம்மத்தியில் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே 2௦14 இல் நடைபெற்ற மாகாண சபைதேர்தல்களில் கடந்த மாகாண சபைகளில் எவ்வாறு முஸ்லிம் பிரதிநிதித்துவம் சிதைக்கப் பட்டது என்பதை நாம் அனுபவ ரீதியாக கண்டுள்ளோம்.
நடந்து முடிந்த வடக்கு, மத்திய. வடமேல், தென் மாகண சபைகளுக்கான தேர்தல்களில் முஸ்லிம்கள் தமது இலக்கை அடைந்தார்களா ?
இல்லை. முஸ்லிம்கள் தோற்றுப் போனார்கள். மிகச் சுருக்கமாக சொன்னால் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் தமிழர்களின் மொத்த சதவிகிதம் பதினைந்தாக இருந்தாலும் அவர்கள் இருபத்தி ஐந்து வீதமான பிரதிநிதிகளை பெற்றுள்ளார்கள். முஸ்லிம்களோ ஏற்கனவே இருந்த மொத்த உறுபினர்களில் பத்து பிரதிநிதிகளை இழந்துள்ளனர். கண்டிமாவட்டத்தில் ஏற்கனவே ஆறு முஸ்லிம் பிரதிநிதிகளை கொண்டிருந்த நிலை இன்று மூவருக்குள் மட்டுப்பட்டுள்ளது மாத்தளை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் பறிகொடுக்கப் பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்திலும் முன்பு நால்வராக இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் தற்போது ஒருவராக மாறியுள்ளது குருநாகல் மாவட்டத்திலும் நால்வராக இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் தற்போது ஒருவராக்கப் பட்டுள்ளது. அதே போல் தென்மாகாண சபையிலும் ஆறாக இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் மூன்றாக குறைக்கப் பட்டுள்ளது. சமகால அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வாக்களிக்க தெரியாத இ இலக்கு தெரியாமல் பயணிக்கும் ஒரு சமூகமாகவே நாம் இருந்து வருகின்றோம். இந்த நிலைமைகளை நாம் நோக்க வேண்டும்.
மு கா – அ இ ம க கூடினைவு ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுத்தருமா ?
ஊவா மாகாண முஸ்லிம் பிரதிநிதிதுவமொன்றை பெறுவதில் சாத்தியப் பாடான நிலைமையொன்றை ஏற்படுத்த எமது மலையக முஸ்லிம் கவுன்சில் பாரியதொரு முயற்சியில் ஈடுபட்டது. இதனடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். தேசிய ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்த பாரிய முயற்சிகளின் பின்னணியிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து ஊவா மாகாண சபைக்கு போட்டியிடுவதாக முடிவெடுக்கப் பட்டு இன்று அதற்கு செயல் வடிவம் கொடுக்கப் பட்டுள்ளது. தேசிய ரீதியாக இன்றைய முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துள்ள சமூக சவால் களுக்கு ஒரு தீர்வாகவும் எமது பிரதேச அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கிலும் நாம் மேற்கொண்ட இம்முயற்சி ஊவா மாகாண முஸ்லிம்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொரு நிகழ்வாகும்.
ஆளுந்தரப்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தமுடியாதளவு இன்றைய அரசு முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பதுளை மாவட்டத்தின் மூன்று தொகுதிகளை மொன்றாகளை மாவட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ள நிலையில் எமது பதுளை மாவட்ட முஸ்லிம் வாக்கு வங்கியை அவதானத்தில் கொண்டு கணிப்பிடும் போது சுமார் முப்பதாயிரம் விருப்பு வாக்குகளை பெரும் வேட்பாளர்களே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பெறுகின்றார். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியினூடாக ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவது என்பது எந்த வகையிலும் முடியாத காரியம் என்பதே உறுதியான உண்மையாகும்.
எனவே இந்த யதார்த்தமான களநிலவரங்களை மிக நுணுக்கமாக ஆய்வுசெய்து பலகட்ட பேச்சுவார்தைகள நடத்தி மேற்படி ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து போட்டியிடுவதன் மூலம் சுமார் பனிரெண்டாயிரம் வாக்குகளை பெறும் சந்தர்ப்பத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெறலாம் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்க வேண்டிய முப்பதாயிரம் வாக்குகளைபார்க்கிலும் குறைவாக சுமார் இருபத்தி ஐயாயிரம் வாக்குகளை எமது ‘ஜனநாயாக ஐக்கிய முன்னணிக்கு’ வழங்கினால் எமக்கு இரண்டு உறுப்பினர்களை பெறலாம். என்று கணித்து இன்று அதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
»»  (மேலும்)

| |

இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியான தங்கக் கட்டிகள்

கொழும்பில் இருந்து தலைமன்னார் ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (18) நள்ளிரவு 12 மணியளவில் தலைமன்னார் கிராமப் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தலைமன்னார் பொலிஸாருக்கு புலனாய்வுத்துறையினர் தகவல் வழங்கினர்.

இந்நிலையில், தலைமன்னார் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜெயரூபன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், தலைமன்னார் கிராம பகுதிக்கு சென்று தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டனர்.

தலைமன்னார் கிராம கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற ஹயஸ் வாகனம் ஒன்று நிண்டதை கண்ட பொலிஸார், குறித்த வாகனத்திற்கு அருகில் சென்று வாகனத்தில் இருந்த 3 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு வாகனத்தையும் சோதனையிட்டனர்.

இதன்போது, வாகனத்தில் காணப்பட்ட ஆடைப் பைக்குள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு தங்கக்கட்டிகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உருக்கப்பட்டு கட்டியாக்கப்பட்ட நிலையில் 56 தங்கத் துண்டுகள் அதில் காணப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட தங்கத்துண்டுகள் 11 கிலோ 828 கிராம் நிறை கொண்டது என தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இதன் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த தங்கக்கட்டிகள் தலைமன்னார் கடல் வழியாக இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டது என தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான மூவரும், கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 6 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டதோடு அவர்கள் பயணம் செய்த வாகனமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பதில் பொறுப்பதிகாரி ஏ.வி.எஸ்.சம்பிக்க, குறித்த நபர்களிடம் முழுமையான வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என கூறினார். 
»»  (மேலும்)

| |

இடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு செல்கிறது

திருகோணமலை மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு பல்கட்சி உறுப்பினர்கள் சென்று பார்வையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பில், கிழக்கு மாகாண சபையில் காரசாரமான விவாதம் ஒன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.மாகாண சபை உறுப்பினர் மொகமட் ரமலான் அன்வரால் இது தொடர்பான அவசர பிரேரணையொன்று சபையில் சமர்பிக்கப்பட்டது.
இந்த விவாதத்தின் போது, உறுப்பினர்களால் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெற்று உண்மை நிலையை அறிய ஒரு வார காலத்திற்குள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவோன்றை நேரில் அழைத்து செல்வதாக முதலமைச்சரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இடிந்ததா, இடிக்கப்பட்டதா?


அந்த விவாதத்தில் உரையாற்றிய ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களில் பலரும், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பள்ளிவாசல் இராணுவத்தினாலே இடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தும் வகையில் உரையாற்றினார்கள்.
இராணுவ அதிகாரியுடன் அந்த இடத்தை பார்வையிட சென்றிருந்த தன்னிடம் இயற்கை அனர்த்தம் காரணமாகவே அப்பள்ளிவாசல் இடிந்ததாக கூறப்பட்டது என, இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கூறினார்
முதலமைச்சரின் பதில் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என மொகமட் அன்வர் ரமலான் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கருமலையூற்றுப் பள்ளிவாசல், இராணுவத்தினால் இடிக்கப்பட்டதா ? அல்லது இயற்கை அனர்தம் காரணமாக இடிந்ததா ? என்பது தொடர்பில் முதலமைச்சர் நேரடியான விளக்கம் எதையும் அளிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
»»  (மேலும்)

8/18/2014

| |

எல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த தொன்மை வாய்ந்த பிள்ளையார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு  (18.08.2014) ஆலயம் சிரமதானப் பணிகள் இடம்பெற்றது 
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த தொன்மை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இளைஞர் அணியின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17)சிரமதானம் மூலம் ஆலய வளாகம் துப்பரவு செய்யப்பட்டு ஆலயத்திற்கும் வர்ணம் திட்டப்பட்டது
 
கடந்த 09.08.1960 இல் ஸ்தாபிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த இப் பிள்ளையார் ஆலயம் போதிலும் கடந்த கால அசாதார யுத்த சூழ்நிலையினால் கைவிடப்பட்டு பற்றைகள் சூள சேதமாக்கப்பட்டிருந்தது
 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு  (18.08.2014) இச்சிரமதானப் பணிகள் இடம்பெற்றது இச்சிரமதான நிகழ்விற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர்   பூ.பிரசாந்தன் ,பொருளாளர் ஆ. தேவராசா,தேசிய அமைப்பாளர் தவேந்திரராஜா ,செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு,குமரேசன் உள்ளிட்டவ
»»  (மேலும்)

8/17/2014

| |

வடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க கொரியா ஆதரவு!

வடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க கொரியா ஆதரவு!

ஆடை உற்பத்தி வருவாய் 2014 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலரினை எட்டியதுடன் ஒரு புதிய வளர்ச்சியினை நோக்கி பயணிக்கின்றது. இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆடை உற்பத்தி தொழில் பயிற்சிக்கான முயற்சிகளினை விரிவாக்கம் செய்வதற்கு கொரியா முதல் முறையாக மாகாண ரீதியாக வட மாகாணத்தில் அதன் தொழில் திறனை அதிகரிக்க ஆதரவு வழங்கவுள்ளது.
நாம் இன்று கொரியாவில் இருந்து ஆடை உற்பத்தி தொழில்துறைக்கான தொழில்நுட்ப ஆதரவினை பெற்றுக்கொள்கின்றோம். அத்துடன் எங்கள் ஆடை உற்பத்தி தொழில் பயிற்சி முயற்சிகள் மன்னார் மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது இந்த முயற்சி முதலில் மன்னார் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் விஸ்தரிக்கப்பட்டு அதன் பின்னர் வட மாகாணத்திலும் இந்த முயற்சிகள் தொடரும். இதற்காக கொரிய அரசுக்கும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்திற்கும் நாங்கள் நன்றியினை நல்கின்றோம். என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கூறினார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் வட மாகாணத்திற்கான அதன் முதற் கிளையினை கடந்த வாரம் மன்னாரில் ஆரம்பித்து வைத்தது. இந்த ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் ரிஷாட் மேலும் கூறுகையில், இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனமானது பயிற்சி, பரிசோதனை, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப சேவைகளை ஆடை உற்பத்தி தொழிலுக்கு வழங்குகிறது. யிஷிலி 17025 மற்றும் 9001 தரம் உடைய சர்வதேச அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்ற ஒரு உலகளாவிய மட்டத்தில் பரிசோதனை ஆய்வினையும் இந்நிறுவனம் உள்ளடக்கியுள்ளது.
2013ஆம் ஆண்டில், இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் - பயிற்சி, பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகளிலிருந்து இருந்து ஒட்டுமொத்த உயர் வருமானமாக 1.05 மில்லியன் அமெரிக்கா டொலரினை ஈட்டியது. இந்நிறுவனம் 3430 மொத்த பயிற்சி வலிமை கொண்ட 185க்கு குறையாத பயிற்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அத்துடன் 18 முதுநிலை தகுதி கொண்ட 56 வலுவான விரிவுரையாளர் குழுவை கொண்டிருப்பது அதன் துறையில் மற்றொரு அளவுகோலாகும்.
2010ஆம் ஆண்டுமுதல் 2014ஆம் ஆண்டு வரை இலங்கையினுடைய தற்காலிக ஏற்றுமதி வருவாயின் முதல் அரையாண்டு சம்பத்தியம் அதியுயர்வாக பதியப்பட்ட நிலையில் பெரியளவிலான 45% சம வீத அதிகரிப்புடன் ஒட்டுமொத்த சம்பாத்தியமாக 5410.4 மில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. அத்துடன் 2010ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் மட்டும் 3741 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாத்தியம் பதியப்பட்டது. வருடத்திற்கு வருட அடிப்படையில்,2014ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதி 57% சத வீதத்தால் உயர்வடைந்தது. அதன் தற்காலிக ஆடை ஏற்றுமதி வருவாய் 20.40% சத வீத அதிகரிப்புடன் 2400.5 மில்லியன் அமெரிக்க டொலராக அமைந்தது.
மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக் கிளை அலுவலகம் வட மாகாணத்திற்கு தேவையான ஆடை உற்பத்தி தொழில் பயிற்சிகளை வழங்கும். அமைச்சரின் கீழ் இயங்கும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் மன்னார் வரை தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தமை முதல் முறையாகும். அத்துடன் விரைவான அபிவிருத்தி நோக்கி வட மாகாண உட்கட்டமைப்பினை கட்டியெழுப்புகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எமது அரசாங்கம் மன்னார் மாவட்ட அபிவிருத்திற்காக 161 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகையினை ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில், வட மாகாண மக்கள் மத்தியில் புதிய தொழில் வாய்ப்புகளுக்கான கேள்வி தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிய தொழில்வாய்ப்புக்கான பாரிய அழுத்தமும் காணப்படுகின்றது. ஆடை உற்பத்தி தொழில் பயிற்சியினை வட மாகாணத்தில் அறிமுகம் செய்வதனால் அரசாங்கம் இங்கு அபிவிருத்தினையும் புதியதொழில் வாய்ப்புக்களினையும் உருவாக்குவதற்கான ஒரு பாதை ஏற்படுத்தப்படுகின்றது.
20 பேரடங்கிய பயிற்றுனர் தொகுதியினர் தமது ஒரு மாத பயிற்சியின் பின்னர், மன்னார் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் புதிய மாணவர்களுக்கும் ஆறு மாத காலத்துக்கான பயிற்சியினை ஆரம்பிக்கவுள்ளனர்.
ஆறுமாத பயிற்சியின் பிறகு, தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். அதன்பின்னர் உற்பத்தி விரைவில் ஆரம்பிக்கப்படும். வட மாகாண மக்களின் சார்பாக கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர்களின் மதிப்புமிக்க ஆதரவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அடுத்த ஆண்டு தையல் பயிற்சி ஆலை ஒன்றை நிர்மானிப்பதற்கான நில ஒத்துக்கீட்டினை பெற்றுக்கொள்வதற்கு மன்னார் பிரதேச செயலாளரிடம் உத்தியோபூர்வமாக நாங்கள் வேண்டுகோளை விடுவிப்போம்.
மன்னார் மாவட்டத்திற்கான இந்த முன்முயற்சிக்கு, கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் 20 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்புடைய உபகரணங்கள் அளித்துள்ளது. இதில் 13 ஜுக்கி தையல் இயந்திரங்கள், தொழில்துறைசார் துணி வெட்டும் இயந்திரம், ஏனைய இயந்திர சாதனங்கள், தளபாடங்கள் மற்றும் கணினிகள் அடங்கும். கொரிய அரசு உலகம் முழுவதும் உள்ள 44 நாடுகளுக்கு அபிவிருத்தி சார்ந்த உதவிகளையும் வழங்குகிறது. அத்துடன் வறுமையை ஒழிப்புக்கான அபிவிருத்தி திட்டம், பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், பொதுத்துறை திறன் அபிவிருத்தி திட்டம் மற்றும் இரண்டாம் நிலை கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி கல்வி துறைகளுக்கான திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் மானியம் உதவிகளை வழங்குகின்றது.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலைய நிதியுதவி திட்டத்தினால் அம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மையம் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

இந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அகதிகள்

யுத்தம் முடிந்த பின் 6,000 பேரே நாடு திரும்பியுள்ளனர்

இந்தியாவில் தங்கியிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்புவதனை நிராகரித் துள்ளதாக புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு முடிவுறுத்தப்பட்ட மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது 102526 அகதிகள் இந்தியாவிற்கு சென்று அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடமிருந்த பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இதனைக் குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
110 அகதி முகாம்களில் 68055 அகதிகள் வாழ்ந்து வருவதுடன், 34471 பேர் உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இதுவரையில் ஆறாயிரம் பேர் மட்டுமே நாடு திரும்பியுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரையில் 200 அகதிகள் மட்டுமே நாடு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் மீள் குடியேற்றப்பட்டு (தொடர்)
உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசாங்கம் அகதிகளுக்கு பல்வேறு நலன்புரி சேவைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய அகதி முகாம்களில் 30000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

| |

எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர்கள் வெள்ளைக்காரரே

எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை தொடக்கி வைத்தவர்கள் வெள்ளைக் காரர்களே. அவர்கள் இன்று அதனை விமர்சித்து எம்மைக் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தினை வலப்பனை ரூபாஹ ஸ்ரீ சித்தானந்த மகா வித்தியாலயத்தில் திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மனிதப் படுகொலைகளை இந்த நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்கள் மேற்குலக நாட்டினரே. அவர்கள் ஆரம்பித்த இந்தச் சரித்திரத்தை அவர்கள் மறந்து கதைக்கின்றனர். அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த கொடூரப் படுகொலைகளைக் கற்றதும் இவர்கள் மூலம்தான்.
இவை அனைத்தையும் மறந்து இன்று மேற்குலகு நம்மை விமர்சிக்கத் தொடங் கியிருப்பது ஆச்சரியத்துக்குரியதே.
மடுல்ல கிராமத்தில் ஆங்கிலேய வெள்ளைக்காரர்களால் 16 பேர் கற்குகையில் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் ஜனாதிபதி அங்கு நினைவு படுத்தினார்.
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக்கப் படுவதை கண்டிக்கின்றோம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கக் கூட்டம் 16.08.2014ம் திகதி கட்சியின் தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கத் தலைவர் அ.பகிரதன் தலைமையில் இடம் பெற்றது.
 
அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கிழக்கு மாகாணசபையின் முலமான வேலைவாய்ப்புக்களில் முறையற்ற இனத்துவம் பேணப்பட்டு வருவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
 
கிழக்கு மாகாணத்தில் 42வீதமாக தமிழர்களும், 38வீதமாக முஸ்லிம்களும், 20வீதமாக  சிங்களவர்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டு வரும் நிலையில் வழங்கப்படும் சிற்றுழியர் வேலை தொடக்கம் சாரதி மற்றும் முகாமைத்து உதவியாளர் வேலை வாய்ப்புக்கள் வரை தமிழர்களுக்கான வீதாசாரம் மிகமிகக் குறைந்த அளவில் வழங்கப்படுகின்றது. இதன்மூலம் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு  தகமையானவர்கள் மேலும் மேலும் ஒதுக்கப்படும் நிலையும் தனித் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அல்லது சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதினால் அன்னியொன்னியமாக வாழும் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் மத்தியில் இனக் குரோதத்தினையும், கிழக்கு மாகாணசபை மீதும் வெறுப்புணர்ச்சியினை தூண்டும் செயலாகவும் இது காணப்படுகின்றது.
 
இது தடுக்கப்பட்டு மாகாண இன வீதாசாரம் பேணப்பட வேண்டும் இல்லாத போனால் எமது  தொழிற் சங்கம் வீதியில் இறங்கி போராட தயாராக உள்ளது.எனவும்
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர்கள் பெரும் பாலும் குத்தகை வசதி அடிப்படையிலேயே வாகனங்களை கொள்வனவு செய்திருக்கிறார்கள். குறுந்தூர பேருந்து சேவையினை மேற்கொள்கின்ற அவர்களுக்கு கிழக்கு தவிர்ந்த வெளி மாகாணங்களைச் சேர்ந்த நெடுந்தூர பேருந்து சேவை வழங்குனர்களால் பல்வேறு பட்ட நெருக்கடிகள் காணப்படுகின்றன.
 
வெளி மாகாணங்களைச் சேர்ந்த நீண்ட தூர சேவை வழங்கும் பேருந்துக்கள் குறுந்தூரப்பயணிகளையும் ஏற்றிச் செல்கின்ற சிக்கல் நிலைமையினால் வருமான பற்றாக் குறையை எதிர் நோக்கும் மட்டக்களப்பு பேருந்து உரிமையாளர்களால் குத்தகை நிதிக்கட்டணத்தினைக் கூட மாதாந்தம் செலுத்த முடியாத நிலையொன்று காணப்படுகின்றது.
 
ஆகவே இது குறித்து பொருத்தமான தீர்வு ஒன்றினை பற்றி ஆராய வேண்டும் என கிழக்குமாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையினை நாம் வலியுறுத்துவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், தேசிய அமைப்பாளர் ப.தவேந்திரராஜா, பிரதித் தலைவர் க.யோகவேள் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் கலந்த கொண்டிருந்தத குறிப்பிடத்தக்கது.  
 
»»  (மேலும்)

8/15/2014

| |

கொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச் சோலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பொலிஸ் பொதுமக்கள் மோதல் தொடர்பில் இதுவரை மூன்று பெண்கள் உட்பட 13 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலு ள்ள காஞ்சிரங்குடா பணை அறுப்பான் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (12.08.2014) இரவு இடம்பெற்ற பொலிஸ் பொதுமக்கள் மோதல் சம்பவம் தொடர்பில் இந்த 13 பேரும் இதுவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(13.08.2014) புதன் கிழமை ஏழு பேரும் (14.08.2014) வியாழக்கிழமை ஆறு பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ள்ளனர்.
இதில் புதன் கிழமை பாலிப்போடி குணசீலன் மற்றும் தேவநாயகம் கோவிந்தர ¡சா மாணிக்கம் தவமலர், வேல்முருகு ஜெகரன், வேல்முருகு டிலக்ஜன், வேல்முருகு வல்லியம்மை, வேல்முருகு சுகர்சினி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் வேல்முருகு ஜெகரன் வேல்முருகு டிலக்ஜன், வேல்முருகு வல்லியம்மை, வேல்முருகு சுகர்சினி ஆகிய நான்கு பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
அதேபோன்று வியாழக்கிழமை சகாநாதன் ஜம்போகரன், தர்மலிங்கம் தங்கவடிவேல், சகாதேவன் ஜெய்கரன், வெள்ளத்தம்பி சதாசிவம் பாக்கியராசா யோகரசா உட்பட ஆறு பேர் சந்தேகத்தின் பெரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் புதன் கிழமை கைது செய்த சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர்ப டுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரி வித்தனர். கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா பணை அறுப்பான் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (12.08.2014) இரவு கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக கூறப்படும் வீடொ ன்றை பொலிஸார் சோதனையிட சென்ற போது அங்கு பொலிஸ் பொதுமக்கள் மோதல் ஏற்பட்டதால் ஏழு பொலிஸார் உட்பட 11 பேர் காயமடைந்தமை குறிப் பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விடுதலை

யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விடுதலை

பருத்தித்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றங்களால் விடுவிப்பு
யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 74 பேரையும் பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்கள் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளன.
இந்திய இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த 74 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் பருத்தித்துறை மற்றும் எழுவை தீவு கடற்பரப்பிற்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர்.
அதன்போது, காங்கேசன்துறை கடற்படையினர் குறித்த மீனவர்களை கைதுசெய்து யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் குறித்த மீனவர்களை பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, மேற்படி மீனவர்கள் எதிர்வரும் 25ம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக மேற்படி வழக்கு நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்துறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கடந்த மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 51 மீனவர்கள் மற்றும் கடந்த மாதம் 21 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 18 மீனவர்கள் உட்பட நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய 5 மீனவர்கள் உட்பட 74 பேரையும் பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதவான் எச்.குமாரசாமி மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின் - குமார் ஆகியோர் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
»»  (மேலும்)

8/14/2014

| |

புரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்

கியூபாவின் பொதுவுடமைப் புரட்சியாளரும், அரசியல்வாதியுமான பிடெல் காஸ்ட்ரோவின் 88ஆவது பிறந்ததினம் இன்றாகும்.
 
கியூபாவின் பிரான் அருகிலுள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில், 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் திகதி பிடெல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.
 
இயற்கையாகவே ஏழைகள் மீது அன்பு கொண்டிருந்த பிடெல், தனது பெற்றோரின் திருமணத்தினை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றார்.
 
 
 
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, தனது உயர் கல்வியை நிறைவுசெய்த பிடெல் காஸ்ரோ முதன்முறையாக கம்யூனிசம் பற்றி கேள்வியுற்ற போதிலும், அது தொடர்பில் அறிந்திராமையினால் அந்த வார்த்தையை அறவே மறந்து போயிருந்தார்.
 
1945ஆம் ஆண்டளவில் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற காலத்தில், காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாக பரிமாணம் பெற்றார்.
 
கல்லூரிக் காலத்தில் அரசியலில் ஈர்க்கப்பட்ட காஸ்ட்ரோ, கம்யூனிச கட்சிகளில் சேர்ந்து, போராட்டங்கள் நடத்தி, தனது பேச்சுத் திறமையால் மக்களைப் பெரிதும் கவர்ந்தார்.
 
 
 
1953ஆம் ஆண்டு பாடிஸ்டர் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சித் தாக்குதல் செய்ய எத்தணித்த பிடெல் காஸ்ட்ரோ, அதில் தோல்வியுற்று, கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
 
அதன்பின் மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோ கெரில்லாத் தாக்குதல்களை கற்றுத்தேர்ந்ததுடன், தேச எல்லை கடந்த மனிதநேயப் போராளியான சேகுவேராவின் அறிமுகத்தையும் பெற்றார்.
 
காஸ்ட்ரோவும், சேகுவேராவும், தோழர்களுடன் இணைந்து முன்னெடுத்த புரட்சியின் பலனாக, கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசலிச குடியரசு நிறுவப்பட்டது.
 
 
 
காஸ்ட்ரோ வசமிருந்த கியூபாவை அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
 
காஸ்ட்ரோவை கொல்வதற்கு அமெரிக்கா தீட்டிய 638 திட்டங்களும் கானல் நீராகின.
 
உலக வரைபடத்தில் கியூபாவை கோடிட்டு காட்டுவதற்கு காஸ்ட்ரோ எடுத்த முயற்சிகள், அவரை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றதுடன், சிறந்த மனிதராக அவரை பறைசாற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.
 
1976ஆண்டு முதல் கியூப ஜனாதிபதியாக இருந்த பிடெல் காஸட்ரோ முதுமை காரணமாக 2008 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து விலகி, ராஹுல் காஸ்ட்ரோவிடம் பொறுப்புக்களை கையளித்து, தாம் சிறந்த தலைவன் என்பதை மீண்டும் நிலைநிறுத்தினார்.
 
அதனையடுத்து, 2011ஆம் ஆண்டு கம்யூனிச கட்சி மற்றும் அதன் செயற்பாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பிடெல் காஸ்ட்ரோ, புயலுக்குப் பின் அமைதி என்பதற்கிணங்க தனது இறுதிகாலத்தினை ஓய்வாகவும், அமைதியாகவும் இனிதே கழித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
»»  (மேலும்)